நேற்று நடைபெற்ற இரு லீக் ஆட்டங்களில் சென்னை அணி தோல்வியையும் மும்பை அணி வெற்றியையும் பெற்றன. இதன் மூலம், புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு தட்டப்பட்டது, சென்னை அணி. நேற்று பெற்ற வெற்றியால் முதல் இடத்திற்கு முன்னேறியது, மும்பை அணி. மேலும், நேற்றைய போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற தவறியதால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு அடியெடுத்து வைத்தது. எனவே, புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் முதலாவது தகுதி சுற்றில் போட்டியிடும்.
அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதலாவது தகுதி சுற்றில் மோதவிருக்கின்றன. இவ்விரு அணிகளும் தலா மூன்று முறை ஐபிஎல் சாம்பியன் பட்டங்களை வென்று உள்ளது. நடப்புச் சாம்பியனான சென்னை அணி நாளைய ஆட்டம் தங்களது சொந்த மண்ணில் நடைபெற இருப்பதால் கூடுதல் உத்வேகத்துடன் களமிறங்கி இருக்கிறது. எனவே, நாளை பரபரப்பாக நடக்கவிருக்கும் முதலாவது தகுதி சுற்றில் இரு அணிகள் மோதும் போட்டியை தவிர்த்து இரு அணிகளிலும் உள்ள வெவ்வேறு மூன்று வீரர்களின் போர்களைப் பற்றி உங்க தொகுப்பு விவரிக்கின்றது.
#3.கீரன் பொல்லார்டு Vs வெய்ன் பிராவோ:
இரு அணியிலும் இடம் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான ஆல்ரவுண்டர்கள் கீரன் பொல்லார்டு (மும்பை இந்தியன்ஸ்) மற்றும் வெய்ன் பிராவோ (சென்னை சூப்பர் கிங்ஸ்) ஆகியோரிடையே தனிப்பட்ட போர் நடக்க இருக்கின்றது. கீரன் பொல்லார்டு பேட்டிங்கிலும் வெயின் பிராவோ பவுலிங்கிலும் குறிப்பாக ஆட்டத்தின் இறுதி கட்ட ஓவர்களை வீசும் வல்லமை பெற்றவர். இதுவரை நடைபெற்ற டி20 போட்டிகளில் பிராவோ வீசிய 122 பந்துகளை கீரன் பொல்லார்ட் சந்தித்துள்ளார். அவற்றில், 15 சிக்சர்கள் உட்பட 214 ரன்களை குவித்துள்ளார், கீரன் பொல்லார்டு. இதுமட்டுமல்லாது, 41 டாட் பால்கள் உட்பட ஏழு முறை தமது பவுலிங் கால் கீரன் பொல்லார்டின் விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார், பிராவோ.
#2.எம்.எஸ்.தோனி Vs லசித் மலிங்கா:
சர்வதேச போட்டிகளில் மட்டும் அல்லாது உள்ளூர் டி20 போட்டிகளிலும் மிகுந்த அனுபவம் கொண்ட பந்துவீச்சாளர்களில் ஒருவர், லசித் மலிங்கா. இவரின் யார்க்கர் வகையான பந்துவீச்சுக்கு தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் கூட தங்களது விக்கெட்களை இழந்து உள்ளனர். எத்தனை யார்க்கர் பந்துகள் வீசினாலும் அவற்றையெல்லாம் ஹெலிகாப்டர் ஷாட்டுகளாக மாற்றுவதே தோனியின் வேலை. அதுவும், குறிப்பாக லஷித் மலிங்காவின் ஓவரில் அற்புத சிக்சர்களை பறக்க விடுவார். தோனி. டி20 போட்டிகளில் இதுவரை மலிங்காவின் 90 பந்துகளை சந்தித்த தோனி, 124 ரன்களை குவித்துள்ளார். இவற்றில் நான்கு பவுண்டரிகளும் நான்கு சிக்ஸர்களும் அடக்கம் ஆகும். அதில் மூன்று முறை தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார், தோனி. எனவே, நாளை நடக்கவிருக்கும் போட்டியில் இந்த இரு ஜாம்பவான்களும் மோதிக்கொள்வது ரசிகர்களுக்கு தனி விருந்தாக அமையும்.
#1. ரோஹித் சர்மா Vs இம்ரான் தாஹிர்:
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை சுழற்பந்து வீச்சாளரும் ஒட்டு மொத்தத்தில் இரண்டாவது அதிக விக்கெட்களை வீழ்த்தியவருமான இம்ரான் தாஹிர், நாளை நடக்கவிருக்கும் போட்டியில் மும்பை அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார். கடந்த சில போட்டிகளில் தமது பேட்டிங்கில் எழுச்சி கண்ட மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இறுதியாக விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டு அரை சதங்களை அடித்துள்ளார். குறிப்பாக, பவர் பிளே ஓவர்களில் அற்புதமாக செயல்பட்டு வருகிறார். எனவே, இவரின் பேட்டிங்கிற்கு முட்டுக்கட்டை போடும் வகையில், இம்ரான் தாஹிரை முன்னதாகவே தோனி களம் இறக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்ரான் தாஹிரின் 84 பந்துகளை சந்தித்து உள்ள ரோஹித் சர்மா, 101 ரன்களை குவித்துள்ளார். மேலும், ரோஹித் சர்மாவின் ரன் வேட்டையை தடுக்க தடுமாறும் இம்ரான் தாஹிர் இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே இவரின் விக்கெட்டை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.