ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஈடன் கார்டன் மைதானத்தில் 2019 ஐபிஎல் தொடரின் 35வது போட்டியில் இன்று மோத உள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிகளை குவித்தால் அரையிறுதிக்கு தகுதி பெற சிறிது வாய்ப்பு உள்ளது
ஒட்டுமொத்த நேருக்கு நேர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 24 முறை நேருக்கு நேர் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஈடன் கார்டன் மைதானத்தில் நேருக்கு நேர்: இந்த மைதானத்தில் இரு அணிகளும் 9 ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளன. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன
2019 ஐபிஎல் தொடரில் முதல் நேருக்கு நேர்: இவ்வருட ஐபிஎல் தொடரின் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய முதல் லீக் போட்டியில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோலியின் 84ன் மூலம், 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களை குவித்தனர். பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியில் ஆன்ரிவ் ரஸலின் ருத்ர தாண்டவத்தால் கொல்கத்தா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் ( 7 விக்கெட்டுகள் & 5 விக்கெட்டுகள்), டெல்லி கேபிடல்ஸ் (7 விக்கெட்டுகள்) ஆகிய அணிகளுக்கு இடையிலான கடைசி 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இதில் கடைசி 2 போட்டிகளில் கொல்கத்தா சொந்த மண்ணிலேயே தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: ஆன்ரிவ் ரஸல், கிறிஸ் லின், நிதிஷ் ராணா
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆன்ரிவ் ரஸல் (312 ரன்கள்) அதிரடியில் எந்த சந்தேகமும் இல்லை. இரு அணிகளுக்கு இடையிலான இந்த சீசனின் முதல் லீக் போட்டியில் 13 பந்துகளில் 48 ரன்களை குவித்து கொல்கத்தா அணியின் வெற்றியை உறுதி செய்தார். எனவே பெங்களூரு அணிக்கு இந்த போட்டியிலும் ரஸல் கடும் நெருக்கடியை அளிப்பார். கிறிஸ் லின் (212 ரன்கள்), ராபின் உத்தப்பா (211 ரன்கள்), நிதிஷ் ராணா ஆகியோர் தொடர்ந்து சீரான ஆட்டத்தை இந்த ஐபிஎல் சீசனில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
பௌலிங்
நட்சத்திர வீரர்கள்: ஆன்ரிவ் ரஸல், ப்யுஸ் சாவ்லா, குல்தீப் யாதவ்
ஆன்ரிவ் ரஸல் மற்றும் ப்யுஸ் சாவ்லா இந்த சீசனில் தலா 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். சுனில் நரைன் 6 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே இவர்கள் மூவரும் கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் துருப்பு சீட்டாக பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் திகழ்வார்கள். குல்தீப் யாதவ் தொடர்ந்து சொதப்பி வருவது கொல்கத்தா அணிக்கு பெரும் பின்னடைவை அளிக்கிறது. இருப்பினும் இனிவரும் போட்டிகளிலாவது அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவார் என நம்பப்படுகிறது.
உத்தேச XI: சுனில் நரைன், கிறிஸ் லின், நிதிஷ் ராணா, ராபி உத்தப்பா, தினேஷ் கார்த்திக் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், ஆன்ரில் ரஸல், குல்தீப் யாதவ், ப்யுஸ் சாவ்லா, ஹாரி குர்னே, பிரஸித் கிருஷ்ணா.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த போட்டியிலிருந்து இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெறும். ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட பிளே சுற்றிற்கு பெங்களூரு அணி தகுதி பெற இயலாது. எனவே அந்த அணி வீரர்கள் தங்களது முழு ஆட்டத்திறனை இனிவரும் போட்டிகளில் வெளிக்கொண்டு வருவார்கள் என தெரிகிறது.
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: பார்தீவ் படேல், விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ்
ஏபி டிவில்லியர்ஸ் (307ரன்கள்), விராட் கோலி (278 ரன்கள்), பார்தீவ் படேல் (215 ரன்கள்) ஆகியோர் பெங்களூரு அணியின் தூண்களாக இந்த ஐபிஎல் சீசனில் திகழ்கின்றனர். இவர்களையே இந்த அணி பேட்டிங்கில் முழுவதும் நம்பியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் மொய்ன் அலி சிறப்பான அரைசதத்தை விளாசியது பெங்களூரு அணிக்கு பேட்டிங்கில் புது நம்பிக்கையை அளித்துள்ளது.
பௌலிங்
நட்சத்திர வீரர்கள்: யுஜ்வேந்திர சகால், டேல் ஸ்டெய்ன், முகமது சிராஜ்
யுஜ்வேந்திர சகால் (13 விக்கெட்டுகள்) மற்றும் முகமது சிராஜ் (7 விக்கெட்டுகள்) ஆகியோர் பெங்களூரு அணியில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு வருகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் மொய்ன் அலி 4 ஓவர்களை வீசி 18 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது பெங்களூரு அணிக்கு கூடுதல் பலமாகும். டேல் ஸ்டெய்ன் பெங்களூரு அணியில் இனைந்துள்ளது தடுமாறி வரும் பெங்களூரு அணிக்கு மிகுந்த பலம் சேர்த்துள்ளது.
உத்தேச XI: பார்தீவ் படேல் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ், மொய்ன் அலி, அக்ஸிப் நாத், மார்கஸ் ஸ்டாய்னிஸ், பவான் நெகி, யுஜ்வேந்திர சகால், நவ்தீப் சைனி, டேல் ஸ்டெய்ன், முகமது சிராஜ்.