2007ஆம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதலாவது ஐசிசி உலகக் கோப்பையை மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி வென்ற பிறகு, இந்தியன் பிரீமியர் லீக்கை அறிமுகப்படுத்தி புரட்சியை ஏற்படுத்தியது, பிசிசிஐ. இந்த வரலாற்று வெற்றி பிசிசிஐ குறுகிய வடிவிலான மிகப்பெரிய தொடரை இந்தியாவில் நடத்த காரணமாய் அமைந்தது. எவ்வித அச்சமும் இன்றி தனக்கேற்ற பாணியில் இளம் வீரர்கள் அனைவரும் ஒருமித்த தங்களது திறனை இந்த குறுகிய கால தொடரில் வெளிப்படுத்தினர். பல மூத்த வீரர்களும் தங்களின் திறமையை நிரூபிக்க தவறியது இல்லை. இருப்பினும், இந்திய அணியின் சில மூத்த வீரர்கள் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முன்னரே ஓய்வு பெற்று விட்டனர். அப்படி மூன்று முக்கிய இந்திய ஜாம்பவான்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.அனில் கும்ப்ளே:
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான அணில் கும்பளே, ஒரு சர்வதேச டி20 போட்டிகளில் கூட விளையாடியதில்லை. இருப்பினும், இவர் ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு மூன்று சீசன்களில் விளையாடினார். இவரது தலைமையில் 2009ஆம் ஆண்டு பெங்களூர் அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. இருப்பினும், தோல்வியைத் தழுவியது. அதன் பின்னர், நடைபெற்ற தொடரில் நம்பிக்கையுடன் பெங்களூர் அணி அரையிறுதி போட்டி வரை முன்னேறி மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி பெற்று தொடரில் இருந்து வெளியேறியது. இதுவரை ஒரு ஐபிஎல் பட்டத்தை வெல்லாத வீரராக அணியில் இருந்தாலும் பெங்களூரு அணிக்கான ஆட்டத்தை மாற்றக்கூடிய வீரராக திகழ்ந்தார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
#2.ராகுல் டிராவிட்:
"இந்தியாவின் சுவர்" என்று வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரர்களில் ஒருவர் ஆவார். இருப்பினும், இவர் ஐபிஎல் தொடரில் ஒரு சிறந்த வீரர் ஆகவே விளையாடினார். இவர் 2008 ஆம் ஆண்டு பெங்களூர் அணியில் இடம் பெற்று தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அதே அணியில் விளையாடினார். அதன்பின்னர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒப்பந்தமாகி 2013ஆம் ஆண்டு வரை தொடர்ந்து அதே அணிக்காக விளையாடினார். இருப்பினும், இவர் ஒருமுறை கூட ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் தொடரில் கூட இறுதிப்போட்டி வரை முன்னேறியது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியிடம் அந்த போட்டியில் தோல்வி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
#3.சௌரவ் கங்குலி:
"தாதா "என்று அனைவராலும் புகழப்படும் சவுரவ் கங்குலி, ஐபிஎல் போட்டிகளில் மோசமான சாதனைகளை படைத்துள்ளார். இவர் 5 ஐபிஎல் தொடர்களில் விளையாடி ஒரு முறை கூட தனது அணியை முதல் நான்கு அணிகளுக்குள் இடம்பெறச் செய்யவில்லை. 2008ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை தனது சொந்த ஊர் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வழிநடத்தினார். இருப்பினும், ஒருமுறை கூட இவர் அந்த அணியை அடுத்த சுற்றுக்கு அழைத்துச் செல்லவில்லை. அதன் பின்னர், புனே வாரியர்ஸ் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடினார் அந்த அணியும் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.