உலகின் மிகப் பிரபலமான தொடர்களில் ஒன்று இந்தியன் பிரீமியர் லீக். எவரும் எதிர்பார்க்காத வீரர் கூட இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு பேரதிர்ச்சி அளிப்பார். இதுவே இந்த தொடர் உலகம் முழுவதும் பிரபலம் அடைய காரணம் ஆகும். அதுபோல, நடப்பு தொடரிலும் சில வீரர்கள் அபாரமாக செயல்பட்டு உள்ளனர். இருந்தாலும் சில வீரர்கள் எதிர்பார்ப்புக்கு குறைவாகவே செயல்பட்டுள்ளனர். அவ்வாறு சோபிக்க தவறிய மூன்று வீரர்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.விஜய் சங்கர்:
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர், உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றார். இதனால், ஐபிஎல் தொடரில் இவர் சிறப்பாக செயல்படுவார் என நம்பிக்கை அதிகரித்தது. ஆனால், அதற்கு எதிர்மாறாக இவர் விளையாடிய லீக் போட்டிகளில் மொத்தம் 119 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். பவுலிங்கிலும் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். இதனால், உலக கோப்பை தொடரின் இவரின் பங்கு இருக்குமா என்ற சந்தேகம் நிலவி வருகிறது.
#2.வாட்சன்:
கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். ஷேன் வாட்சன். இவர் கடந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணியில் இடம் பெற்று இறுதிப் போட்டியில் 57 பந்துகளில் 117 ரன்கள் குவித்து மூன்றாவது சாம்பியன் பட்டத்தை வெல்ல உதவினார். இதனால், சென்னை அணி நிர்வாகம் இவரை இந்த ஆண்டு தக்க வைத்தது. அந்த நம்பிக்கையின் காரணமாக, தொடரின் அனைத்து லீக் போட்டிகளில் இவர் களமிறங்கினார். அதன்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 96 ரன்களை குவித்தது தவிர வேறு எந்த போட்டியிலும் ஒரு அரைசதத்தை கூட இவர் தாண்டவில்லை. மேலும், இவரது பேட்டிங் சராசரி 18க்கும் கீழ் உள்ளது. எனவே, அடுத்த ஐபிஎல் தொடரில் இவர் அணியில் இருந்து விடுவிக்கவும் வாய்ப்பு உண்டு.
#3.சிம்ரன் ஹெட்மேயர்:
வெஸ்ட் இண்டீஸ் நாட்டை சேர்ந்த இந்த இளம் வீரர், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. பெங்களூர் அணியின் பேட்டிங்கிற்கு வலு சேர்க்கும் வகையில், மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறக்கப்பட்டார். இவர் விளையாடிய முதல் நான்கு லீக் போட்டிகளில் வெறும் 15 ரன்களை மட்டுமே குவித்தா. கடைசி வாய்ப்பாக பஞ்சாப் அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இவர் இடம் பெற்றார். அந்த லீக் போட்டியில் 75 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இருப்பினும், இவரது ஏமாற்றம் பெங்களூர் அணி தொடரிலிருந்து வெளியேறுவதற்கு ஒரு காரணமாகவும் அமைந்தது.