2019 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளுக்கிடையே கடும் போட்டி உருவாகியுள்ளது. ஐபிஎல் 2019 தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர் தோல்விகள் காரணமாக பின் தங்கியுள்ளது. ஐபிஎல் 2019 தொடக்கத்தில் இருந்து, கொல்கத்தா அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் ரஸ்செல் மட்டுமே. அவர் தனது அதிரடி ஆட்டத்தினால் கொல்கத்தா அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார். கொல்கத்தா அணியின் தொடக்க வீரரான க்ரிஷ் லின்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவர் இதுவரை 264 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 3 அரைசதங்கள் அடங்கும். தனது அதிரடி ஆட்டத்தினால் தனியாளாக கொல்கத்தா அணிக்கு வெற்றிகளை தேடித்தந்த ரஸ்ஸல் இதுவரை 372 ரன்கள் எடுத்துள்ளார். கடைசி ஐந்து போட்டிகளிலும் தோல்வியைக் கண்ட கொல்கத்தா அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் குறித்து இனி காண்போம்.
#1. மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் கொல்கத்தா அணி வென்றால்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தற்பொழுது புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளிலும், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிராக தலா ஒரு போட்டியிலும் விளையாட உள்ளது, கொல்கத்தா அணி. ஆதலால், மும்பை இந்தியன்ஸ் அணியை தொடரில் இருந்து வெளியேற்றினால், ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற கொல்கத்தா அணிக்கு வாய்ப்பு கிடைக்கும். எனவே, பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்ய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
#2. நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றால்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மீதமுள்ள நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றால் 14 புள்ளிகள் பெறும். சென்னை மற்றும் டெல்லி அணிகள் தங்களது பிளே ஆப் வாய்ப்பை ஏறத்தாழ உறுதி செய்துவிட்டது. மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும், கொல்கத்தா அணி . அவ்வாறு வெற்றி பெற்று, மும்பை இந்தியன்ஸ் அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் தோல்வியுற்றால் மும்பை அணி 14 புள்ளிகள் பெறும். இவ்வாறு நிகழ்ந்தால் ரன் ரேட் அடிப்படையில் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தேர்வு செய்யப்படும். ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் அணி மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் தோல்வியுற்றால், கொல்கத்தா அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு சுலபமாகி விடும்.
கொல்கத்தா அணிக்கு மற்றொரு வாய்ப்பாக பஞ்சாப் அணி இன்று நடக்கவிருக்கும் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்து, கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் நேரடியாக மோதும் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்தால், அது கொல்கத்தா அணி ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல சாதகமாக அமையும்.
மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை சார்ந்து இருக்காமல், ப்ளே ஆப் சுற்றுக்கு சுலபமாக செல்ல, கொல்கத்தா அணி மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.