பன்னிரெண்டாவது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இன்று ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. மும்முறை ஐபிஎல் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நான்காவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் கலமிறங்க உள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய மூன்று போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிகளை பெற்றுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது, மும்பை இந்தியன்ஸ். இரண்டாவது தகுதி சுற்றில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள சென்னை அணி நடப்பு தொடரில் சந்தித்த மூன்று தோல்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மும்பை அணியை வீழ்த்தி நான்காவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்க உள்ளது. எனவே, பரபரப்பான இந்த இறுதிப் போட்டியில் கவனிக்கத்தக்க மூன்று சிறந்த விஷயங்களை இத் தொகுப்பில் காணலாம்.
#1.தொடர்ச்சியான சாதனைகளை படைத்து வரும் மும்பை அணியின் வீறுநடை முற்றுப்புள்ளி வைக்குமா சென்னை அணி?
நடப்பு ஐபிஎல் தொடரில் நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது, மும்பை அணி. இதுவரை நேருக்கு நேர் மோதிய போட்டிகளில் 16 வெற்றிகளை மும்பை அணியும் 11 வெற்றிகளை சென்னை அணியும் கொண்டுள்ளன. இவ்விரு அணிகளும் மூன்று முறை ஐபிஎல் இறுதிப்போட்டிகளில் சந்தித்து உள்ளன. அவற்றில், மும்பை அணி இரு முறையும் சென்னை அணி ஒரு முறையும் சாம்பியன் பட்டங்களை வென்று உள்ளன. நடப்பு சீசனில் 16 நாட்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 முறை வென்றுள்ளது. எனவே, அதிர்ஷ்டம் உள்ள தோனி இன்றைய போட்டியில் தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி, நான்காவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்ல உதவுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#2.இம்ரான் தாஹிரின் 4 ஓவர்கள் சென்னை அணியின் துருப்புச்சீட்டாக விளங்கும்:
40 வயதை கடந்த போதிலும் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர், நடப்பு தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். இவரது அற்புதமான சுழற்பந்து தாக்குதல்களால் எதிரணி வீரர்கள் தங்களது விக்கெட்களை இழந்த வண்ணம் உள்ளனர். இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் 24 விக்கெட்களை 6.61என்ற எக்கானமியுடன் அணியுடன் கைப்பற்றியுள்ளார். எதிரணியின் முக்கிய விக்கெட்களை கைப்பற்றும் பந்துவீச்சாளரான இவர், சென்னை அணியின் மிகப்பெரிய சொத்தாக விளங்கி வருகிறார். இது மட்டுமல்லாமல், ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றும் போதும் இவரின் கொண்டாட்ட செயல்பாடுகள் ரசிகர்களிடையே வெகு விமரிசையாக பாராட்டப்பட்டு வருகின்றது. எனவே, கடந்த போட்டிகளை போல இன்றைய போட்டியிலும் இவரின் தாக்கம் மும்பை அணியின் பேட்டிங் சீர்குலைக்கும் என எதிர்பார்க்கலாம்.
#3.அபாயகரமான ஹர்திக் பாண்டியா:
நடப்பு ஐபிஎல் சீசனில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார். கொல்கத்தா வீரர் ஆந்திரே ரசலுக்கு அடுத்தபடியாக தொடரின் அபாயகரமான பேட்ஸ்மேனாக ஹர்திக் பாண்டியா திகழ்கிறார். இவரின் தொடர்ச்சியான பங்களிப்பினால் மும்பை அணியின் வெற்றி பல ஆட்டங்களில் உறுதியாகியுள்ளது. இவரது அரக்கத்தனமான சிக்ஸர்கள் எதிரணியினரை அச்சுறுத்தி வருகின்றது. பவுலிங்கிலும் இவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நடப்பு தொடரில் 386 ரன்கள் 193 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் குவித்துள்ளார். நெருக்கடி நிலைகளை திறம்பட சமாளித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் இவர், இன்றைய போட்டியில் மும்பை அணியின் முக்கிய துருப்பு சீட்டாக விளங்குவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.