டி20 கிரிக்கெட்டில் வெற்றிகரமான அணிகளில் ஒன்று, மும்பை இந்தியன்ஸ். இந்த அணி மூன்று முறை ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளது. மேலும் இரு முறை சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் வென்றுள்ளது. பல்வேறு நட்சத்திர வீரர்கள் இந்த அணி கொண்டுள்ளதால் இந்த தொடர் வெற்றிகளுக்கு காரணமாய் அமைந்துள்ளது. இந்த அணியின் உரிமையாளரான முகேஷ் அம்பானி) பல்வேறு திறமை வாய்ந்த வீரர்களை தன் அணியில் இணைத்து வருகிறார். அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் தங்களது வெற்றியை கண்டிருந்தாலும் சில வீரர்கள் அணியில் ஜொலிக்க தவறினர். அவ்வாறு, சிறக்க தவறிய வீரர்களை அடுத்தடுத்து வந்த ஐபிஎல் ஏலங்களில் இந்த மும்பை அணி நிர்வாகம் விடுவித்தது. அதன் பின்னர், இந்த வீரர்கள் அனைவரும் பிற அணிகளுக்கு ஒப்பந்தம் ஆகினர்.
அவ்வாறு, மும்பை அணியை விட்டு வெளியேறிய பிறகு பிற அணிகளில் ஜொலித்த மூன்று வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காண்போம்.
#3.யுஸ்வேந்திர சாஹல்:
தற்போதைய கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ரிஸ்ட் ஸ்பின்னர்களில் ஒருவராக வலம் வருபவர், யுஸ்வேந்திர சாஹல். இவர் முதல் முறையாக 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக்கில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். இவர் மும்பை அணியில் இது போன்றதொரு வெற்றியைக் கண்டிருந்தாலும் அந்த சீசனில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் விளையாட இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. பின்னர், இவர் அணியை விட்டு வெளியேற்றப்பட்டார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன் பின்னர், தொடர்ந்து ஆறு ஆண்டு காலமாக அதே அணியில் இடம் பெற்று பந்துவீச்சில் அசத்தி வருகிறார். இதன்மூலம் இந்திய அணியிலும் இடம் பெற்று உலகின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். 28 வயதான இவர், பெங்களூர் அணிக்காக என்பது போட்டிகளில் விளையாடி உள்ளார். அவற்றில் 97 விக்கெட்களையும் கைப்பற்றி உள்ளார். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியாகத் திகழும் பெங்களூரு சின்னசாமி மைதானத்திலும் கூட தனது சிறப்பான பந்துவீச்சை தொடர்ந்து அளித்து வருகிறார், யுஸ்வேந்திர சாஹல்.
#2.ஜோஸ் பட்லர்:
உலகின் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழும் ஜோஸ் பட்லர். தனது ஆரம்ப கால ஐபிஎல் வாழ்க்கையை மும்பை அணியில் இருந்து தொடங்கினார். இங்கிலாந்தை சேர்ந்த விக்கெட் கீப்பரான இவர், மும்பை அணிக்காக இடம்பெற்றிருந்தபோதிலும் பெரிய அளவிலான தாக்கத்தை உண்டாக்கவில்லை. தொடர்ந்து இரு சீசன்கள் இந்த அணிக்காக விளையாடியுள்ள இவர், ஒரே ஒருமுறைதான் அரைசதத்தை கடந்தார். எனவே, 2018ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் ஆனார். அந்த தொடரின் முதல் பாதியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் கண்டு திணறி வந்தார். தொடரின் பிற்பாதியில் நடைபெற்ற ஆட்டங்களில் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். அதன்பின்னர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இவர் எட்டு அரைச்சதங்களை அடித்துள்ளார். மேலும், இவரது ஸ்ட்ரைக் ரேட் 150 என்ற வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.
#1.வெய்ன் பிராவோ:
டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் என்று கூறினால், அது பிராவோ தான். ஏனெனில், இவர் உலகம் முழுவதும் நடைபெறும் டி20 தொடர்களில் பல்வேறு அணிகளுக்காக இடம்பெற்று தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவர் தனது ஐபிஎல் வாழ்க்கையை மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடங்கி, தொடர்ந்து முதல் மூன்று தொடர்களில் இதே அணியில் இடம் பெற்றார். ஆனால், இவர் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த காரணத்தினால் 2011ம் ஆண்டு அணியில் இருந்து இருந்து விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார். அவ்வப்போது தோனியிடம் ஆலோசனை கேட்டதன் பேரில் இறுதிக்கட்ட ஓவர்களை சிறப்பாக வீசக்கூடிய பந்துவீச்சாளர் ஆனார். மேலும், இவர் டி20 போட்டிகளில் மிகவும் மதிப்புடைய வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். பேட்டிங்கிலும் கணிசமான பங்களிப்பை அளிக்க கூடிய இவர், தனது பேட்டிங்கால் பலமுறை சென்னை அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார்.