சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்தபடியாக மும்முறை ஐபிஎல் பட்டத்தை வென்ற அணி என்ற பெருமையைக் கொண்டது, மும்பை இந்தியன்ஸ். மேலும், இந்த அணி பல லட்சம் ரசிகர் பட்டாளத்தை கொண்டு உள்ளது. இதற்கு அனைத்திற்கும் காரணம் மும்பை அணியில் இடம்பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தான். இந்த அணி இளம் வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களை சிறந்த வீரர்களாக மாற்றிவருகின்றது. உதாரணமாக, தற்போதைய சர்வதேச கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பந்துவீச்சாளரான பும்ரா இந்திய அணியின் நல்ல ஒரு தேடலாக அமைய மும்பை இந்தியன்ஸ் அணி அச்சாரம் இட்டது. இவர் மட்டுமல்லாது, பாண்டியா சகோதரர்கள் இந்திய அணியில் இடம் பிடிக்கவும் மும்பை இந்தியன்ஸ் அணி தான் காரணம். ஐபிஎல் தொடரில் ஒரு சிறந்த அணிகளின் வரிசையில் உள்ள மும்பை இந்தியன்ஸ் ஆரம்பகால சீசன்களில் சற்று தடுமாறி வந்தது. முதல் இரு தொடர்களில் பிளே ஆப் சுற்றுக்கு கூட இந்த அணி தகுதி பெறவில்லை. இருப்பினும், அடுத்தடுத்து வந்த தொடர்களில் மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ்.
எனவே, தற்போதைய சீசனுக்கும் இதுவரை ஐபிஎல் பட்டத்தை வென்ற சீசன்களுக்கும் உள்ள பொதுவான மூன்று ஒற்றுமைகளை பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
#1.அதிக ரன்களை குவிக்கும் அணியில் புதிதாக இணைந்த வீரர்:
2013 - தினேஷ் கார்த்திக்
2015 - லென்டில் சிம்மன்ஸ்
2017 - பார்த்தீவ் பட்டேல்
மூன்று முறை ஐபிஎல் பட்டத்தை வென்று உள்ள சீசன்களில் அணியில் இணைந்த புதிய வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிக ரன்களை குவித்துள்ளனர். இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த 2011ம் ஆண்டு இந்த அணி முதலாவது ஐபிஎல் பட்டத்தை வென்று இருந்தது. அந்த ஆண்டில் 2.4 கோடி ரூபாய்க்கு அணியில் தினேஷ் கார்த்திக் புதிதாக ஒப்பந்தம் ஆனார். இவர் மிடில் ஆர்டரில் ரோகித் சர்மாவுடன் இணைந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதைப்போலவே, 2015 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் அணியில் இடம்பெற்ற புதிய வரவுகளான லென்டில் சிம்மன்ஸ் மற்றும் பார்த்தி பட்டேல் ஒட்டுமொத்த அணியில் அதிக ரன்களை குவிப்பதில் ஆதிக்கம் செலுத்தினர். இதே போலவே, இந்த ஆண்டு அணியின் புதிய வரவான விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் நடப்பு தொடரில் 378 ரன்கள் குவித்து அணியில் முன்னிலை வகிக்கிறார். எனவே, கடந்த சீசன் களை போலவே இந்த சீசனிலும் மும்பை அணி கோப்பையை வெல்வதற்கான ஒற்றுமைகளில் ஒன்றாக இது உள்ளது.
#2.பேட்டிங்கில் கலக்கும் கீரன் பொல்லார்டு:
2013 - 420 ரன்கள்
2015 - 419 ரன்கள்
2017 - 385 ரன்கள்
மும்பை இந்தியன்ஸ் அணியில் 2010ம் ஆண்டு முதல் அங்கம் வகிக்கிறார், ஆல்ரவுண்டர் பொல்லார்டு. இவர் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் களமிறங்கினால் ஆட்டத்தில் அனல் பறக்கிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 31 பந்துகளில் 83 ரன்கள் குவித்துள்ளார். இதுவே இந்த தொடரில் இவர் குவித்த அதிகபட்ச ரன்களாகும். இந்த அணி கோப்பையை வென்றுள்ள ஒவ்வொரு முறையும் கீரன் பொல்லார்டு 350க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து இருக்கிறார். எனவே, பேட்டிங்கில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர், இந்த ஐபில் தொடரிலும் 350 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், மும்பை இந்தியன்ஸ் அணி 4வது முறையாக கோப்பையை வெல்ல இதுவும் ஒரு ஒற்றுமையாக அமைந்துள்ளது.
#3.இரு வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம்:
2013 - மலிங்கா மற்றும் ஜான்சன்
2015 - மலிங்கா மற்றும் மெக்கெலனஹன்
2017 - மலிங்கா மற்றும் மெக்கெலனஹன்
ஐபிஎல் போட்டிகளில் நான்கு வெளி நாட்டு வீரர்களை ஆடும் லெவனில் சேர்த்துக்கொள்ளலாம். அந்த வகையில், 2013 ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த லசித் மலிங்கா, அணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஜாக்சனுடன் இணைந்து எதிரணி வீரர்களை நிலைகுலைய வைத்தனர். ஆகையால், அந்த ஆண்டு தனது முதலாவது ஐபிஎல் பட்டத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ். அதேபோல, 2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் அடுத்து இரு ஐபிஎல் பட்டங்களை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியில் மலிங்கா உடன் மெக்கெலனஹன் இடம்பெற்றிருந்தார். இருவரும் இணைந்து தங்களது வேகப் பந்துவீச்சு தாக்குதலால் எதிரணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை வீழ்த்தினர். அதேபோல, நடப்பு ஐபிஎல் தொடரில் மலிங்கா, ஜாசன் பெஹன்டிராஃப் உடன் இணைந்து தனது பந்து வீச்சு தாக்குதலை தொடுத்து வருகின்றனர். எனவே, கடந்த சீசன்களை போல இந்த நடப்பு சீசனிலும் மும்பை அணி கோப்பையை வெல்ல மூன்றாவது காரணமாக இது அமைந்துள்ளது.
மேற்குறிப்பிட்டுள்ள மூன்று ஒற்றுமைகளும் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை வென்றுள்ள மூன்று தொடர்களிலும் சாத்தியமாகியுள்ளன. அதேபோல் நடப்பு ஐபிஎல் தொடரிலும் இந்த அணி கோப்பையை வெல்லுமா என்று ரசிகர்கள் பலரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்