தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 12வது சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி புள்ளி பட்டியலில் நான்காம் இடம் வகிக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் ஐந்து வெற்றிகளும் நான்கு தோல்வியும் அடைந்துள்ளது, ஹைதராபாத் அணி. தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் தொடர்ந்து ரன்களை குவித்து வருவதால் பெரும்பாலான போட்டிகளில் எளிதில் வெற்றிகளை பெற்று வந்துள்ளது. அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் 9 போட்டிகளில் விளையாடி 517 ரன்கள் குவித்துள்ளார். மேலும், இவரே இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்று, ஆரஞ்சு நிற தொப்பியை தன் வசம் வைத்துள்ளார். இதுமட்டுமன்றி, தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஒவ்வொரு தொடரிலும் 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து உள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் விளையாடியதோடு இவர்கள் இருவரும் உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் தமது சொந்த நாட்டு அணிகளுக்காக இந்த அணியை விட்டு செல்கின்றனர். இதனால், அணியில் நிகழப்போகும் மாற்றங்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.டேவிட் வார்னருக்கு பதிலாக மார்ட்டின் கப்தில்:
இதுவரை நடைபெற்ற லீக் ஆட்டங்களில் வார்னர் - பேர்ஸ்டோ இணை தொடர்ந்து தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். இதனால், அணியில் மாற்று தொடக்க வீரரான மார்டின் கப்தில் ஒரு போட்டியில் கூட களம் இறக்கப்படவில்லை. மேலும், இந்த தொடரை விட்டு விலகி உள்ள வார்னரின் இடத்தில் இவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக வங்கதேச அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய மார்ட்டின் கப்டில் 264 ரன்களைக் குவித்துள்ளார். இதனால் இவரே வார்னருக்கு பதிலாக தொடக்க வீரராக களம் இறங்குவார்.
#2.ஜானி பேர்ஸ்டோவிற்கு பதிலாக விருத்திமான் சஹா:
ஐதராபாத் அணியின் தற்போதைய விக்கெட் கீப்பரான ஜானி பேர்ஸ்டோ, இங்கிலாந்து செல்ல உள்ள நிலையில், அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சகா அணிக்கு திரும்ப உள்ளார். கடந்த சீசனில் இவர் விளையாடிய 11 போட்டியில் 122 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். மார்டின் கப்தில் உடன் இணைந்து தொடக்க வீரராக விருத்திமான் சஹா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை வில்லியம்சன் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டால், இவர் மூன்றாம் இடத்தில் களம் இறங்குவார்,
#3.சபாஷ் நதிமுக்கு பதிலாக முகமது நபி:
தற்போதைய ஐதராபாத் அணியில் இடம் பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளரான சபாஷ் நதிமுக்கு மாற்றாக ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் முகமது நபி இடம்பெற வேண்டும். ஏற்கனவே, அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பற்றாக்குறையை போக்கும் விதத்தில் இவர் களமிறக்கப்படலாம். இது மட்டுமின்றி, அணியின் ஐந்தாவது பந்துவீச்சாளர் ஆகவும் நபி செயல்படுபவர். இதுவரை விளையாடியுள்ள நான்கு போட்டிகளில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
எதிர்பார்க்கப்பட்ட ஆடும் லெவன்:
மார்டின் கப்டில், விருத்திமான் சஹா, வில்லியம்சன், விஜய் சங்கர், தீபக் ஹூடா, யூசுப் பதான், முகமது நபி, ரசித் கான், புவனேஸ்வர்குமார், கலீல் அஹமத், சந்தீப் சர்மா.