நாளை நடைபெறப்போகும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது, சென்னை சூப்பர் கிங்ஸ். கடந்த இரு ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியுள்ளது, சென்னை அணி. இதற்கு எதிர்மாறாக, கடந்த இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத். பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வரும் சென்னை அணியில் பலவீனம் என்று கூறினால் அது பேட்டிங் தான்.அதுவும், தொடக்க பேட்டிங் வரிசை மிகவும் கவலைக்கிடமாக அமைந்து வருகிறது. இதனை நாம் நடப்பு ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளிலும் பார்த்து வருகிறோம். தூங்கிக் கொண்டிருக்கும் சென்னை அணியின் பேட்டிங் நாளை முதலாவது விழித்துக்கொள்ளுமா என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி ஒருவர் மட்டுமே சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
பரபரப்பான நாளைய ஆட்டத்தில் சென்னை அணி மேற்கொள்ளவுள்ள இரு மாற்றங்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.வாட்சனுக்கு பதிலாக பில்லிங்ஸ்:
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக ரன்களைக் குவித்து இறுதி ஆட்டத்தில் சதமும் அடித்து சென்னை அணி மூன்றாவது முறையாக கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தவர் வாட்சன். ஆனால், நடப்பு தொடரில் தனது மோசமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருகிறார். மேலும், அணியின் தொடக்க பேட்டிங் இதுவரை சரிவர அமையவில்லை. இதனை மாற்றிடும் வகையில், இவருக்கு பதிலாக இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் அணியில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹைதராபாத் அணிக்கு எதிரான கடந்த லீக் ஆட்டத்தில் இடம்பெற்றிருந்த பில்லிங்ஸ், ரன்கள் எதுவும் குவிக்காமல் ஆட்டம் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை களைந்து தனது கடந்த ஆண்டு திறமையை வெளிப்படுத்தும் வகையில், மேலும் ஒரு வாய்ப்பு இவருக்கு வழங்கப்படும்.
#2.தாகூருக்கு பதிலாக ஹர்பஜன்:
பேட்டிங்கில் செய்த மாற்றத்தை போலவே பௌலிங்கிலும் ஒரு மாற்றம் நிகழ வேண்டும். அது அணிக்கு கூடுதல் பலமளிக்கும். இந்த நடப்பு தொடரில் தனது சாதாரணமான பார்மை வெளிப்படுத்தி வரும் வேகப்பந்துவீச்சாளர் தாகூருக்கு பதிலாக சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் இடம் பெற வேண்டும் என்பது ரசிகர்களின் பலரது கோரிக்கையாகும். மேலும், நாளைய போட்டி சென்னையில் நடைபெறுவதால் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கும். இதனால், இம்ரான் தாஹிர், ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன் இணைந்து மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக ஹர்பஜன் சிங் களமிறக்கப்படலாம்.
கடந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணியிடம் அடைந்த தோல்விக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறுமா என்பதை சற்று பொறுத்திருந்து பார்ப்போம்.