ஐபிஎல் போட்டிகளின் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது, மும்பை இந்தியன்ஸ் அணி. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து நான்காவது முறையாக மகுடத்தை வென்றது, மும்பை. நடப்பு தொடரில் மும்பை அணியில் வெற்றியை தேடித்தரும் பல வீரர்கள் இருந்தது கோப்பை வெல்ல முக்கிய காரணியாகும். மும்பை அணியில் நான்கு பேட்ஸ்மேன்கள் நடப்பு தொடரில் தலா 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளனர். பந்துவீச்சு தரப்பிலும் 5 பந்துவீச்சாளர்கள் தலா 10-க்கும் மேற்ப்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளனர். நேற்றைய போட்டியில் பல கேட்சுகளை தவறவிட்டாலும் இறுதிப் போட்டியின் முடிவு மும்பை அணிக்கு சாதகமாக முடிந்தது.
சென்னை அணி, கேப்டன் தோனி மற்றும் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாகிர் ஆகியோரையே பெரும்பாலான ஆட்டங்களில் நம்பி இருந்தது. சென்னையில் இடம்பெற்ற மற்ற வீரர்கள் தங்களது பங்களிப்பினை கூடுதலாக அளிக்க தவறினார். எனவே, சென்னை மற்றும் மும்பை அணிகள் நடப்பு தொடரில் கடந்து வந்த பாதையை பற்றி ஒரு ஆழமான பார்வையை இந்த தொகுப்பில் காணலாம்.
#2.சில வீரர்களையே பெரிதும் நம்பிய சென்னை சூப்பர் கிங்ஸ்:
நடப்பு தொடரில் மகேந்திர சிங் தோனி ஒரு கேப்டனாகவும் ஒரு வீரராகவும் தன்னால் முடிந்த பங்களிப்பினை அளித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தனியாளாய் பலமுறை வெற்றி பெறச் செய்துள்ளார். 2019 ஐபிஎல் தொடரில் 416 ரன்களை குவித்துள்ளார், தோனி. காயம் மற்றும் உடல்நிலை சரி இல்லாத காரணங்களால் இரு ஆட்டங்களில் இவர் விளையாடவில்லை. அந்த இரு ஆட்டங்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டுபிளிசிஸ் மற்றும் வாட்சன் ஆகியோர் முறையே 396 மற்றும் 398 ரன்களை குவித்துள்ளனர். தொடரின் துவக்கத்தில் தடுமாறி வந்த வாட்சன் இறுதிக்கட்ட நேரங்களில் டெல்லி மற்றும் மும்பை அணிக்கு எதிரான ஆட்டங்களில் தொடர்ச்சியாக அரைசதங்கள் கண்டு நம்பிக்கை அளித்தார். இருப்பினும், ஃபீல்டிங் மற்றும் ரன் ஓடும் போது சற்று தொய்வு கண்டார். மேலும், நேற்றைய போட்டியில் இவரது ரன் அவுட் மிகப்பெரும் தாக்கத்தை அளித்தது. அணியின் மற்றொரு வீரர் சுரேஷ் ரெய்னா 383 ரன்களை குவித்தார். ஒரு பொறுப்பு கேப்டனாகவும் ஒரு ஃபீல்டர் ஆகவும் தமது பணியைத் இவர் திறம்பட செய்யவில்லை. பல்வேறு நேரங்களில் இவர் கேட்சுகளை பிடிக்க தவறினார். அணியில் இடம்பெற்ற மற்ற இரு வீரர்களான கேதர் ஜாதவ் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோரும் சிறப்பான தாக்கத்தை எந்த ஒரு போட்டியிலும் ஏற்படுத்தவில்லை.
பவுலிங்கில் கலக்கிய இம்ரான் தாஹிர் 26 விக்கெட்களை கைப்பற்றி தொடரில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். தீபக் சாஹர், ஹர்பஜன்சிங், ரவிந்திர ஜடேஜா போன்றோரும் முறையே 22, 16 மற்றும் 15 விக்கெட்களை கைப்பற்றி அணியை பல்வேறு நேரங்களில் வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இவற்றில் குறிப்பிடும் வகையில், தீபக் சாகர் தமது ஸ்விங் தாக்குதலால் பவர் பிளே ஓவர்களிலும் இறுதிகட்ட ஓவர்களிலும் சிறப்பாக பந்துவீசினார். ஆல்ரவுண்டர் பிராவோ வெறும் 11 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி இருந்தாலும் பேட்டிங்கில் சிறப்பாக தமது திறனை வெளிப்படுத்த தவறினார். ஃபீல்டிங் மற்றும் பேட்டிங்கில் அடுத்த ஐபிஎல் சீசனில் ஆவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பாக அமைய வேண்டும். அதேபோல் நடப்பு தொடருடன் ஓய்வு பெற இருக்கும் சில வீரர்களுக்கு மாற்றாக நல்ல புதிய வீரர்களை அணியில் இணைக்க வேண்டும். இதுவரை 8 இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது மேலும் ஒரு வேதனையான சாதனையாகும்.
#1.எந்த ஒரு சூழ்நிலையிலும் விளையாடக்கூடிய மும்பை அணியின் வீரர்கள்:
மும்பை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பலரும் தங்களது பங்களிப்பினை பல்வேறு நேரங்களில் வெளிக்கொணர்ந்து நான்காவது முறையாக கோப்பையை வெல்ல உதவினர். குயின்டன் டி காக் 529 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 424 ரன்களும் கேப்டன் ரோகித் சர்மா 405 ரன்கள் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 402 ரன்களும் குவித்துள்ளனர். ஆட்டத்தின் இறுதி கட்ட நேரங்களில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படக்கூடிய ஹர்திக் பாண்டியா மற்றும் கீரன் பொல்லார்டு ஆகியோர் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டனர். பவுலிங்கில் பும்ரா 19 விக்கெட்களை கைப்பற்றி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு முட்டுக்கட்டை போட்டார். இவருடன் லசித் மலிங்கா 16 விக்கெட்டுகளும் ஹர்திக் பாண்டியா 14 விக்கெட்டுகளும் இளம் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாகர் 13 விக்கெட்டுகளும் கைப்பற்றி சிறப்பாக செயல்பட்டு உள்ளனர்.
காயத்தால் விலகிய ஜோசப் ஒரே போட்டியில் 6 விக்கெட்களை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தார். மற்றொரு ஆல்ரவுண்டரான குருனல் பாண்டியா 183 ரன்களும் 12 விக்கெட்களையும் கைப்பற்றி ஓரளவுக்கு நம்பிக்கை அளித்தார். எனவே, மேற்கண்டவை எல்லாம் நடப்பு தொடரில் மும்பை அணிக்கு சாதகமாக அமைந்து நான்காவது முறையாக கோப்பையை வெல்ல உதவிகரமாய் இருந்தன.