நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் 5 ஆட்டங்களில் நான்கில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. பின்னர் விளையாடிய 6 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முயற்சிகளை எடுத்து வந்தாலும், அவை எல்லாம் தோல்வியிலேயே முடிந்துவிடுகிறது. கடந்த ஆண்டில் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தற்போதைய நடப்பு தொடரில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெருமா என பலதரப்பட்ட ரசிகர்களின் மனநிலையாக உள்ளது. எனவே, இந்த தொடர்ச்சியான தோல்விகளுக்கு காரணமாய் அமைந்தவைகளை பற்றி இந்தத் தொகுப்பில் காணலாம்.
#1.மிடில் ஆர்டர் பேட்டிங்கில் நிலவும் குழப்பம்:
கொல்கத்தா அணிக்கு ஒரு சிறந்ததொரு தொடக்கத்தை துவக்க வீரர்கள் அமைத்து கொடுத்தாலும் அதனை பயன்படுத்த பின்வரும் பேட்ஸ்மேன்கள் தவறுகின்றனர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா, சப்மான் கில் ஆகியோர் தொடர்ந்து ரன்களை குவிக்காமல் தங்களது விக்கெட்களை விரைவிலேயே இழந்து தடுமாறி வருகின்றனர். கேப்டன் தினேஷ் கார்த்திக் கூட இவர்களைப் போலவே தனது பொறுப்பற்ற ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராபின் உத்தப்பா 20 பந்துகளில் வெறும் 9 ரன்களை மட்டுமே குவித்தார்.
#2.விக்கெட்டுகளை கைப்பற்ற திணறும் பந்துவீச்சாளர்கள்:
பந்துவீச்சு தரப்பில் கடந்த சீசன்களில் அமைந்தது போல நடப்பு தொடரில் கொல்கத்தா அணிக்கு சிறப்பான ஒரு பவுலிங் கூட்டணி இதுவரையிலும் அமையவில்லை. அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான கிருஷ்ணா, பெர்குசன் கரிணி ஆகியோர் எதிரணி பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பதை தடுக்க முடியாமலும் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாமலும் தவித்து வருகின்றனர். இதுவரை நடைபெற்றுள்ள 10 லீக் போட்டிகளில் 9 விக்கெட்களை மட்டுமே இந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றியுள்ளனர். இதே நிலைதான் சுழல் பந்து வீச்சு தரப்பிலும் தொடர்கிறது. இந்த அணியில் இடம் பெற்றுள்ள சுழல் பந்துவீச்சாளர்களான சுனில் நரின். குல்தீப் யாதவ் மற்றும் பியூஸ் சாவ்லா எதிர்பார்ப்புக்கு தகுந்த போல இதுவரை பந்து வீசவில்லை.
#3.ரசலையே பெரிதும் நம்பியிருக்கும் கொல்கத்தா:
கொல்கத்தா அணியில் இடம் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ரசல், இந்த நடப்பு தொடரில் தனது அபாரமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருகிறார். இவர் ஒருவர் மட்டுமே அணியை தூக்கி நின்று வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பவுலிங்கிலும் அவ்வப்போது ஓவர்களை வீசி விக்கெட்களை கைப்பற்றி வருகிறார். ஒருவேளை இவர் இந்த அணியில் இடம் பெற்றிருக்காவிட்டால், அந்த 4 வெற்றிகளும் கூட கிடைக்காமல் போயிருக்கும்.
#4.மாற்று வீரர்கள் அணியில் களமிறங்கினாலும் சோபிக்க தவறுகிறார்கள்:
கடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சுனில் நரைன் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பெறவில்லை. இவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் களமிறங்கினர். அவ்வாறு, களமிறங்கிய பேட்ஸ்மேன் நிகில் நாயக் 15 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே குவித்தார். இதேபோல், களமிறங்கிய மற்ற இரு வீரர்களான பிரித்திவிராஜ் மற்றும் கரியப்பா ஆகியோரும் தங்களது பார்மை நிரூபிக்க தவறினர்.
#5.கேப்டன்சியில் தவறான நகர்வு:
அணியில் இடம் பெற்றிருக்கும் ஆல்ரவுண்டர் ரசல் எப்போதும் இறுதிகட்ட வரிசையில் களமிறங்கும் பேட்ஸ்மேனாகவே உள்ளார். தான் முன்வரிசை பேட்ஸ்மேனாக களமிறங்க விரும்புவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார், ரசல். ஒருவேளை இவர் ஆட்டத்தில் முன்னதாகவே களமிறங்கினால் கூடுதலாக பந்துகளை சந்தித்து இன்னும் அதிக ரன்களை குவிப்பார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனவே, இவர் இனி வரும் போட்டிகளில் முன் வரிசையில் இடம்பெற வேண்டும். இதுபோலவே, பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பவுலிங்கில் பியுஸ் சாவ்லாவிற்கு பந்துவீசும் முன்னே குல்தீப் யாதவ் பந்து வீசினார். மேலும், பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்படும் பிராத்வெய்ட் இன்னும் ஆடும் லெவனில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.
இனி கொல்கத்தா அணி என்ன செய்யலாம்?
வரும் 25ம் தேதி நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மேற்கண்ட காரணங்களை திருத்தி கொல்கத்தா அணியில் மாற்றங்களை கொண்டு வந்தால், அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். இல்லையெனில், பிளே ஆப் சுற்றில் வாய்ப்பு கூட இந்த அணிக்கு கிடைக்காமல் போகும்.