பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 2019 ஐபிஎல் தொடரில் தனது சொந்த மண்ணில் விளையாடும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மார்ச் 28 அன்று சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த வருட ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் விராட் கோலியின் தலைமையிலான பெங்களுரு அணி தோனியின் தலைமையிலான சென்னை அணியிடம் மோசமாக தோல்வியை தழுவியது.
மும்பை இந்தியன்ஸ் அணி 12வது ஐபிஎல் சீசனில் தனது முதல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான போட்டியில் போராடி தோல்வியை தழுவியது. எனவே மார்ச் 28 அன்று நடைபெறவுள்ள போட்டியில் இரு அணிகளும் இவ்வருட ஐபிஎல் சீசனில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்ய போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் என்றும் மாறாத சில முக்கிய 3 மும்முனை தாக்குதல்களை பற்றி காண்போம்.
#1 விராட் கோலி vs மிட்செல் மெக்லகன்
2019 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய போட்டியில் விராட் கோலி மிகவும் மோசமாக தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். மார்ச் 28 அன்று மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் விராட் கோலி தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி நியூசிலாந்தை சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மெக்லகன் ஓவரில் மிகவும் தடுமாறுவார்.
மிட்செல் மெக்லகன் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இவ்வருட முதல் போட்டியில் 4 ஓவர்களை வீசி 40 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். எனவே பெங்களூரு அணியுடனான போட்டியிலும் இவரது அதிரடி பந்துவீச்சு தொடரும் என நம்பப்படுகிறது.
#2 ஏபி.டிவில்லியர்ஸ் vs லாசித் மலிங்கா
இலங்கை அணியின் ஓடிஐ கேப்டன் லாசித் மலிங்கா, ஆரம்பத்தில் 2019 ஐபிஎல் தொடரில் பங்கேற்க அவரது நாட்டு கிரிக்கெட் சங்கம் அனுமதிக்கவில்லை. பின்னர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளிற்கு இணங்க அவரை ஐபிஎல் தொடரில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமதியளித்தது. மார்ச் 28 அன்று நடைபெறவுள்ள பெங்களூரு அணியுடனான போட்டியில் இவர் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. இந்த போட்டியில் மலிங்கா இடம்பெற்றால் ஏபி.டிவில்லியர்ஸ் இவரது ஓவரை எதிர்கொள்ள மிகவும் சிரமப்படுவார்.
டிவில்லியர்ஸ் சென்னை அணியுடனான போட்டியில் 9 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் இவர் அதிக ரன்களை குவித்து இவ்வருட ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் முதல் வெற்றிக்கு அடித்தழமிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#3 ரோகித் சர்மா vs யுஜ்வேந்திர சகால்
இப்பட்டியலில் மூன்றாவதாக இந்திய அணியின் ஓடிஐ/டி20 போட்டிகளின் ரெகுலர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் யுஜ்வேந்திர சகால் உள்ளனர். கடந்த கால புள்ளி விவரங்களை வைத்து பார்க்கும் போது யுஜ்வேந்திர சகால் சுழற்பந்து வீச்சில் ரோகித் சர்மா தடுமாறியுள்ளார். பெங்களூரு அணியுடனான போட்டியில் கேப்டனாக ரோகித் சர்மா ஒரு பெரிய இன்னிங்ஸை கண்டிப்பாக விளையாட வேண்டும்.
மறுமுனையில் யுஜ்வேந்திர சகால் சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் 4 ஓவர்களை வீசி 6 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்து 1 விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். எனவே மார்ச் 28 அன்று நடைபெற உள்ள போட்டியில் சகாலின் லெக் ஸ்பின்னில் ரோகித் சர்மா கண்டிப்பாக தடுமாறுவார் .