ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மிகவும் திகிலான ஆட்டத்தில் கிங்ஸ் XI பஞ்சாப் வெற்றி பெற்று 2019 ஐபிஎல் தொடரில் தனது வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது. ஓவ்வொரு ஓவரிலும் ஆட்டத்தின் போக்கு மாறியது. இறுதியில் பஞ்சாப் அணியின் சிறப்பான பந்துவீச்சால் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கிங்ஸ் XI பஞ்சாப்.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல் ஆரம்பத்திலேயே தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். பின்னர் கிறிஸ் கெய்ல் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் விளாசியதால் கிங்ஸ் XI பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் அடித்தது. தவால் குல்கர்னி மற்றும் ஜோஃப்ரா ஆர்சர் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டனர்.
185 என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜாஸ் பட்லர் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார். ஜாஸ் பட்லரின் இயல்பான அதிரடி ஆட்டத்தின் மூலம் ராஜஸ்தான் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வார் என எண்ணியபோது இவரது விக்கெட் ஆட்டத்தின் போக்கை முழுவதுமாக மாற்றியது. "மன்கட் அவுட் முறை" என்று கூறப்படும் இந்த ரன் அவுட் பல்வேறு விவாதங்களுக்கு உட்பட்டது. பட்லரின் விக்கெட்டிற்குப் பிறகு ஒருவர் கூட நிலைத்து விளையாடவில்லை.
தொடர் விக்கெட்டுகள் சரிவால் ராஜஸ்தான் அணி இலக்கிற்கு சற்று அருகில் சென்று 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கிங்ஸ் XI பஞ்சாப் 2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் தனது சொந்த மண்ணில் தோல்வியை தழுவி ஏமாற்றத்திற்கு உள்ளானது. நாம் இங்கு கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் வெற்றிக்கான 3 காரணங்களை காண்போம்.
#1 கிறிஸ் கெய்லின் ருத்ரதாண்டவம்
கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கிறிஸ் கெய்ல் தனது சிறப்பான ஆட்டத்திறனை ஐபிஎல் தொடரிலும் வெளிபடுத்த ஆரம்பித்தார். அந்த அணியின் மற்றொரு தொடக்க வீரரான கே.எல்.ராகுல் ஆரம்பத்திலேயே தனது விக்கெட்டை இழந்ததால் கிறிஸ் கெய்ல் தனது பொறுப்பான ஆட்டத்தை மேற்கொண்டார். கெய்ல் நிலைத்து நிற்க குறிப்பிட்ட ஓவர்கள் வரை பொறுமையாக விளையாடினார். பின்னர் மிடில் ஓவரில் தனது அதிரடியை வெளிபடுத்தி ராஜஸ்தான் பந்துவீச்சை பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் திசையை நோக்கி விளாசினார்.
கெயிலின் அதிரடியில் 47 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 79 ரன்களை எடுத்தார். சிறப்பாக விளையாடிய சஃப்ரஸ் கான் கெய்லிற்கு தகுந்த பார்ட்னர் ஷிப் அளித்தார். சஃப்ரஸ் கான் 29 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 46 ரன்களை எடுத்தார். இரண்டு பேட்ஸ்மேன்களும் மிடில் ஓவரில் அணியின் ரன்-ரேட்டை உயர்த்தி 20 ஓவரில் பஞ்சாப் அணியை 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களை அடையச் செய்தனர். ஒரு குறிப்பிட்ட ஓவரில் ராஜஸ்தான் அணியின் ஆட்டப்போக்கு மாறியதால் தோல்வியை தழுவியது. கெய்ல் எதிர்வரும் அனைத்து போட்டிகளிலும் இதே சிறப்பான அதிரடியை வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#2 மன்கட் முறையில் அவுட்டான ஜாஸ் பட்லர்
185 என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்து 50 ரன்கள் பார்ட்னர் ஷிப் செய்தனர். ஐபிஎல் வரலாற்றில் ஜாஸ் பட்லரின் தொடர்ச்சியான அரைசதம் இந்தப் போட்டியிலும் விளாசினார். கடந்த ஐபிஎல் தொடரில் இவர் பாதியில் விலகிய போதும் கடைசி 5 போட்டிகளில் அரைசதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.
ஜாஸ் பட்லர் தனிஒருவராக ஆட்டத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அஸ்வினின் தந்திரத்தால் முற்றிலும் ஆட்டத்தின் போக்கு மாற்றப்பட்டது. பட்லர் 43 பந்துகளில் 69 ரன்களை எடுத்திருந்த சமயத்தில் நான் ஸ்ட்ரைக்கில் நின்று கொண்டிருந்தார். அஸ்வின் பந்துவீச கையை சுழற்ற வருவதற்கு முன்பாக பட்லர் கிரீஸை விட்டு வெளியேறியதால் "மன்கட் முறை" என்று கூறப்படும் ரன் அவுட்-ஐ அஸ்வின் செய்தார். பட்லர் இந்த ரன் அவுட்-ற்கு மிகவும் வருந்தி களத்தை விட்டு வெளியேறாமல் இருக்க அஸ்வின் மேல்முறையீடு செயது மூன்றாம் நடுவரால் அவுட் வழங்கப்பட்டது.
இறுதியில் பட்லரின் விக்கெட் ஆட்டத்தை முழுமையாக மாற்றியது. பட்லர் நிலைத்திருந்தால் ஆட்டத்தை வென்றிருப்பார் ஆனால் பட்லர் விக்கெட் ராஜஸ்தான் வெற்றியை மிகவும் பாதித்தது. இந்த மாதிரி ரன் அவுட் இதுவரை எந்த சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளிலும் செய்ததில்லை என விவாதம் நடைபெற்று வருகிறது. பட்லரின் விக்கெட் ஆட்டத்தை மாற்றும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
#3 17 மற்றும் 18வது ஓவரில் சாம் குரான் & முஜிப் யுர் ரகுமானின் தரமான பந்துவீச்சு
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற கடைசி 4 ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்ட போது ராஜஸ்தான் அணிக்கே சிறிது வெற்றி வாய்ப்பு இருந்தது. சாம் குரான் வீசிய முதல் 3 ஓவர்களில் அதிக ரன்களை தனது பௌலிங்கில் அளித்திருந்தார். அவர் 14வது ஓவர் வீச வரும்போது ராஜஸ்தான் அணி அதிக ரன்களை இந்த ஓவரில் அடிக்கும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் எண்ணினர். ஆனால் அவ்வாறு இல்லாமல் சிறப்பாக பந்துவீசி 4 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்து ஸ்டிவன் ஸ்மித் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நன்றாக நிலைத்து விளையாடிக் கொண்டிருந்த இரு பேட்ஸ்மேன்கள் 17வது ஓவரில் வீழ்த்தப்பட்டதால் ராஜஸ்தான் அணி வெற்றி பெற கடைசி 3 ஓவரில் 35 ரன்கள் தேவைப்பட்டன. இரு புதிய பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்தனர். முஜிப் யுர் ரகுமான் 18வது ஓவரில் தனது பந்துவீச்சை முற்றிலும் மாற்றி வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலக்கிற்கு மிக அருகில் ராஜஸ்தான் அணி இருந்த போது பென் ஸ்டோக்ஸ் மற்றும் ராகுல் திர்பாதி ஆகியோரது விக்கெட்டுகளை 18வது ஓவரில் முஜிப் யுர் ரகுமான் வீழ்த்தினார். சாம் குரான் மற்றும் முஜிப் யுர் ரகுமான் ஆகியோரது பந்து வீச்சு ஆட்டத்தின் போக்கை முழுவதும் மாற்றி, பாஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர்.