நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார், கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக். இதன்படி, தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோரின் விக்கெட்டுகளை விரைவிலேயே கைப்பற்றினார், சந்திப் வாரியர். பூரணின் அதிரடி மற்றும் சாம் கரணின் அரைசதம் ஆகியோரின் உதவியுடன் 183 ரன்களை குவித்தது, கிங்ஸ் லெவன் பஞ்சாப். இதன்பின்னர், கொல்கத்தா அணியின் இன்னிங்சை தொடங்கிய சப்மான் கில் மற்றும் கிறிஸ் லின் ஆகியோர் 6 ஓவர்கள் முடிவில் 62 ரன்களை குவித்தனர். தொடர்ந்து நிலைத்து ஆடிய இளம் வீரர் கில் 65 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு பாடுபட்டதோடு மட்டுமல்லாமல் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
புள்ளி பட்டியல்:
அடுத்த சுற்றான ப்ளே ஆப் சுற்றுக்கு சென்னை, டெல்லி மற்றும் மும்பை அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன. இன்னும் மீதமுள்ள ஒரு இடத்திற்கு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நேற்றைய வெற்றியோடு 13 போட்டிகளில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 வெற்றிகளை கொண்டு புள்ளிப் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இதுமட்டுமல்லாது, அணியின் நிகர ரன் ரேட் +0.173 என்ற அளவில் முன்னேற்றத்தில் உள்ளது. ப்ளே ஆப் சுற்றுக்கு இந்த அணி தகுதி பெற 43 சதவீத வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், இன்று நடைபெறும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோற்றால் நாளை நடைபெறப்போகும் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் ப்ளே ஆப் சுற்றுக்கு எளிதில் நுழைந்து விடலாம்.
நேற்றைய ஆட்டத்தில் தோல்வியுற்ற பஞ்சாப் அணி, 13 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை மட்டுமே குவித்ததன் காரணமாக புள்ளிப் பட்டியலில் ஏழாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. ஏறக்குறைய இந்த அணியின் ப்ளே ஆப் வாய்ப்பு முடிவுக்கு வந்துவிட்டது.
ஆரஞ்சு நிற தொப்பி:
தொடர்ந்து அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் கே.எல்.ராகுல் மற்றும் ரஸ்ஸல் ஆகியோர் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளனர். நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய கிறிஸ் லின் நடப்பு தொடரில் 364 ரன்கள் குவித்து, இந்த பட்டியலில் 14-ஆம் இடத்திற்கு முன்னேறினார். நேற்று அரைசதம் கண்ட இளம் வீரர் சப்மான் கில் 287 ரன்களுடன் 26வது இடத்திற்கு முன்னேறினார்.
ஊதா நிற தொப்பி:
அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளரான ரபாடா காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இம்ரான் தாஹிர் 21 விக்கெட்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். 13 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை கைப்பற்றிய பஞ்சாப் அணியின் வீரர் முகமது சமி ஐந்தாம் இடத்திற்கு முன்னேறினார். நேற்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்ட கொல்கத்தா அணி வீரர் ரசல் 11 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை எடுத்து 17 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.