2019 ஐபிஎல் தொடர் இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. தற்போது தொடரின் விறுவிறுப்பான கட்டம் எட்டியுள்ள நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் தகுதி பெற போகின்றனர் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றி வருகிறது. நேற்று முன்தினம் வரை எந்த ஒரு அணியும் இந்த பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத நிலையில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரின் முதல் அணியாக தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. இருப்பினும், மீதமுள்ள மூன்று இடங்களுக்கு எஞ்சியுள்ள ஏழு அணிகள் போட்டியிடுகின்றன.
அவ்வாறு, பிளே ஆப் சுற்றில் எந்தெந்த அணி எந்த நிலைமையில் உள்ளது என்பதைப் பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
#1.டெல்லி கேப்பிடல்ஸ்:
இதுவரை நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டங்களில் பதினொன்றில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி பெற்று கம்பீர நடை போடுகிறது, இந்த இளம் கூட்டணி. இந்த அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களான ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், ரபாடா மற்றும் தவான் ஆகியோர் தங்களது நிலையான ஆட்டத்தை இந்த தொடரில் வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், இந்த அணி புள்ளி பட்டியலில் இரண்டாமிடம் வகிக்கிறது. எஞ்சியுள்ள 3 லீக் ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றால், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
#2.சென்னை சூப்பர் கிங்ஸ்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த நடப்பு தொடரில் முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதுவரை விளையாடியுள்ள 16 போட்டிகளில், எட்டில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் வைக்கிறது. இதுவரை நடைபெற்ற அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணி என்ற சாதனையை மீண்டும் ஒருமுறை தக்க வைத்தது இன்னும் ஓரிரு வெற்றியை பெற்றான் லீக் ஆட்டங்கள் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்று, முதலாவது தகுதி சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெறும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
#3.சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
கடந்தாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறிய போதிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வி பெற்றது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் . நடப்பு தொடரில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள இந்த அணி ஐந்தில் வெற்றிபெற்று ஐந்தில் தோல்வியுற்று இருக்கிறது. இன்னும் மூன்று போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களில் நுழைந்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். ஏற்கனவே, அணியின் விக்கெட் கீப்பரான ஜானி பேர்ஸ்டோ உலக கோப்பை முன்னேற்பாடுகளால் இங்கிலாந்து அணிக்கு திரும்பியுள்ளார். இதனை எப்படி இந்த அணியினர் ஈடு கட்டுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#4.மும்பை இந்தியன்ஸ்:
மும்முறை ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ள மும்பை அணி, தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாம் இடம் வகிக்கிறது. நடப்பு தொடரில் ரோகித் சர்மா தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார். கொல்கத்தா, சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு எதிரான இனிவரும் லீக் ஆட்டங்களில் ஒரு வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு இந்த அணி நிச்சயம் தகுதி பெறும்.
#5.கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
இந்த நடப்பு தொடரை சிறப்பாக தொடங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பின்னர் வந்த 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவி வருகிறது. அணியின் இடம்பெற்றுள்ள ஆல்ரவுண்டரான ரசல் ஒருவர் மட்டுமே தனது அபார திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இன்னும் எஞ்சியுள்ள லீக் ஆட்டங்களில் மூன்று அல்லது நான்கு வெற்றிகளை பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குள் இந்த அணி நுழைய முடியும்.
#6.கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
அஸ்வினின் ரன் அவுட், கெய்லின் கோரத்தாண்டவம், ராகுலின் அபாரம், சாம் கரனின் ஹாட்ரிக் என பல்வேறு சாதனைகளை நடப்பு தொடரில் புரிந்து வருகிறது, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. இருப்பினும், இந்த அணி விளையாடியுள்ள 10 ஆட்டங்களில் ஐந்தில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. தற்போது, இந்த அணி புள்ளி பட்டியலில் ஐந்தாம் இடம் வகிக்கிறது. எஞ்சியுள்ள 4 லீக் ஆட்டங்களில் மூன்றில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்த அணி தள்ளப்பட்டுள்ளது. அத்தகைய வெற்றிகளை குவித்தால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு இந்த அணி அடியெடுத்து வைக்க முடியும்.
#7.பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்:
இந்த அணி விளையாடியுள்ள 10 லீக் ஆட்டங்களில் மூன்றில் மட்டுமே வெற்றியை கண்டுள்ளது. இதனால் நடப்பு தொடரில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ள வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெய்னின் வருகையால் புதிய உத்வேகத்தை அடைந்துள்ள இந்த அணி, இனி வரும் போட்டிகளில் அனைத்திலுமே வெற்றி பெற வேண்டும். அப்படி இருந்தாலும் கூட, புள்ளி பட்டியலில் இந்த அணிக்கு சாதகமான முடிவுகள் வந்தால் நிச்சயம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.
#8.ராஜஸ்தான் ராயல்ஸ்:
இந்த அணி விளையாடியுள்ள 10 ஆட்டங்களில் 3-இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 4 லீக் ஆட்டங்களில் அனைத்திலும் நிச்சயம் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை பற்றி சற்று நினைத்தாவது பார்க்க முடியும். பவுலிங் மற்றும் பேட்டிங் கூட்டணி ஒருமித்த செயல்பாட்டுடன் இல்லாததால் பெரும்பாலான போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது, இந்த அணி. மேலும், அணியில் இடம் பெற்றுள்ள ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் மிகுந்த ஏமாற்றத்தை அளித்து வருகிறார். ஒருவேளை அதிர்ஷ்டம் கை கொடுத்தால் இந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்ல் வாய்ப்பைப் பெறும்.