ஐபிஎல் 2019: டெல்லி அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணியின் கணிக்கப்பட்ட ஆடும் லெவன் 

Image Courtesy: IPLT20/BCCI
Image Courtesy: IPLT20/BCCI

தொடர்ச்சியாக ஆறு தோல்விகளை அடைந்த விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தற்போது எழுச்சி கண்டு தொடர்ச்சியாக வெற்றிகளைக் அடைந்துள்ளது. இறுதியாக நடைபெற்ற 5 ஆட்டங்களில் நான்கு வெற்றி கிடைத்துள்ளது. தோல்விகளால் கண்ட அனுபவத்தை கொண்டு வெற்றிப் பாதைக்கு திரும்பி ப்ளே ஆஃப் வாய்ப்பில் தொடர்ந்து நீடித்து வருகிறது, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ். இருப்பினும், இந்த அணிக்கு ஒவ்வொரு போட்டியும் வாழ்வா - சாவா? என்று தான் உள்ளது. ஏனெனில், தொடர்ந்து ப்ளே ஆஃப் எனப்படும் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது, பெங்களூர் அணி. ஏற்கனவே, ஆல்ரவுண்டர் மொயின் அலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் ஆகியோர் பெங்களூரு அணியில் இருந்து விலகியுள்ளனர். இருப்பினும், இவர்களால் ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்ப பிளே ஆப் சுற்றை உறுதி செய்யும் முனைப்பில் உள்ளது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. எனவே, டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் எதிர்பார்க்கப்பட்ட ஆடும் லெவன் வருமாறு,

#1.பார்த்தீவ் பட்டேல்:

நடப்பு தொடரில் தனது பொறுப்பான ஆட்டங்களால் அணியின் வெற்றிக்கு உதவி வருகிறார், பார்த்திவ் படேல். விராட் கோலி மற்றும் ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆகியோர் தங்களது விக்கெட்டை விரைவில் இழந்து இருந்தாலும் இவர் தனியாளாக ரன்களைக் குவித்து வருகிறார். பவர் பிளே ஓவர்களில் அற்புதமாக விளையாடி கணிசமான பங்களிப்பில் பங்காற்றி வருகிறார்.

#2.விராட் கோலி:

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானம் விராட் கோலிக்கு உகந்த மைதானமாகும். ஆகையால், ஒரு சிறந்த இன்னிங்சை இன்று அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததற்கு பிறகு தொடர்ச்சியாக இரு போட்டிகளில் ரன்களை குவிக்க தவறுகிறார், விராட் கோலி.

#3.ஏ.பி.டிவில்லியர்ஸ்:

நடப்பு தொடரில் பெங்களூர் அணியில் அதிக ரன்கள் குவித்த வீரராக திகழ்கிறார், டிவிலியர்ஸ். கடந்த 4 போட்டிகளில் 3 முறை அரை சதங்களை கடந்துள்ளார்.

#4.ஹெட் மையர்:

வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த இடது கை பேட்ஸ்மேனான இவர், அபாரமான ரன்களை குவிக்கும் திறன் படைத்தவர். இருந்தாலும், நடப்பு தொடரில் தனது மோசமான பார்மை வெளிப்படுத்தி வருகிறார். இவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், பெங்களூர் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவும்.

#5.மார்கஸ் ஸ்டோனிஸ்:

உலக கோப்பை முன்னேற்பாடுகளால் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்ப உள்ள இவர், இன்னும் சில போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ளார். ஆகையால், சொந்த நாட்டிற்கு திரும்பும் முன்னே தன்னால் முடிந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்.

#6.சிவம் துபே:

நடப்பு தொடர் துவங்குவதற்கு முன்பு அதிகமாக பேசப்பட்ட வீரர்களில் இவரும் ஒருவர். ஆனால், இவர் பல போட்டிகளில் ஆடும் லெவனில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். ஏற்கனவே, ஆல்ரவுண்டர் மொயின் அலி விட்டுச் சென்ற இடத்தை இவர் நிரப்பியாக வேண்டும்.

#7.வாஷிங்டன் சுந்தர்:

பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் ஒருவழியாக ஆடும் லெவனில் இணைக்கப்பட்டார். பேட்டிங்கில் இவருக்கு வாய்ப்பு அளிக்காவிட்டாலும் பவுலிங்கில் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை விட்டுக் கொடுத்தார். டெல்லி மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கை கொடுக்கும் என்பதால் இவர் நிச்சயம் ஆடும் லெவனில் இணைக்கப்படுவார்.

#8.டிம் சவுதி:

அணியின் வேகப்பந்து வீச்சில் முக்கிய பங்காற்றிய டேல் ஸ்டெயின் தற்போது இல்லாததால் சவுத்தி களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றி உள்ளார்.

#9.நவ்தீப் சைனி:

நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஒரே வேகப்பந்து வீச்சாளர், நவ்தீப் சைனி. தனது அபாரமான பந்து வீச்சு தாக்குதலால் எதிரணி வீரர்களை கலங்க செய்து வருகிறார்.

#10.உமேஷ் யாதவ்:

கடந்த சில போட்டிகளில் அணிக்கு நம்பிக்கை அளித்து வரும் வீரர்களில் இவரும் ஒருவர். குறிப்பாக, இறுதிகட்ட ஓவர்களை சிறப்பாக கையாண்டு வருகிறார்.

#11.யுஸ்வேந்திர சாஹல்:

நடப்பு தொடரில் பெங்களூர் அணியின் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர், சாஹல்.இவரின் பந்துவீச்சு எதிரணி வீரர்களுக்கு ஒரு பெரும் தடையாக உள்ளது.

Quick Links