நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் களத்தில் மோதவிருக்கின்றன. இரு அணிகளும் நடப்பு தொடரில் தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மட்டுமல்லாது, கடும் விமர்சனத்திற்கும் உள்ளானது. ஞாயிற்றுக்கிழமை நடந்த டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி தோல்வியுற்று பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறியது. இந்த அணி பேட்டிங்கில் விராட் கோலி மற்றும் டிவிலியர்ஸ் ஆகியோரை மட்டுமே பெரிதளவும் நம்பியுள்ளது. இருப்பினும், பவுலிங்கிலும் எந்த ஒரு முன்னேற்றமும் இதுவரை அடையவில்லை. திடீரென அணிக்கு நம்பிக்கையை அளிக்கும் வகையில் பந்துவீசிய டேல் ஸ்டெயின் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார்.
ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு தொடரில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தகுந்த அளவில் இதுவரை சோபிக்கவில்லை. ஏற்கனவே, உலக கோப்பை தொடரின் முன்னேற்பாடுகளால் இங்கிலாந்து அணியின் வீரர்களான ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் மற்றும் சோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் நாடு திரும்பியுள்ளனர். வருண் ஆரோன் மற்றும் ஓசேன் தாமஸ் ஆகியோர் அணிக்கு நம்பிக்கையை அளிக்கும் வகையில் ஃபார்முக்கு திரும்பியுள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முக்கிய வீரர்கள்:
விராட் கோலி - மீண்டும் ஒருமுறை விராட் கோலி அணியின் முக்கிய துருப்பு சீட்டாக விளங்கி வருகிறார். நடப்பு தொடரில் ஒரு சதத்தையும் விளாசி ஃபார்மில் தொடர்ந்து வருகிறார்.
யுஸ்வேந்திர சாஹல் - 2019 ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் விளையாடி 16 விக்கெட் கைப்பற்றி உள்ளார், சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல். மேலும், இவரது பவுலிங் எக்கனாமி 8க்கு மிகாமல் உள்ளது. மிடில் ஓவர்களில் அற்புதமாக பந்து வீசி எதிரணி வீரர்களை கலங்கடித்து வருகிறார் இவர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய வீரர்கள்:
ஸ்டீவன் ஸ்மித் - தொடரின் பிற்பாதியில் ஸ்டீவன் ஸ்மித்திற்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது. நடப்பு தொடரில் இவரின் பேட்டிங் சராசரி 44.3 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 150 என்ற அளவில் உள்ளது. மேலும், இன்றைய போட்டி தான் இவருக்கு நடப்பு தொடரில் இறுதிப் போட்டி ஆகும். இதற்குப் பின்னர், ஆஸ்திரேலியாவுக்கு இவர் திரும்ப உள்ளார்.
ஸ்ரேயாஸ் கோபால் - 12-வது ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணிக்கு முக்கிய துருப்பு சீட்டாக விளங்கிவருகிறார், சுழற்பந்துவீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால். இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளதால், கர்நாடகாவை சேர்ந்த இவர் தனது உள்ளூர் மைதானத்தில் சிறப்பாக பங்களிப்பார் என எதிர்பார்க்கலாம்.
இன்றைய போட்டியில் யார் வெல்வார்?
தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவ்விரு அணிகளும் புள்ளி பட்டியலில் கடைசி இரு இடங்களில் வகிக்கின்றன. பெங்களூர் அணிக்கு இது சொந்தமான மைதானம் என்பதால் அவர்களின் பங்களிப்பு சற்று கூடுதலாக இருக்கும். பின்னோக்கி செல்லும் ரன் ரேட்டை கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தங்களால் முடிந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.