2019 ஐபிஎல் தொடர் பிளே ஆப் சுற்றை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றில் அடியெடுத்து வைக்கும் போது மீதமுள்ள இரு இடங்களுக்கு மற்ற ஐந்து அணிகள் போட்டியிடுகின்றன. பெங்களூர் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் இனிவரும் போட்டிகளில் கட்டாயம் வென்றால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும். இருப்பினும், மும்பை, ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புகள் உள்ளன. இங்கிலாந்து தென் ஆப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலியா வீரர்கள் உலக கோப்பை தொடரின் முன்னேற்பாடுகளால் தங்களது சொந்த நாட்டுக்கு திரும்ப உள்ள கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் தங்களது நாட்டுக்கு திரும்பியுள்ளனர்.
தற்போது புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தில் ஹைதராபாத் அணி உள்ளது. இன்னும் மூன்று லீக் ஆட்டங்கள் இந்த அணிக்கு மீதமுள்ளன. எனவே, ஒவ்வொரு போட்டியும் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும். பெரும்பாலான போட்டிகளில் தொடக்க வீரர்களே இந்த அணிக்கு அதிக ரன்களை குவித்து வந்தனர். மிடில் ஆர்டர் மற்றும் லோவர் ஆர்டர் பேட்டிங் இந்த அணிக்கு கவலையளிக்கும் வகையில் இருந்து வருகிறது. மணிஷ் பாண்டே ஒருவர் மட்டுமே தற்போது நம்பிக்கை அளித்து வருகிறார். அணியில் உள்ள மற்ற வீரர்களான கனே வில்லியம்சன், விஜய் சங்கர், யூசுப்பதான், ஷகிப் அல்-ஹசன் ஆகியோர் தொடர்ந்து தங்களது ஆட்டத்தில் கவனம் செலுத்தினால் மட்டுமே இந்த அணி இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற முடியும். எனவே, இனிவரும் போட்டிகளில் இந்த அணியில் இடம்பெறும் ஆடும் லெவனை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.பேட்டிங்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தற்போது ஒரு புதிய தொடக்க பேட்டிங் தேவைப்படுகிறது. கேப்டன் கனே வில்லியம்சனுடன் இணைந்து மார்டின் கப்தில் அல்லது விருத்திமான் சஹா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, இவர்கள் கடந்த தொடர்களில் ஹைதராபாத் அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக களமிறங்கியுள்ளனர். டி20 போட்டிகளில் அதிக அனுபவம் கொண்ட மார்ட்டின் கப்தில்லை தொடக்க பேட்ஸ்மேனாக அணி நிர்வாகம் களமிறங்க செய்யும். சர்வதேச டி20 போட்டிகளில் நியூஸிலாந்து அணிக்காக மாட்டின் கப்தில் மற்றும் வில்லியம்ஸ் ஆகியோர் சிறந்த ஒரு தொடக்க பேட்டிங்கை அளித்துள்ளனர். எனவே, இவ்விரு வீரர்களும் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ பின் வெற்றிடங்களை நிரப்புவார்கள்.
மூன்றாம் இடத்தில் களம் இறங்கும் மனிஷ் பாண்டே தொடர்ந்து அதே இடத்தில் களமிறக்கப்படுவார். இவருக்குப் பின்னர், ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் நான்காம் இடத்திலும் அவரைத் தொடர்ந்து, அபிஷேக் ஷர்மா, தீபக் ஹூடா ஆகியோர் களமிறக்கப்படலாம். இருப்பினும், மிகவும் முக்கியமானது மிடில் ஆர்டர் தான். எனவே, இனிவரும் போட்டிகளில் தீபக் ஹூடாவுக்கு பதிலாக அனுபவமுள்ள யூசுப்பதான் இடம் பெறுவார் எனவும் நம்பப்படுகிறது. விக்கெட் கீப்பராக விருத்திமான் சஹாவும் ஏழாமிடத்தில் முகமது நபியும் களமிறங்குவார்கள். கடந்த இரு ஆட்டங்களில் இடம்பெற்ற ஆல்ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் எந்தவொரு திருப்பத்தையும் ஏற்படுத்தாதனால் முகமது நபி களமிறக்கப்படுவார்.
#2.பௌலிங்:
அணியில் தங்களது சீரான பந்து வீச்சு தாக்குதலை வெளிப்படுத்தி வரும் புவனேஸ்வர் குமார் மற்றும் ரஷித் கான் ஆகியோர் தொடர்ந்து அணியில் நீட்டிக்கப்படலாம். சில போட்டிகளிலேயே விளையாடி சிறந்த தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இளம் வீரர் கலில் அகமது தொடர்ந்து இடம்பெறுவார். கடந்த போட்டியில் இடம்பெற்ற சித்தார்த்துக்கு பதிலாக சந்தீப் சர்மா ஆடும் லெவனில் இணைக்கப்படலாம்.
கணிக்கப்பட்ட ஆடும் லெவன்:
மார்டின் கப்தில், கனே வில்லியம்சன், மணிஷ் பாண்டே, விஜய்சங்கர், யூசுப்பதான், முகமது நபி, விருத்திமான் சஹா, ரஷீத் கான், புவனேஸ்வர் குமார், கலீல் அஹமது மற்றும் சந்தீப் சர்மா.