2019 ஐபிஎல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில் ப்ளே ஆப் சுற்று போட்டிகள் மே 7 முதல் தொடங்க உள்ளன. மும்பை, சென்னை, டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்நிலையில், ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஏனெனில், கொல்கத்தா அணி முதல் 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று வலுவான நிலையில் இருந்தது. ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற மீதமுள்ள 9 போட்டிகளில் மூன்று அல்லது நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலையில் கொல்கத்தா அணி இருந்தது. ஆனால், தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வி அடைந்து பெரும் பின்னடைவை சந்தித்தது, கொல்கத்தா அணி.
மும்பை அணிக்கு எதிரான கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் இருந்த கொல்கத்தா அணி, மோசமான ஆட்டத்தினால் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. கொல்கத்தா அணி ரஸ்செல்லை மட்டுமே சார்ந்து இருந்தது. அந்த அணியின் பந்து வீச்சும் சிறப்பாக அமையவில்லை. கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் எவரும் ரஸ்செல் உடன் உறுதுணையாக ஆடவில்லை. ஆதலால், ரஸ்ஸல் மட்டும் தனியாளாக போராடினார்.
இந்நிலையில், ஏலத்தில் எடுக்கப்படாத மூன்று வீரர்கள் கொல்கத்தா அணிக்கு உதவிகரமாக இருந்திருப்பார்கள். அவர்களைக் குறித்து இத்தொகுப்பில் காண்போம்.
#3.சேட்டேஸ்வர் புஜாரா:
புஜாராவை டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆக மட்டுமே கருதி அவரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் புறக்கணிக்கின்றனர். ஐபிஎல் ஏலத்தில், இந்த ஆண்டும் அவரை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை. எனினும், புஜாரா கடுமையாக உழைத்து தனது வழக்கமான பேட்டிங்கிலிருந்து சற்று அதிரடி ஆட்டத்திற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டார். சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான தொடரில், புஜாரா 131.31 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முஸ்தாக் அலி கோப்பைக்கான தொடரில் ஒரு சதமும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரில் 86.66 ஆவரேஜ் வைத்துள்ளார்.
அனுபவம் வாய்ந்த ராபின் உத்தப்பா இந்தத் தொடரில் சிறப்பாக விளையாட காரணத்தினால், ரின்கு சிங்கிற்கு வாய்ப்பளிக்கப்பட்டது, அவரும் ரன் சேர்ப்பதற்கு தடுமாறினார். புஜாரா போன்ற வீரர் அணியில் இருந்து இருந்தால் அணியின் நங்கூரமாக அவர் செயல்பட்டிருப்பார். ராணாவும், பெங்களூர் அணிக்கு எதிராக 85* ரன்கள் அடித்தது தவிர பல போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் இந்த தொடரில் பெரிய அளவு பிரகாசிக்கவில்லை. ஆதலால் , புஜாரா கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருந்தால் மிடில் ஆர்டரில் சிறப்பான பங்கு அளித்திருப்பார். கொல்கத்தா அணிக்கு ஒரு நிலைத்தன்மையை ஏற்படுத்திக் கொடுத்திருப்பார்.
#2. ஜேம்ஸ் நீஷம்:
இவர் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த வீரர். கடந்த சில போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக சிறப்பாக விளையாடி நல்ல பார்மில் உள்ளார். இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்காக மீண்டும் அணிக்குத் திரும்பினார், நீஷம். அவர் மீண்டும் அணிக்குத் திரும்பியதிலிருந்து 5 இன்னிங்சில் 204 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 182.14 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்லாந்தில் பிறந்த நீஷம், 77 இன்னிங்சில் 1387 ரன்கள் எடுத்துள்ளார், டி20 போட்டிகளில் 24.76 ஆவரேஜ் மற்றும் 138 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். 86 போட்டிகளில் 96 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கொல்கத்தா அணிக்காக தனியாளாக போராடிய ரஸ்ஸலிற்கு எந்த வீரர்களும் உறுதுணையாக இல்லை. கார்லோஸ் பிராத்வேட், அணியில் இருந்தாலும் சிறப்பாக செயல்படவில்லை. நீஷம் போன்ற வீரர் அணியில் இடம்பெற்றிருந்தால், ரஸ்செல் உடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பார். அவரது பந்து வீச்சும் அணிக்கு உதவிகரமாக இருந்திருக்கும்.
#1. கேன் ரிச்சர்ட்சன்:
வலது கை வேகப்பந்து வீச்சாளரான ரிச்சர்ட்சன் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர். பிக் பாஷ் லீக்கில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரிச்சர்ட்சன், 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பந்துவீச்சு ஸ்ட்ரைக் ரேட் 13.7 மற்றும் எகானமி ரேட் 7.75 என்றும் உள்ளன. அவரது சிறப்பான பந்துவீச்சு, மெல்போர்ன் அணி கோப்பையை வெல்வதற்கும், மீண்டும் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்புவதற்கும் காரணமாக அமைந்தது. உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் இடம்பெறும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டார். இதுவரை ஐபிஎல்லில் மூன்று அணிகளுக்காக விளையாடி உள்ளார். டி20 போட்டிகளில், 88 இன்னிங்சில் 107 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது பௌலிங் ஸ்ட்ரைக் ரேட் 18 மற்றும் எகானமி ரேட் 8.1 .
கொல்கத்தா அணியில் மூன்று வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இருப்பினும், அவர்கள் இந்த சீசனில் பெரிதளவு பங்காற்ற வில்லை. கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இதுவரை 18 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளனர். அதில் 8 விக்கெட்டுகள் ரஸ்செல் வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. ரிச்சர்ட்சன் போன்ற வேகப்பந்துவீச்சாளர் கொல்கத்தா அணிக்கு வேகப்பந்து வீச்சில் பெரும்பங்கு அளித்திருப்பார்.
எனவே, ஏலத்தில் எடுக்கப்படாத மேற்கண்ட மூன்று வீரர்களும், கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற காரணமாக அமைந்து இருப்பார்கள்.