பன்னிரண்டாவது ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டி இன்று ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை நான்காவது முறையாக நடப்பு சீசனில் சந்திக்கவுள்ளது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் அணியாக நான்காவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லும். ஐபிஎல் தொடர்களில் சிறந்து விளங்கும் இந்த இரு அணிகளும் சில வரலாறுகளை கொண்டு உள்ளன. அவற்றில் மும்பை அணியின் ஆதிக்கம் சற்று மேலோங்கி உள்ளது. ஏனென்றால், நடப்பு தொடரில் இதுவரை 3 போட்டிகளில் இவ்விரு அணிகளும் மோதியதில் ஒரு போட்டியில் கூட சென்னை அணி வெற்றி பெறவில்லை. எனவே, மும்பை அணி எவ்வாறு தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது என்பது பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
நேருக்கு நேர்:
இவ்விரு அணிகளும் மொத்தம் 27 முறை ஐபிஎல் போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில் மும்பை அணி 16 வெற்றிகளை பெற்று முன்னிலை வைக்கின்றது. சென்னை அணி வெறும் 11 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் பத்து வெற்றிகளுக்கு மேல் பெற்ற ஒரே அணி என்ற சாதனையையும் கொண்டுள்ளது, மும்பை அணி. இவ்விரு அணிகளுக்கு எதிரான போட்டிகளில் 50 சதவீதத்திற்கும் மேலான வெற்றி பங்கை கொண்டுள்ளது, மும்பை இந்தியன்ஸ் அணி.
2019ஆம் ஆண்டில் நேருக்கு நேர்:
இதுவரை நடப்பு சீசனில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் மும்பை அணி வென்றுள்ளது. குறிப்பாக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரு போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளது, மும்பை அணி. இறுதியாக சென்னை அணி விளையாடிய 19 போட்டிகளில் இரண்டில் மட்டுமே தோற்றுள்ளது. அந்த இரண்டு போட்டிகளும் மும்பை அணிக்கு எதிரானவை ஆகும்.
இறுதிப் போட்டியில் நேருக்கு நேர்:
மும்பை மற்றும் சென்னை அணிகள் இதுவரை மூன்று இறுதிப் போட்டிகளில் மோதியுள்ளன. இன்று இவ்விரு அணிகளும் மோதுவது நான்காவது முறையாகும். 2010ஆம் ஆண்டு மட்டுமே சென்னை அணி வென்றுள்ளது. அதன்பின் வந்த 2013 மற்றும் 2015ம் ஆண்டுகளில் மும்பை அணி கோப்பையை வென்றுள்ளது.
மற்ற புள்ளி விவரங்கள்:
1.சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக நான்கு முறை வெற்றி பெற்ற ஒரே அணி என்ற பெருமையை கொண்டுள்ளது, மும்பை அணி. இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்றால் ஐந்தாவது முறையாக வெற்றியை பதிவு செய்யும்.
2.இதுவரை ஐபிஎல் வரலாற்றில் 100 ரன்களுக்குள் சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரே ஒருமுறை மட்டும் தான் ஆட்டமிழந்துள்ளது. இது 2013ம் ஆண்டு நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டி ஆகும்.
3.மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டிகளில் இதுவரை எந்தவொரு சென்னை பேட்ஸ்மேனும் சதம் அடித்ததில்லை. மும்பை அணியின் சனத் ஜெயசூர்யா மட்டுமே சென்னை அணிக்கு எதிரான போட்டிகளில் சதம் அடித்த ஒரே மும்பை வீரர் ஆவார்.
4.மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் எந்த ஒரு சென்னை பந்து வீச்சாளரும் 5 விக்கெட்களை கைப்பற்றி இது இல்லை. மாறாக, சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் ஹர்பஜன்சிங் மட்டுமே 5 விக்கெட்களை கைப்பற்றி உள்ள ஒரே பந்துவீச்சாளர் ஆவார்.