2019 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்னும் இரு போட்டிகளை எஞ்சியுள்ளன. அவற்றில் நாளை நடைபெறும் போட்டியான இரண்டாவது தகுதி சுற்றில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய இரு அணிகள் மோதவிருக்கின்றன. முதலாவது தகுதி சுற்றில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சொந்த மண்ணில் தோல்வியடைந்து அதிர்ச்சி அளித்தது. இருப்பினும், இந்த அணிக்கு மற்றொரு வாய்ப்பாக இரண்டாவது சுற்று உள்ளது. நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது, டெல்லி அணி.
நேருக்கு நேர்:
சென்னை மற்றும் டெல்லி அணிகள் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 20 முறை மோதியுள்ளன. அவற்றில், சென்னை சூப்பர் கிங்ஸ் 14 வெற்றிகளையும் டெல்லி அணி 6 வெற்றிகளையும் குவித்துள்ளன. 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி நான்காவது முறையாக வெல்லும் முனைப்பில், நாளைய போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற உள்ளது. மற்றொரு முனையில், டெல்லி அணி இதுவரை ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வென்றது இல்லை. இந்த மோசமான சாதனையை போக்கும் வகையில், நாளைய போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம். நடப்பு தொடரில் லீக் சுற்றில் இரு போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி அணியை வீழ்த்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
லீக் சுற்றில் 9 வெற்றி பெற்று புள்ளி போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து முதலாவது தகுதி சுற்றுக்கு முன்னேறியது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இருப்பினும், அணியின் பேட்டிங் கவலைக்கிடமாக உள்ளதால், மும்பை அணியிடம் தோல்வியைத் தழுவியது. சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி ஒருவர் மட்டுமே தனியாளாய் பேட்டிங்கை தூக்கி நிறுத்தி வருகிறார். இவருக்கு பக்கபலமாக மற்ற பேட்ஸ்மேன்களும் போராடினால் அணியின் வெற்றி உறுதியாகிவிடும். கடந்த சீசன்களைப் போல இல்லாமல், நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் பவுலிங் அபாரமாக இருந்து வருகிறது. எனவே, இந்த அணியின் பவுலிங் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லை.
எதிர்பார்க்கப்பட்ட ஆடும் லெவன்:
வாட்சன், டுபிளிசிஸ், சுரேஷ் ரெய்னா, முரளி விஜய், அம்பத்தி ராயுடு, டோனி, ரவீந்திர ஜடேஜா, பிராவோ, தீபக் சாகர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்.
டெல்லி கேப்பிடல்ஸ்:
டெல்லி அணியின் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு மீண்டும் உயிர்த்தெழுந்து இருக்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் இளம் படைகளைக் கொண்டு வீறு நடை போட்டு 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. ஒருமித்த பேட்டிங் - பவுலிங் சரிசமமாய் உள்ளதால், நாளைய போட்டியில் சற்று கூடுதல் உற்சாகத்துடன் இந்த அணி களமிறங்கவுள்ளது.
எதிர்பார்க்கப்பட்ட ஆடும் லெவன்:
ஷிகர் தவான், பிரித்திவி ஷா, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், காலின் முன்றோ, ரூதர்ஃபோர்டு, அக்சர் பட்டேல், கீமோ பால், டிரென்ட் போல்ட், அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா.