நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவுற்ற நிலையில், இன்று ப்ளே ஆப் சுற்றுக்கு தொடங்கப்பட இருக்கின்றன. இதன்பேரில், புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்த அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் மோதவிருக்கின்றன. நடப்பு தொடரில் சென்னை அணிக்கு எதிரான லீக் ஆட்டங்களிலும் மும்பை அணி வெற்றி பெற்றிருந்ததால் சற்று கூடுதல் நம்பிக்கையுடன் இன்றைய போட்டியில் களமிறங்க காத்திருக்கிறது, மும்பை இந்தியன்ஸ். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் சரிசம வெற்றிகளை கொண்டிருந்தாலும் நிகர ரன் ரேட் அடிப்படையில் மும்பை அணி புள்ளிப் பட்டியலில் முதலாம் இடத்திற்கு முன்னேறியது.
எனவே, இதற்கு முன்னர் ஏற்பட்ட இரு தோல்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் சென்னை அணி தனது சொந்த மைதானத்தில் கூடுதல் பலத்துடன் வெற்றியைப் பெறும் முனைப்பில் உள்ளது. இது மட்டுமல்லாது, இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் முதல் அணியாகவும் சென்னை அணி விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்:
ஐபிஎல் போட்டிகளில் இதுவரை இவ்விரு அணிகளும் 28 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. அவற்றில், மும்பை இந்தியன்ஸ் 16 வெற்றிகளும் சென்னை சூப்பர் கிங்ஸ் 12 வெற்றிகளையும் குவித்துள்ளன. நடப்பு தொடரில் நடைபெற்ற லீக் ஆட்டங்களில் முறையே 37 மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை தோற்கடித்து இருந்தது, மும்பை இந்தியன்ஸ்.
முக்கிய வீரர்கள்:
இம்ரான் தாகிர் - சென்னை சூப்பர் கிங்ஸ்:
நடப்பு ஐபிஎல் தொடரில் 21 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடரின் அதிக விக்கெட்டை கைப்பற்றிய சுழற்பந்துவீச்சாளர் என்ற சிறப்பை பெற்றுள்ளார், இம்ரான் தாஹிர். எனவே, இன்றைய போட்டியில் இவரின் ஆதிக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹர்திக் பாண்டியா - மும்பை இந்தியன்ஸ்:
2019 ஐபிஎல் தொடரில் பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரரான ஹர்திக் பாண்டியா 373 ரன்களையும் 14 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். எனவே, இவரின் ஆட்டம் சென்னை அணியின் வெற்றியை பறிக்கும்.
ஆடும் லெவன்:
சென்னை சூப்பர் கிங்ஸ்:
வாட்சன், டுபிளிசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, முரளி விஜய், மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, பிராவோ, தீபக் சாகர், ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர்.
மும்பை இந்தியன்ஸ்:
குயின்டன் டி காக், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா, கீரன் பொல்லார்டு, ராகுல் சாகர், மெக்கலனகன், லசித் மலிங்கா மற்றும் பும்ரா.