2019 ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்குள் எந்தெந்த அணிகள் இடம் பெறப்போகின்றன என்பதை பற்றிய ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே அடுத்த சுற்றை உறுதி செய்துள்ளது. மீதமுள்ள அணிகளில் யார் யார் பிளே ஆப் சுற்றுக்குள் அடியெடுத்து வைக்க போகின்றனர் என்பது இனி வரும் லீக் ஆட்டங்களில் முடிவில் தெரியும். டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகள் சென்னை அணிக்கு அடுத்தபடியாக ஏறக்குறைய தங்களது அடுத்த சுற்று வாய்ப்பினை உறுதி செய்துள்ளன. அவ்வாறு, இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் 46 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் மோத உள்ளன.
இளம் படையைக் கொண்டு வீறு நடை போடும் டெல்லி அணி தங்களது சொந்த மைதானத்தில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வருகிறது. தொடர்ச்சியாக மூன்று போட்டிகளை வென்றதன் மூலம் பெங்களூர் அணிக்கு புது தெம்பு கிடைத்துள்ளது. எனினும், காயம் காரணமாக விலகியுள்ள ஸ்டெயின் மற்றும் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ள மொயின் அலி ஆகியோர் இல்லாமல் பெங்களூர் அணி களமிறங்க இருக்கிறது. டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்று தொடர்ந்து ப்ளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.
டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தால்?
டெல்லி அணியின் பேட்டிங்கில் வெளிநாட்டு வீரர்கள் அல்லாமல் இந்திய வீரர்களே அதிகப்படியான ரன்களை குவித்து வருகின்றனர். ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இந்த நடப்பு தொடரில் தலா 300க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளனர். இவர்களின் பேட்டிங்கை பொறுத்துதான் அணியின் வெற்றி பெரிதளவும் தீர்மானிக்கப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் ரிஷப் பண்ட் அதிரடியாக 78 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். நல்ல தொடக்கம் காணும் இளம் வீரர் பிருத்திவி ஷா, அதனை பெரிய ஸ்கோராக மாற்றுவதில் தடுமாறி வருகிறார். இருப்பினும், அனைத்து வீரர்களும் நிலைத்து நின்றால் டெல்லி அணி குறைந்தது 170 ரன்களை கடக்கும். இதுமட்டுமல்லாது, இறுதிகட்ட நேரங்களில் களமிறங்கும் அக்ஷர் பட்டேல் மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகியோர் தங்களது பங்களிப்பினை அளித்தால் அணியின் ஸ்கோர் 200க்கு மேல் தாண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தால்?
பார்த்தீவ் பட்டேல், விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய முன்னணி பேட்ஸ்மேன்கள் அணியின் பேட்டிங்கில் தொடர்ந்து அதிக ரன்களை குவித்து வருகின்றனர். இருப்பினும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான மொயின் அலியின் இடத்தை யார் நிரப்ப போகிறார் என்பதில் சற்று குழப்பம் நீடித்து வருகிறது. டெல்லி அணியை போலவே பெங்களூர் அணியும் அதிரடியாக ரன்களைக் குவிக்கும் திறன் படைத்த அணியாகும் இந்த அணியும் சர்வசாதாரணமாக 20 ஓவர்களின் முடிவில் 170 ரன்களை கடக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
யார் வெற்றி பெறப் போகிறார்கள்?
ஏறக்குறைய தங்களது ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்ட டெல்லி அணி, இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பெறும் முனைப்பில் உள்ளது. பெங்களூர் அணி தொடர்ந்து 4-வது முறையாக வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பில் இன்னும் நீடிக்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.