ஐபிஎல் தொடரில் பல்வேறு வீரர்கள் அற்புதமாக செயல்பட்டு உலகம் முழுக்க இருக்கும் கோடிக்கணக்கான ஐபிஎல் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து உள்ளனர். அவ்வாறு, தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறப்பாக விளையாடிய வீரர்களான ஷிகர் தவான், கிறிஸ் கெய்ல், ஹர்பஜன் சிங் போன்றோர் இன்றளவிலும் தங்களது பணியினை அபாரமாக செய்து வருகின்றனர். இருப்பினும், சில வீரர்கள் நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து தங்களது மோசமான ஆட்டத்தினையே வெளிப்படுத்தி வருகின்றனர். அவ்வாறு, 2019 ஐபிஎல் தொடரில் மோசமாக செயல்பட்டு அடுத்த சீசனில் நடைபெறும் ஏலத்தில் விற்பனையாக வாய்ப்பில்லாத மூன்று வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#3.ஷேன் வாட்சன் - சென்னை சூப்பர் கிங்ஸ் :
இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் 130 ஆட்டங்களில் விளையாடி 3,428 ரன்களை குவித்துள்ளார், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்ஸன். இவற்றில் நான்கு சதங்களும் 17 அரை சதங்களும் 92 விக்கெட்டுகளும் அடங்கும். 37 வயதான இவர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக முதன்முதலாக ஐபிஎல்லில் அறிமுகமானார். அதன்பின்னர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இரு ஆண்டுகளாக அங்கம் வகித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகி விளையாடினார். மேலும், அந்த தொடரில் 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினார். இதனால், சென்னை அணியில் தக்கவைக்கப்பட்டு நடப்பு தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 96 ரன்களை குவித்தது மட்டுமே இவரின் மிகச் சிறந்த ஆட்டமாக நடப்பு தொடரில் உள்ளது. அதை தவிர, வேறு எந்த போட்டியிலும் இவர் சிறப்பாக விளையாடவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 251 ரன்கள் மட்டுமே இவர் குவித்துள்ளார். எனவே, அடுத்த வருடம் நடைபெறப்போகும் ஐபிஎல் தொடரில் இவரை ஒப்பந்தம் செய்ய எந்த அணியும் முன்வராது என தெரிகிறது.
#2.யூசுப் பதான் - சன்ரைசர்ஸ் ஹைதரபாத்:
மற்றொரும் ஒரு ஆல்ரவுண்டரான யூசுப் பதான், 2008ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று தனது ஐபிஎல் வாழ்க்கையை தொடங்கினார். இவரது அற்புத சிக்ஸர் அடிக்கும் திறனால் ஐபிஎல் தொடர்களில் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்கினார். கூடவே தனது சுழல் பந்து வீச்சால் அவ்வப்போது விக்கெட்களை கைப்பற்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதலாவது ஐபிஎல் பட்டத்தை வெல்வதற்கு உறுதுணையாக இருந்தார். இதுவரை 123 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 3204 ரன்களை குவித்துள்ளார். இவற்றில் 13 அரை சதங்களும் ஒரு சதமும் 42 விக்கெட்டுகளும் அடங்கும். 2011ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் ஆகி தொடர்ந்து 7 ஆண்டுகள் அதே அணியில் இடம்பெற்றார்.
பின்னர், கடந்த ஆண்டு கொல்கத்தா அணி நிர்வாகம் இவரை விடுவித்தது. அதன்படி, நடைபெற்ற ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு விளையாட தொடங்கினார். நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 37 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். எனவே தனது மோசமான ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் யூசுப் பதானுக்கு இந்த ஆண்டோடு ஐபிஎல் வாழ்க்கை முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#1.யுவராஜ் சிங் - மும்பை இந்தியன்ஸ்:
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களில் ஒருவர், யுவராஜ் சிங். இவர் இந்திய அணியின் வெற்றிக்காக பலமுறை பாடுபட்டுள்ளார். மேலும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்தார். புற்றுநோயால் அவதிப்பட்ட பின்னர் மெல்லமெல்ல இவரின் ஃபார்ம் கேள்விக்குறியானது. 2011 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு உறுதுணையாக இருந்தார். 2008 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இடம்பெற்று தொடர்ந்து மூன்றாண்டுகள் அதே அணியில் நீடித்தார். அதன் பின்னர், புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்காக மூன்றாண்டுகளும் பெங்களூர் அணிக்காக ஒரு ஆண்டும் டெல்லி அணிக்காக அடுத்த ஆண்டும் ஹைதராபாத் அணிக்காக அடுத்த இரு ஆண்டுகளும் அங்கம் வகித்தார்.
அதன் பின்பு, மீண்டும் பஞ்சாப் அணியில் கடந்த ஆண்டு இடம் பெற்றார். நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அங்கம் வகிக்கிறார், யுவராஜ் சிங். டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் 53 ரன்கள் குவித்து அட்டகாசப்படுத்தினார். அதன் பின்னர், நடைபெற்ற போட்டிகளில் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். நடப்பு தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 75 ரன்கள் குவித்துள்ளார். எனவே, மேற்கண்ட இரு வீரர்களைப் போலவே இவரின் பார்மும் கேள்விக்குறியாக உள்ளதால் அடுத்து வரும் ஐபிஎல் சீசனில் தொடர்ந்து இடம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் இவர்கள் மூவரும் அடுத்து வரும் ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியினரும் ஒப்பந்தம் செய்ய முன் வர மாட்டார்கள் எனவும் தெரிகிறது.