ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணிகளின் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இந்த அணி இரு முறை ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளது. உலகத்தரமான டி20 அணிகளில் ஒன்றான கொல்கத்தா அணி, பல்வேறு சிறந்த வீரர்களை தனது அணியில் கொண்டுள்ளது. பல்வேறு உலகத்தர வீரர்கள் கொல்கத்தா அணிக்காக சிறப்பக விளையாடிய போதிலும், சில வீரர்கள் இந்த அணிக்காக நன்றாக விளையாடவில்லை. இதன் காரணமாக கொல்கத்தா அணி நிர்வாகம் அவர்களை அடுத்தடுத்து வந்த ஐபிஎல் ஏலங்களில் விடுவித்தது. அவ்வாறு, கொல்கத்தா அணியை விட்டு வெளியேறிய பிறகு ஐபிஎல் தொடரில் பிற அணிகளுக்காக ஜொலித்த வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.கிறிஸ் கெயில்:
டி20 தொடர்களின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருபவர் வெஸ்ட் இண்டீஸ் வீரர், கிறிஸ் கெயில். இதுவரை டி20 போட்டிகளில் 22 சதங்களும் 101 அரைச்சதங்களையும் கடந்துள்ளார். ஐபிஎல் தொடரில் இவர் அளித்துள்ள ஐந்து சதங்களில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக நான்கு முறையும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஒரு முறையும் அடித்துள்ளார். ஆனால், இவர் ஒரு காலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு விளையாடி வந்தார். இவர் அந்த அணியில் போதிய ஆட்டத்திறனை வெளிப்படுத்தாத காரணத்தால், கொல்கத்தா அணி நிர்வாகம் இவரை விடுவித்தது. பின்னர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இவரை ஏலத்தில் எடுத்து பல வெற்றிகளைக் குவித்தது. கடந்த ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு தற்போது வரை அதே அணியில் நீடித்து வருகிறார்.
ஒவ்வொரு அணியிலும் இவர் குவித்த ரன்கள்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 863 ரன்கள்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 3163 ரன்கள்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் - 789 ரன்கள்
#2.பிரண்டன் மெக்கலம்:
டி20 போட்டிகளில் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவர், நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கலம். இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கேப்டனாகவும் ஒரு வீரராகவும் என இருவேறு வடிவங்களில் களமிறங்கியுள்ளார். 2012 ஆம் ஆண்டில் தனது முதலாவது ஐபிஎல் பட்டத்தை வென்ற கொல்கத்தா அணியில் பார்ம் இன்றி தவித்த பிரண்டன் மெக்கல்லத்தை அதே ஆண்டு விடுவித்தது, கொல்கத்தா அணி நிர்வாகம் . பின்னர், கொச்சி டஸ்கர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஒரே ஆண்டில் அந்த அணி ஐபிஎல் தொடரில் இருந்து விலகியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து இரு சீசன்களில் இடம்பெற்று அந்த இரு சீசனிலும் 400க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்தார். 2016 ஆம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணியிலும் இடம் பெற்றார். இறுதியாக பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு அதே ஆண்டில் ஓய்வும் பெற்றார். ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டியில் கொல்கத்தா அணிக்காக களமிறங்கிய இவர், 158 ரன்களை குவித்து சாதனை படைத்தார். மேலும், அந்த சாதனை தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் எவராலும் முறியடிக்கப்படாத ஒன்றாகவே இருந்தது.
ஒவ்வொரு அணிகளுக்காக இவர் குவித்த ரன்கள்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 882 ரன்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் - 841 ரன்கள்
#3.சூர்யகுமார் யாதவ்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தன்னால் முடிந்த ஒரு சிறந்த பங்களிப்பை அளித்து வந்தவர், மும்பையைச் சேர்ந்த இந்த சூர்யகுமார் யாதவ். இவருக்கு எத்தகைய வாய்ப்புகள் வழங்கப்பட்டாலும் அதனைப் பயன்படுத்தி ஒரு சிறந்த இன்னிங்சை அளித்தார். இதன் மூலம் ரசிகர்கள் பலரின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார். கொல்கத்தா அணி நிர்வாகம் இவரை ,11-வது ஐபிஎல் சீசனில் விடுவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுத்து தங்களது அணிக்காக தொடக்க பேட்ஸ்மேன்கள் வரிசையில் களம் இறங்க செய்தது. ஆனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இவர் ஒரு பின்கள பேட்ஸ்மேனாகவே களமிறக்கப்பட்டார். கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் பேட்ஸ்மேனாக இவர் 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.
இருவேறு அணிகளுக்காக இவர் குவித்த ரன்கள்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 608 ரன்கள்
மும்பை இந்தியன்ஸ் - 695ரன்கள்