நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. வில்லியம்சன் தனது தாய் நாட்டிற்கு திரும்பியதால் புவனேஸ்வர் குமார் ஐதராபாத் அணியை வழி நடத்தினார். டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது, ஹைதராபாத் அணி. வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆட்டத்தை துவங்கினர். அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஹர்பஜன் வீசிய முதல் ஓவரிலேயே ரன்கள் எதுவுமின்றி விக்கெட்டை இழந்தார், ஜானி பேர்ஸ்டோ. மேலும், பின்னர் களம் புகுந்த மனிஷ் பாண்டே அபாரமாக விளையாடி 83 ரன்களை ஆட்டமிழக்காமல் குவித்தார். வார்னர் தனது பங்குக்கு அரை சதம் கடந்தார். 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 175 ரன்களை குவித்தது.
அடுத்து வந்த இரண்டாவது இன்னிங்சில் வாட்சன் மற்றும் டுபிளசிஸ் ஆகியோர் சென்னை அணியின் பேட்டிங்கை தொடங்கினர். டுபிளசிஸ் விரைவில் ஆட்டம் இழந்தாலும் வாட்சன் அபாரமாக விளையாடி 96 ரன்களை குவித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கு பிறகு புள்ளி பட்டியலில் நிலை, ஆரஞ்சு மற்றும் ஊதா நிற தொப்பிகளை யார் கைப்பற்றி உள்ளார் என்பதை பற்றி இந்த தொகுப்பு விவரிக்கிறது.
#1.புள்ளி பட்டியல்:
நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பின்தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறியது, டெல்லி கேப்பிடல்ஸ் . ஒரே நாள் இடைவெளியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் முதலிட அரியணைக்கு முன்னேறி டெல்லி அணியை பின் தள்ளியது. இதுவரை இந்த அணி விளையாடிய 11 போட்டிகளில் 8 வெற்றிகளோடு 16 புள்ளிகளை பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. சன்ரைசர்ஸ் அணி இந்த போட்டியில் தோல்வியை தழுவியதால் 5 வெற்றிகளும் தோல்விகளும் உள்ளடக்கி தொடர்ந்து நான்காம் இடத்திலேயே நீடித்து வருகிறது. மேலும், இந்த அணியின் நிகர ரன் ரேட் 0.654 என்ற வகையில் அற்புதமாக அமைந்துள்ளது.
#2.ஆரஞ்சு நிற தொப்பி:
ஒவ்வொரு தொடரிலும் அதிக ரன் குவித்த பேட்ஸ்மேனுக்கு இந்த ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்படுகிறது. நடப்பு 2019 ஐபிஎல் தொடரில் 7 அரை சதங்கள், ஒரு சதம் உட்பட 574 ரன்களை குவித்துள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தொடர்ந்து இதனை தன்வசம் வைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக மற்றொரு ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜானி பேர்ஸ்டோ இந்த பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கிறார். இந்த தொடரில் 400 ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார், தவான். மேலும், இவர் இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு சிறந்த இன்னிங்சை அளித்த ரிஷப் பண்ட் 11 இன்னிங்சில் 336 ரன்களைக் குவித்து முதல் 10 இடங்களுக்குள் நுழைந்தார்.
#3.ஊதா நிற தொப்பி:
ஆரஞ்சு தொப்பியை போலவே அதிக விக்கெட்களை வீழ்த்தும் பந்துவீச்சாளருக்கு ஊதா நிற தொப்பி வழங்கப்படுகிறது. இந்த நடப்பு தொடரில் 23 விக்கெட்களை கைப்பற்றி உள்ள டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சாளர் ரபாடா ஊதா நிற தொப்பியை தன் வசம் வைத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களான இம்ரான் தாகிர் மற்றும் தீபக் சாகர் முறையே 16 மற்றும் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அடுத்தடுத்த இடங்களில் தொடர்கின்றனர். மேலும், நேற்றைய ஆட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்திய சந்தீப் சர்மா மற்றும் ஹர்பஜன் சிங் முறையே 12 மற்றும் 13 வது இடங்களில் உள்ளனர்.