ஆறு ஆண்டு காலத்திற்கு முன்னர், டெல்லி அணி இறுதியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாமலே இருந்து வந்தது, டெல்லி கேப்பிடல்ஸ். 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இந்த அணியை அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் வழிநடத்திச் சென்றார். இதன் மூலம், அந்த ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதன் பின்னர், ஆறு ஆண்டுகள் பிளே ஆப் சுற்றுக்கு மட்டும் தகுதி பெறுவதோடு அல்லாமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு அவ்வப்போது தள்ளப்பட்டு மிகுந்த வேதனையை அளித்தது, டெல்லி கேப்பிடல்ஸ். இது அணியின் உரிமையாளர்கள் மற்றும் வீரர்களுக்கு மட்டும் அதிர்ச்சி அளிக்காமல் டெல்லி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை அளித்திருந்தது. இதனால், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தின் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது, டெல்லி கேப்பிடல்ஸ்.
நடப்பு ஆண்டு "டெல்லி டேர்டெவில்ஸ்" என்று அழைக்கப்பட்டு வந்த இந்த அணி, "டெல்லி கேப்பிடல்ஸ்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டு தனது புதிய பரிணாமத்தை தொடங்கியது. கடந்த சீசனில் போதிய ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டாலும் 14 வீரர்களை தக்க வைத்தது, இந்த அணியின் நிர்வாகம். அதுமட்டுமின்றி, அணியில் புதிய வீரராக தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான் இணைந்தார். மேலும், இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான சவுரவ் கங்குலி அணியின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார். இதனால், இன்று தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து நடப்பு ஐபிஎல் தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு இரண்டாவது அணியாக தகுதி பெற்றுள்ளது, டெல்லி கேப்பிடல்ஸ். எனவே, இந்த தொடர் வெற்றிகளுக்கு காரணமாக அமைந்த மூன்று மந்திரங்களைப் பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
#1.பலமான முதல் நான்கு பேட்ஸ்மேன்கள்:
இந்த அணியின் பேட்டிங்கில் முதுகு தண்டாக விளங்குவது, முதல் நான்கு பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு தான். 19 வயதான இளம் பிருத்திவி ஷா, அனுபவம் மிக்க ஷிகர் தவான், திறமையான கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷாப் பாண்ட் என முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் சிறப்பாக இந்த அணிக்கு அமைந்துள்ளனர். மேலும், நடப்பு தொடரில் இந்த அணிக்கு குவித்துள்ள மொத்த ரன்களில் 75 சதவீத பங்களிப்பு இந்த வீரர்களால் தான் வந்துள்ளது. இதுவரை இந்த அணி குவித்த 1987 ரன்களில் 11 அரை சதங்கள் உள்பட 1457 ரன்களை குவித்தது, இந்த நால்வர் கூட்டணி தான். எனவே, இந்த வீறுநடை போடும் வெற்றிக்குப் பின்னால் நால்வரின் பங்களிப்பு மிக அவசியமாய் இருந்து வருகிறது. இவர்கள் அனைவரும் தங்களது சீரான ஆட்டத்தை இனி வரும் போட்டிகளில் வெளிப்படுத்தினால், இறுதிச் சுற்றுக்கு சுலபமாக இந்த அணி முன்னேறிவிடும். மேலும், இறுதி சுற்றிலும் வெற்றி பெற்று இந்த அணி நடப்பு ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#2.உலகத்தரமான ரபாடா வின் பந்துவீச்சு:
இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் டெல்லி அணிக்காக மெக்ராத், ஜாகிர் கான், மோர்னே மோர்கல், இர்பான் பதான், அஜித் அகர்கர் போன்ற முன்னணி பந்துவீச்சாளர்கள் இடம்பெற்ற போதிலும் ஒரு சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருந்தனர். இந்த கவலை எல்லாம் மறக்கடிக்கும் வகையில் 2017ஆம் ஆண்டில் டெல்லி அணியில் புதிய வரவாக இணைந்தார், தென்ஆப்பிரிக்கா வேகப்புயல் ரபாடா. அந்த முதலாவது ஐபிஎல் சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்களை வீழ்த்தினார். மேலும், கடந்த ஆண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். பின்னர், இந்த ஆண்டு புதிய உத்வேகத்துடன் திரும்பிய ரபாடா, நடப்பு ஐபிஎல் தொடரில் 25 விக்கெட்களை கைப்பற்றி ஊதா நிற தொப்பியை தன் வசம் வைத்துள்ளார். மேலும், இந்த வரிசையான வெற்றிகளுக்கு டெல்லி அணியின் துணாய் விளங்கி வருகிறார். இவரின் அபாரமான ஆட்டம் தொடர்ந்து நீடித்தால் டெல்லி அணி தனது முதலாவது ஐபிஎல் தொடரை வெல்லும் என எதிர்பார்க்கலாம்.
#3.ரிக்கி பாண்டிங் மற்றும் சவுரவ் கங்குலியின் பங்களிப்பு:
கடந்த ஐபிஎல் தொடரில் இரு முறை உலக கோப்பையை வென்று தந்த கேப்டனான ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவர் அதற்கு முன்னர், மும்பை இந்தியன்ஸ் அணியில் இரு ஆண்டுகள் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். மேலும், 2015 ஆம் ஆண்டில் தமது பயிற்சியின் கீழ் மும்பை அணி கோப்பையை வெல்வதில் பெரும் பங்காற்றினார். நடப்பு ஐபிஎல் தொடரில் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி டெல்லி அணியில் இணைந்தார். இவ்விரு ஜாம்பவான்கள் டெல்லி அணிக்கு பக்கபலமாய் அமைந்ததால் புதிய உத்வேகத்துடன் வெற்றிகளை சரமாரியாக குவித்து வருகிறது. இவர்களின் அனுபவம், நுணுக்கம்,கிரிக்கெட் அறிவு போன்றவை அணியில் உள்ள வீரர்களுக்கு உத்வேகமாய் அமைந்து வருகின்றது. இதன் காரணமாக, டெல்லி அணி இம்முறை ஐபிஎல் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது.