மும்பை இந்தியன்ஸ் அணி வருகிற மார்ச் 28 அன்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் சந்திக்கவுள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ். அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனின் முதல் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது.
டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான முதல் போட்டியில் ஆடும் XI-ஐ சற்று வேறுபாட்டுடன் மும்பை இந்தியன்ஸ் தேர்வு செய்திருந்தனர். இஷான் கிசானிற்கு பதிலாக யுவராஜ் சிங்கை தேர்வு செய்யப்பட்டிருந்தார். யுவராஜ் சிங் தமக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி அரைசதம் விளாசினார். அத்துடன் மயன்க் மார்கண்டே-விற்கு பதிலாக 17வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் ராஸிக் சலாமை ஆடும் XI-ல் தேர்வு செய்திருந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் பௌலர்கள் மிகவும் மோசமாக சொதப்பினர். இவர்களது பந்துவீச்சை ரிஷப் பண்ட் தெறிக்கவிட்டார்.
விராட் கோலி-யின் தலைமையிலான பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொள்ளும்போது ஆடும் XI-ல் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக பௌலிங்கில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. டெத் ஓவரில் ஜாஸ்பிரிட் பூம்ரா-வுடன் மற்றொரு சிறந்த பந்துவீச்சாளரை தேர்வு செய்து வீச வைக்க வேண்டும் என்பது கிரிக்கெட் ஆர்வலர்களின் கருத்தாகும்.
இதனை கருத்தில் கொண்டு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச XI நாம் இங்கு காண்போம்.
#1 தொடக்க வரிசை வீரர்கள்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவின்டன் டிகாக் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். ரோகித் சர்மா முதல் போட்டியில் 14 ரன்களை மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழந்தார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா-வின் ஆட்டத்திறன் மிகவும் சிறப்பாக இருத்தல் வேண்டும்.
டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான போட்டியில் டிகாக் அதிரடி தொடக்கத்தை வெளிபடுத்தினார். ஆனால் வெகுநேரம் வெளிபடுத்த தவறி விட்டார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சிறந்த சர்வதேச தொடக்க ஆட்டக்காரர்களாக டிகாக் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை கொண்டு திகழ்கிறது. பெங்களூரு அணியுடனான போட்டியில் கண்டிப்பாக இவர்கள் இருவரும் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பர்-3 பேட்ஸ்மேன் சூர்ய குமார் யாதவ். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மூன்றாவது பேட்ஸ்மேனாக இவர் களமிறங்கினார். பெங்களூரு அணியுடனான போட்டியிலும் இதே வரிசையில் மீண்டும் களமிறக்கப்படுவார். டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான போட்டியில் இவர் ரன் அவுட் செய்யப்பட்டார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#2 நடுவரிசை வீரர்கள்

நம்பர்-4 பேட்ஸ்மேன் யுவராஜ்சிங். இவர் டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தனது பழைய ஆட்டத்தை ரசிகர்களுக்கு விருந்தளித்தார். இவர் இளம் வீரர் இஷான் கிசானிற்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டார். இஷான் கிசான் பெங்களூரு அணியுடனான போட்டியில் ஆடும் XI-ல் இடம்பெறுவாரா என்பது ரோகித் சர்மா-வின் எடுக்கும் முடிவிலே உள்ளது.
நம்பர்-5 வரிசையில் கிரன் பொல்லார்ட் களமிறக்கப்படுவார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் இவரது ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. அத்துடன் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு ஸ்ரேயஸ் ஐயரின் கேட்சை பிடித்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் பொல்லார்ட் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக உள்ளதால் பெங்களூரு அணியுடனான போட்டியில் இடம்பெறுவார்.
நம்பர்-6 வரிசையில் ஹர்திக் பாண்டியா களமிறங்குவார். டெல்லி அணியுடனான முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலுமே மோசமாக சொதப்பினார். 4 ஓவர்களை வீசி 41 ரன்களை தனது பௌலிங்கில் அளித்தார். அத்துடன் டக் அவுட் ஆனார். பெங்களுரு அணியுடனான கடந்த கால போட்டியில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டுள்ளதால் கண்டிப்பாக ஆடும் XI-ல் இடம்பெறுவார்.
நம்பர்-7ல் ஹர்திக் சகோதரர் க்ருநால் பாண்டியா களமிறங்குவார். டெல்லி அணியுடனான போட்டியில் 2 ஓவர்களை வீசி 21 ரன்களை தனது பௌலிங்கில் அளித்திருந்தார். போட்டிங்கில் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனவே பெங்களூரு அணியுடனான போட்டியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
#3 கடைநிலை வீரர்கள்

8வது வீரராக மயன்க் மார்கண்டே களமிறக்கப்படுவார். 2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் இவர் பங்கேற்கவில்லை. எனவே பெங்களூரு அணியுடனான இரண்டாவது போட்டியில் இவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். டெல்லி அணியுடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்கள் மிடில் ஓவரில் விக்கெட்டுகளை வீழ்த்த தடுமாறினர். இதற்கு தீர்வாக மயன்க் மார்கண்டே இருப்பார். ஒரு லெக் ஸ்பின்னரால் மட்டுமே எவ்வகையான போட்டிகளிலும் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். எனவே இதனை ரோகித் சர்மா கருத்தில் கொண்டு பெங்களூரு அணியுடனான போட்டியில் மயன்க் மார்கண்டே-வை களமிறக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
9வது வீரராக மிட்செல் மெக்லகன் களமிறங்குவார். டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான முதல் போட்டியில் மும்பை அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் டெத் ஓவரில் இவரது பௌலிங் சிறப்பானதாக இல்லை. பெங்களூரு அணியுடனான போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பர் 10வது வீரராக ஜஸ்பிரிட் பூம்ரா களமிறங்குவார். டெல்லி அணியுடனான போட்டி இவருக்கு சிறப்பானதாக இல்லை. டெத் ஓவரில் சிறப்பாக வீசும் திறமை படைத்துள்ள இவருக்கு, டெல்லி அணியுடனான போட்டியில் டெத் ஓவரும் சிறப்பானதாக இல்லை. அத்துடன் அவருக்கு அந்த போட்டியில் வலது தோள்பட்டையில் காயமும் ஏற்பட்டது. இருப்பினும் அவ்வளவாக பெரிய காயம் ஏற்படததால் பெங்களூரு அணியுடனான போட்டியில் களமிறங்குவார். இவருக்கு ஓய்வு தேவைப்பட்டால், தக்க ஓய்வை மும்பை அணி அளிக்க வேண்டும்.
11வது வீரராக லாசித் மலிங்கா களமிறங்குவார். டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங்கை விட பௌலிங் மிக மோசமாக இருந்தது. ஏனெனில் ரோகித் சர்மா 20 ஓவர்களுக்கு சரியான 5 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தவில்லை. தென்னாப்பிரிக்காவுடனான டி20 தொடர் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மலிங்கா பெங்களூரு அணியுடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரது அனுபவம் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.