ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதும் 2019 ஐபிஎல் தொடரின் 14வது போட்டி ஏப்ரல் 2 அன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இவ்வருட ஐபிஎல் தொடரில் விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டிகளில் கூட இவ்விரு அணிகளும் வெற்றி பெறவில்லை. எனவே இரு அணிகளில் ஏதேனும் ஒரு அணி தங்களது முதல் வெற்றியை இப்போட்டியில் பதிவு செய்யும்.
ஒட்டுமொத்த நேருக்கு நேர்: இதுவரை இரு அணிகளும் 17 ஐபிஎல் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் அணி 9 முறை வெற்றி பெற்றுள்ளது. 2018 ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணி பெங்களூரு அணிக்கு எதிரான இரு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சவாய் மான் சிங் மைதானத்தில் நேருக்கு நேர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை 6 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இந்த மைதானத்தில் மோதியுள்ளது. இதில் இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
பெங்களூரு அணி 2019 ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில் பங்கேற்று மூன்றிலும் தோல்வியை தழுவியுள்ளது. மோசமான ஆட்டத்திறனால் தடுமாறி வரும் பெங்களூரு அணி ஹைதராபாத் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 118 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், பார்தீவ் படேல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங்கை பொறுத்த வரை பார்தீவ் படேல், ஏபி டிவில்லியர்ஸ், கேப்டன் விராட் கோலி ஆகியோரையே பெரிதும் நம்பியுள்ளது. பெரும்பாலும் இந்த அணியில் இவர்களது பேட்டிங் பங்களிப்பே அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த போட்டியில் இவர்களது ஆட்டத்திறனும் மோசமாகவே இருந்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இவர்களது பேட்டிங் அதிரடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியின் நிர்வாகம் ஷிம்ரன் ஹெட்மயர், காலின் டி கிரான்ட் ஹோம், மொய்ன் அலி ஆகியோரின் பேட்டிங்கையும் எதிர்பார்க்கிறது.
பௌலிங்
நட்சத்திர வீரர்கள்: யுஜ்வேந்திர சகால், உமேஷ் யாதவ், மொய்ன் அலி
பெங்களூரு அணியின் பௌலிங்கில் யுஜ்வேந்திர சகாலின் பௌலிங் மட்டுமே இந்த சீசனில் சிறப்பாக உள்ளது. ரிஸ்ட் ஸ்பின்னரான இவர் 3 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் முன்னணி நட்சத்திர வீரராக உள்ளார். அனுபவ வீரர் மொய்ன் அலி மிடில் ஓவரில் சகாலுடன் சேர்ந்து சுழற்பந்து வீச்சை மேற்கொள்கிறார். வேகப் பந்து வீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் தங்களது இயல்பான ஆட்டத்தை ராஜஸ்தான் அணிக்கு எதிராக வெளிப்படுத்தி தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச XI: பார்தீவ் படேல் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி (கேப்டன்), மொய்ன் அலி, ஏபி டிவில்லியர்ஸ், ஷிம்ரன் ஹெட்மயர், சிவம் தூபே, காலின் டி கிரான்ட் ஹாம்/ டிம் சௌதி/ நாதன் குல்டர் நில், பிரயாஸ் பார்மன், யுஜ்வேந்திர சகால், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்/ வாஷிங்டன் சுந்தர்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் அணி வலிமையாக இருந்தாலும் இதுவரை சிறப்பாக விளையாடிய போதும் 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது ராஜஸ்தான் அணி. எனவே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை இந்த சீசனில் பதிவு செய்யும் என தெரிகிறது.
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன், அஜின்க்யா ரகானே
ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கில் மிகுந்த வலிமையான அணியாக திகழ்கிறது. ஜாஸ் பட்லர், அஜின்க்யா ரகானே, சஞ்சு சாம்சன், ஸ்டிவன் ஸ்மித் ஆகியோர் டாப் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். ஜாஸ் பட்லர் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து அணியின் வெற்றியை தீர்மானிக்கிறார்.
சஞ்சு சாம்சன் ஹைதராபாதிற்கு எதிரான போட்டியில் 102 ரன்களை விளாசித் தள்ளினார். எனவே இதே ஆட்டத்திறனை பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் அணியில் டாப் ஆர்டர் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மிடில் ஆர்டரில் ஸ்மித் மற்றும் பென் ஸ்டோக்ஸ் அணியின் ரன்களை உயர்த்துகின்றனர்.
பௌலிங்
நட்சத்திர வீரர்கள்: ஜோஃப்ரா ஆர்சர், ஸ்ரேயஸ் கோபால், தவால் குல்கர்னி
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஆர்ச்சர் 4 ஓவர்களை வீசி 17 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஐபிஎல் தொடரில் வலிமையான அணியாக திகழும் தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகுந்த அழுத்தத்தை தனது பௌலிங்கில் அளித்தார் ஆர்ச்சர். ஆனால் ஜெய்தேவ் உனட்கட் மோசமான பந்துவீச்சை மேற்கொண்டு சென்னை அணி பக்கம் ஆட்டத்தை மாற்றி விட்டார்.
ஸ்ரேயஸ் கோபால் 3 போட்டிகளில் பங்கேற்று 6.87 எகானமி ரேட்-டுடன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். லெக் ஸ்பின்னரான இவர் மிடில் ஓவரில் எதிணியின் ரன் ரேட்டை தனது பந்துவீச்சில் கட்டுபடுத்துகிறார்.
உத்தேச XI: அஜின்க்யா ரகானே (கேப்டன்), ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், ஸ்டிவன் ஸ்மித், ராகுல் திர்பாதி, பென் ஸ்டோக்ஸ், தவால் குல்கர்னி, ஜோஃப்ரா ஆர்சர், ஸ்ரேயஸ் கோபால்,கிருஷ்னப்பா கௌதம், வரூன் ஆரோன்.