உலகின் மிகப்பெரிய மற்றும் மிகச்சிறந்த டி20 தொடரான ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 23ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பன்னிரண்டாவது ஐபிஎல் சீசன் அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்னர், "ப்ளே ஆப்" எனப்படும் நாக் அவுட் சுற்று போட்டிகள் நடைபெறும். இந்த போட்டிகளில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். ஐபிஎல் தொடரின் அரை பாதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், சில வெளிநாட்டு வீரர்கள் உலக கோப்பை பயிற்சி ஆட்டங்களில் தங்களை தயார் படுத்துவதற்காக தங்களது சொந்த நாட்டு அணிகளுக்காக திரும்புகின்றனர்.
இந்த தொடர் தொடங்கும் போது அனைத்து அணிகளும் சரிசம பலத்துடன் விளங்கினர். ஆனால், தற்போது வரை முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில் எந்தெந்த அணிகள் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் என்பதை காண முடிகிறது. அவ்வாறு, இந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற போகும் 4 அணிகள் பற்றி இங்கே பட்டியலிட்டுள்ளேன்.
#1.சென்னை சூப்பர் கிங்ஸ்:
இந்த பன்னிரண்டாவது ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் முதல் அணியாக கணிக்கப்படுகிறது. ஏனெனில், இந்த அணி விளையாடிய 10 போட்டிகளில் 3 தோல்வியுடன் 7 வெற்றிகளோடு தொடர்ந்து புள்ளி பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. மீதமுள்ள நான்கு லீக் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு அடி எடுத்து வைக்கும். பந்து வீச்சாளர்களான இம்ரான் தாகிர், தீபக் சாகர் ஆகியோர் தங்களது சீரான பந்துவீச்சில் விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவி வருகின்றனர்.
இந்த அணியின் பலவீனமே பேட்டிங் தான். ஏனெனில், பவர் பிளே எனப்படும் இன்னிங்ஸின் முதல் ஆறு ஓவர்களில் விக்கெட்களை சரமாரியாக இழந்து தட்டுத்தடுமாறி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கில் கூடுதல் கவனத்துடன் ஒருங்கிணைந்த முயற்சியுடனும் களம் இறங்கினால் நிச்சயம் அடுத்த போட்டியிலேயே வெற்றி பெற்று ப்ளே ஆப் இந்த அணி சுற்றுக்கு தகுதி பெறும்.
#2.டெல்லி கேப்பிடல்ஸ்:
இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் தங்களது உச்சகட்ட பார்மை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து வருகிறது, டெல்லி கேப்பிடல்ஸ் அணி. இந்த அணி விளையாடியுள்ள 10 போட்டிகளில் ஆறு வெற்றிகளும் நான்கு தோல்விகளையும் பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாம் இடம் வகிக்கிறது. அணியின் ஆலோசராக நியமிக்கப்பட்ட வங்காளப் புலி சவுரவ் கங்குலி இந்த அணியின் வெற்றிக்கு தூணாய் விளங்கி வருகிறார். இவர் மட்டுமின்றி, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் இந்த அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவும் டெல்லி அணிக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கிறது. பேட்டிங் வரிசையில் தொடக்க வீரர் ஷிகர் தவான், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் ஆகியோர் தொடர்ச்சியாக ரன்களை குவித்து வருகின்றனர். தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரான ரபாடா, இந்த தொடரிலேயே அதிக விக்கெட்களை கைப்பற்றி ஊதா நிற தொப்பியை தொடர்ந்து தன் வசம் வைத்துள்ளார்.
இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாத அணி என்ற மோசமான சாதனையை கொண்ட டெல்லி அணி, தற்போது அதனை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதோடு மட்டுமல்லாமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் டெல்லி அணி உள்ளது.