2019 ஐபிஎல் தொடரின் 49வது லீக் ஆட்டம் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டம், அணிக்கு தலா ஐந்து ஓவர்களாக சுருக்கப்பட்டது. இதன்படி, பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. கோலி மற்றும் டிவில்லியர்ஸ் அணிக்கு தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். முதல் ஓவரிலேயே 23 ரன்கள் குவித்து அசத்தினர். இரண்டாவது ஓவரை சிறப்பாக தொடங்கினாலும் ராஜஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது, பெங்களூர் அணி. இருப்பினும், 5 ஓவர்கள் முடிவில் 63 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
அதற்குப் பின்னர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கில் களமிறங்க 3.2 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 41 ரன்களை குவித்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால், நேற்றைய ஆட்டம் கைவிடப்பட்டது. இதன் முடிவில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன.
#1.புள்ளி பட்டியல்:
ஏற்கனவே டெல்லி மற்றும் சென்னை அணிகள் தங்களது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்த நிலையில், மீதமுள்ள இரு இடங்களுக்கு எஞ்சியுள்ள அணிகள் போட்டியிடுகின்றன. இந்த ஆட்டத்திற்கு பிறகு, மாற்றம் கண்ட புள்ளி புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியது. இந்த அணி விளையாடியுள்ள 13 போட்டிகளில் பதினொரு வெற்றி புள்ளிகளை கொண்டுள்ளது. மற்றொரு முனையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 9 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.
#2.ஆரஞ்சு நிற தொப்பி:
டேவிட் வார்னர் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பிய நிலையில், தொடர்ந்து அவரே அதிக ரன்களை குவித்த பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். நடப்பு தொடரில் இவர் குவித்த ஒட்டுமொத்த ரன்கள் 692 ஆகும். இவருக்கு அடுத்தபடியாக, பஞ்சாப் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் 12 போட்டிகளில் விளையாடி 520 ரன்களை குவித்துள்ளார். மேலும், இவரே நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்தியராகவும் திகழ்கிறார். மூன்றாம் இடத்தில் 11 போட்டிகளில் விளையாடிய கொல்கத்தா அணி வீரர் ஆண்ட்ரே ரசல் 486 ரன்களை குவித்துள்ளார்.
#3.ஊதா நிற தொப்பி:
டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளரான ரபாடா, அதிக விக்கெட்களை கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். இவர் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். மேலும், டெல்லி அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இவரும் ஒரு காரணமாக இருக்கிறார். இவருக்கு அடுத்ததாக நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஷ்ரேயாஸ் கோபால் பதினெட்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டாம் இடம் வகிக்கிறார். இவரைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களான இம்ரான் தாகிர் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் தலா 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.