பன்னிரண்டாவது இந்தியன் பிரீமியர் லீக் சீசன் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது. நடப்பு தொடரில் இதுவரை நடைபெற்ற சீசன்களிலேயே மிகச் சிறந்ததாக நடப்பு சீசன் அமைந்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புள்ளிப் பட்டியலில் வெறும் 12 புள்ளிகளைக் கொண்டு ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் முதல் அணியாக வரலாறு படைத்துள்ளது. புள்ளி பட்டியலில் நான்காம் இடம் பிடித்த அணிக்கும் எட்டாம் இடம் பிடித்த அணிக்கும் பெரும் அளவில் வித்தியாசம் இல்லை. ஒரே ஒரு புள்ளி மட்டுமே இவ்விரு அணிகளுக்கும் உள்ள வித்தியாசமாகும். முதலாவது தகுதி சுற்றில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில், டெல்லி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை தோற்கடித்து இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. எனவே, நாளை நடக்கவிருக்கும் இரண்டாவது தகுதி சுற்றில் சென்னை அணி வெற்றி பெறுவதற்கு இரு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
#1.வாட்சனை நீக்கிவிட்டு தொடக்க வீரராக முரளி விஜய் களம் இறங்க வேண்டும்:
நாளை நடக்கவிருக்கும் டெல்லி அணிக்கு எதிரான இரண்டாவது தகுதி சுற்றில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளது, எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ். எனவே, தோனி நாளைய ஆடும் லெவனில் வாட்சனை நீக்கிவிட்டு தமிழக வீரர் முரளி விஜயை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும். ஏனெனில், நடப்பு ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 96 ரன்களை அடித்தது தவிர வாட்சன் ஒரு அரைசதம் கூட வேறு எந்த போட்டிகளிலும் கடக்கவில்லை. ஆகையால், இவரை அணியிலிருந்து கட்டாயம் நீக்கினால் மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்கும். முரளி விஜய் களம் இறங்கிய இரு போட்டிகளிலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடினார். தொடக்க வீரராக அவரை களம் இறக்கினால் அணியின் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் இவரை ஆட்டம் சிறப்பாக அமையும்.
#2.ஆடும் லெவனில் மேலும் ஒரு சுழற்பந்துவீச்சாளர் இணைய வேண்டும்:
நாளைய போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற இருப்பதால், கூடுதல் சுழற்பந்துவீச்சாளர் ஆடும் லெவனில் இணைக்க வேண்டும். ஏனெனில், இந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்ததை நேற்றைய போட்டியில் நாம் கண்டோம். எனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆடும் லெவனில் ஆல்ரவுண்டர் மிட்செல் சேன்ட்னர் அல்லது கரண் சர்மா ஆகியோரில் யாரேனும் ஒருவரை நீக்கப்பட்ட வாட்சனுக்கு பதிலாக இணைக்க வேண்டும்.
சென்னை அணிக்கு எதிரான கடந்த இரு லீக் ஆட்டங்களில் டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சில் சற்று தடுமாறினார். எனவே, நாளைய போட்டியில் அவர்களை கையாளும் விதமாக சுழற்பந்து வீச்சின் செயல்பாடுகள் அமையும். நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில் ஐதாராபாத் அணியின் ஆல்ரவுண்டர் ரஷீத் கான் மிடில் ஓவர்களில் பந்து வீசி டெல்லி அணியின் பேட்ஸ்மேன்களை திணறடித்தார். மேலும், தனது ஒரே ஓவரில் இது விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார். எனவே, நாளைய சென்னை அணியின் ஆடும் லெவனில் கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளர் சேர்க்கலாம் என்பதில் மாற்று கருத்து இல்லை.
நாளைய போட்டியில் மேற்கூறியவாறு வாட்ஸனை நீக்கிவிட்டு முரளி விஜயை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியும் கூடுதலாக ஒரு சுழற் பந்து வீச்சாளரை இணைத்தால் மட்டுமே இரண்டாவது தகுதி சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இதன் மூலம், ஐபிஎல் போட்டிகளில் எட்டாவது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற அணி என்ற சாதனையை படைக்கும்.