பன்னிரண்டாவது ஐபிஎல் சீசனில் பல அற்புதங்கள் இன்றுவரை நடைபெற்றுள்ளன. அதனால், இன்னும் ஏன் இந்தத் தொடர் உலகின் மிகப்பெரிய டி20 தொடராக விளங்குவதற்கு காரணத்தையும் அவ்வப்போது உணர்த்தப்பட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல் ஆகிய அணிகள் நடப்பு தொடரில் ஆதிக்கம் செலுத்தும் அணிகளாக விளங்கி வருகின்றன. பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் தொடர் தோல்விகளால் தொடர் முழுவதுமே எழுச்சி பெறாமல் இருக்கின்றன. அவ்வகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்திய அஜிங்கிய ரஹானே முதல் 8 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றியை தேடி தந்தார். எனவே, அணி நிர்வாகம் ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகினர்.
அணிக்கு வேறு கேப்டனை நியமிக்கலாம் என அணி நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவன் ஸ்மித் தொடரின் பிற்பாதியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதன்மூலம், கடந்த நான்கு போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தமது தலைமையில் ஓரளவுக்கு மாற்றங்களை கொண்டு வந்தார், ஸ்டீவன் ஸ்மித். எனவே, ஐபிஎல் தொடரில் இதுபோன்று தொடரின் பிற்பாதியில் கேப்டன்களாக நியமிக்கப்பட்ட நான்கு தருணங்களை இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
#1.வி.வி.எஸ்.லட்சுமணுக்கு பதிலாக கில்கிறிஸ்ட்:
2008 ஐபிஎல் தொடரில் பங்கேற்ற 8 அணிகளில் ஒன்று, டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதரபாத். இந்த அணியின் ஆடம் கில்கிறிஸ்ட், ஆண்டிரூவ் சைமன்ட்ஸ், சாகித் அப்ரிடி, கிப்ஸ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இருந்தது. இதுபோக, இந்திய அணியின் இளம் வீரர்களான ரோகித் சர்மா, வேணுகோபால் ராவ் மற்றும் பிரக்யான் ஓஜா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த அணியை இந்திய அணியின் அனுபவ வீரர் லக்ஷ்மன் வழிநடத்திச் சென்றார்.
எதிர்பாராத விதமாக ஏற்பட்ட காயத்தால் தொடரின் 6 போட்டிகளுக்கு பின்னர் விலகினார், லக்ஷ்மன். இதனால், அணி நிர்வாகம் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்டிடம் கேப்டன் பொறுப்பை வழங்கியது. கில்கிறிஸ்ட் ஒரு சிறந்த தலைமைப் பண்பைக் கொண்டிருந்தாலும் தொடரின் முடிவில் இந்த அணி வெறும் இரு வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. ஐபிஎல் தொடரில் கேப்டன்ஷிப் மாற்றப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
#2.டேனியல் வெட்டோரிக்கு பதிலாக விராத் கோலி:
2011ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு வரை முன்னேறியது, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ். பிறகு 2012 ஆம் ஆண்டில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று சிறப்பாக தொடங்கிய போதிலும் தொடர்ந்து 3 ஆட்டங்களில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் இடம் பெறாததால் தோல்வியை தழுவியது, பெங்களூர் அணி. பெங்களூர் அணியின் துருப்புச்சீட்டாக விளங்கிய சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனை அணியின் ஆடும் லெவனில் கேப்டன் டேனியல் வெட்டோரி இணைக்கவில்லை.
எனவே, அணி நிர்வாகம் கேப்டன் பொறுப்பை இளம் வீரரான விராட் கோலிக்கு அளித்தது. தொடரின் 6 போட்டிகளில் வழிநடத்திச் சென்ற இவர், நான்கு போட்டிகளில் வெற்றியை பெற்றுத் தந்தார். தொடரின் முடிவில் 17 புள்ளிகளோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் நிகர ரன் ரேட் அடிப்படையில் தனது பெரிய வாய்ப்பை இழந்தது, பெங்களூர் அணி.
#3.ரிக்கி பாண்டிங்கிற்கு பதிலாக ரோகித் சர்மா:
முதல் 5 ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, ஒருமுறைகூட கோப்பையை வென்றதில்லை. ஆனால், 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியுற்று அடுத்து வந்த மூன்று போட்டிகளில் தொடர் வெற்றிகளைப் பெற்றது, மும்பை அணி. சிறப்பான பேட்டிங் அணிக்கு அமைந்திருந்தாலும் கேப்டன் ரிக்கி பாண்டிங் தொடர்ந்து தனது மோசமான ஃபார்மை வெளிப்படுத்தினார்.
இதன் காரணமாக, இளம் வீரர் ரோஹித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. இவரின் தலைமையில் கீழ் ப்ளே ஆப் சுற்றுக்கு அடி எடுத்து வைத்தது, மும்பை இந்தியன்ஸ். கடைசி 10 லீக் போட்டிகளில் 8 வெற்றிகளை குவித்தது இந்த அணி, இறுதிப் போட்டியில் சென்னை அணியை தோற்கடித்து தனது முதலாவது ஐபிஎல் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.
#4.குமார் சங்ககாராவுக்கு பதிலாக கேமரூன்:
2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன் பின்னர், நடைபெற்ற இரு சீசன்களில் சிறப்பாக விளையாடவில்லை. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஆறு வெற்றிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் ஏழாமிடத்திற்கு இந்த அணி தள்ளப்பட்டது. இதன் பின்னர், 2012ஆம் ஆண்டு குமார் சங்ககாரா அணியை வழி நடத்தினார்.
தொடர்ச்சியாக தோல்வியை தழுவியதால், இந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார், சங்ககரா. இவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் ஒயிட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். பேட்டிங் மற்றும் பௌலிங் என இரு துறைகளிலுமே தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெக்கான் சார்ஜர்ஸ் அணி, ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனது. தொடரின் முடிவில் 4 வெற்றிகளோடு புள்ளி பட்டியலில் எட்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது டெக்கான் சார்ஜர்ஸ் அணி.