2019 இந்தியன் பிரிமியர் தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிய இருக்கின்றது. 56 லீக் ஆட்டங்களின் முடிவில், புள்ளி பட்டியலில் 4 இடங்களை பிடித்த அணிகளான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் தகுதி பெற்றன. அதன்படி, நடைபெற்ற முதலாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது, மும்பை இந்தியன்ஸ். நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணி நேற்றைய போட்டியோடு தொடரில் இருந்து வெளியேறியது. டெல்லி மற்றும் சென்னை அணிகள் மோதும் இரண்டாவது தகுதிச்சுற்று நாளை நடைபெற இருக்கின்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி மும்பை அணியுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் விளையாடும்.
எனவே, லீக் போட்டிகளில் 14 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி பெற்று புள்ளி போட்டியில் முதலிடம் பிடித்த மும்பை அணிக்கு இறுதிப் போட்டியில் கோப்பையை வெல்ல உதவும் மூன்று முக்கிய வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.ஹர்திக் பாண்டியா:
இதுவரை விளையாடியுள்ள 15 போட்டிகளில் 386 ரன்களை 14 விக்கெட்களையும் கைப்பற்றி தொடரின் அசைக்க முடியாத வீரராக திகழ்ந்து வருகிறார். மேலும், கொல்கத்தா வீரர் ரசலுடன் தொடரின் மிக மதிப்பு மிக்க வீரரருக்கான பட்டியலில் தொடர்ந்து நீடித்து வருகிறார். கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் போட்டியில் 34 பந்துகளில் 21 ரன்கள் குவித்ததே இவரது சிறந்த ஆட்டமாக இந்த தொடரில் அமைந்துள்ளது. மேலும் பந்துவீச்சில், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார். இதுவே நடப்பு தொடரில் இவரது சிறந்த பந்துவீச்சாக அமைந்துள்ளது.
#2.ஜஸ்பிரிட் பும்ரா:
ஒருநாள் போட்டிகளில் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக திகழும் பும்ரா, நடப்பு தொடரில் இது கட்ட ஒவர்களை சிறப்பாக வீசி வருகிறார். இதுவரை 15 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஹைதராபாத் அணிக்கு எதிரான சூப்பர் ஓவரில் சிறப்பாக பந்து வீசி அணியை வெற்றி பெறச் செய்தார். மேலும், இறுதிப் போட்டியில் மும்பை அணியின் முக்கிய துருப்பு சீட்டாக இவர் விளங்குவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
#3.குயின்டன் டி காக்:
தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பரான பென்டன் குயின்டன் டி காக், மும்பை அணியில் தற்போது விளையாடி வருகிறார். 15 போட்டிகளில் விளையாடி 500 ரன்களுக்கு மேல் இவர் கடந்துள்ளார். மேலும், தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளார். நடப்பு தொடரில் நான்கு அரை சதங்கள் அடித்துள்ளார். எனவே, இறுதிப்போட்டியில் இவரின் ஆட்டம் மும்பை அணிக்கு பக்கபலமாக அமையும்.