ஐபிஎல் 2019 விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஆரம்பத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தற்பொழுது தொடர் தோல்விகளால் சரிவை சந்தித்துள்ளது. முதல் நான்கு போட்டிகளில், மூன்றில் வெற்றி பெற்று வலுவான நிலையில் கொல்கத்தா அணி இருந்தது.கடைசியில் விளையாடிய ஐந்து போட்டிகளிலும் தோல்வியை கண்ட கொல்கத்தா அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப அந்த அணியில் நிகழவேண்டிய சில மாற்றங்கள் குறித்து இத்தொகுப்பில் காண்போம்.
#1.தொடக்க வீரராக ஷுப்மான் கில்:
2018ல் நடந்த U19 உலகக் கோப்பையில் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியவர் , ஷுப்மான் கில். ஐபிஎல்-இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை நடந்த போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கிய சுனில் நரைன் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆதலால், கில்லை தொடக்க வீரராக அனுப்புவது சிறந்த பலனை அளிக்கலாம். போட்டிகளில் தொடர் விக்கெட்டுகளை இழந்து வரும் கொல்கத்தா அணிக்கு இந்த மாற்றம் பயனுள்ளதாக இருக்கும். லின்னின் அதிரடி ஆட்டமும், கில்லின் நிதானமான பொறுப்பான ஆட்டமும்,கொல்கத்தா அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வழி வகுக்கும்.
#2 . தினேஷ் கார்த்திக் மற்றும் ரஸ்செல் முன்கூட்டியே களம் இறங்க வேண்டும்:
கேப்டன் தினேஷ் கார்த்திக் மற்றும் ரஸ்ஸல் முன்கூட்டியே களம் காணாமல் ஐந்தாவது மற்றும் ஆறாவது வீரராக களம் காண்பது அந்த அணிக்கு மிகவும் பின்னடைவாக உள்ளது. பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 214 என்ற இமாலய இலக்கை விரட்டிய போது கூட ரஸ்ஸல், ஆறாவது வீரராக களம் இறக்கப்பட்டது அந்த அணிக்கு சரிவை தேடித் தந்தது. மூன்றாவது வீரராக ராணாவை களம் இறக்கி விட்டு, ஆட்டத்தின் சூழ்நிலையை பொறுத்து நான்காவது வரிசை வீரராக தினேஷ் கார்த்திக் அல்லது ரஸ்ஸல் களம் இறங்க வேண்டும். இந்த மாற்றம் அந்த அணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
#3. ரிங்கு சிங்கிற்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா மற்றும் பியூஸ் சாவ்லாவிற்கு பதிலாக குல்தீப் யாதவ் :
கொல்கத்தா அணியின் பலமே அவர்களின் பந்துவீச்சு தான். எனினும், பந்துவீச்சாளர்களை கொல்கத்தா அணி சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.மூன்று சுழற்பந்து வீச்சாளர்களான சுனில் நரைன், குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா ஆகியோரைக் கொண்டு கலக்கும் கொல்கத்தா அணியால், வேகப்பந்து வீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த இயலவில்லை. கொல்கத்தா அணி குல்தீப் யாதவ் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். 10 போட்டிகளில் 6 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்திய சாவ்லாவிற்கு பதிலாக குல்தீப் யாதவை தேர்வு செய்ய வேண்டும். கொல்கத்தா அணிக்கு போதுமான பேட்ஸ்மேன்கள் இருப்பதால் ரிங்கு சிங்கிற்கு பதிலாக பிரசித் கிருஷ்ணாவை களமிறக்க வேண்டும். இந்த இரண்டு மாற்றங்களும், கொல்கத்தா அணிக்கு பந்துவீச்சில் மேலும் வலுவூட்டும்.