கடந்த 12 வருடங்களாக ஐபிஎல் சீசன்களில் தொடர்ந்து இடம்பெற்று வரும் அணிகளில் ஒன்றான ஹைதராபாத் இரு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த 12 வருடங்களில் இருமுறை அணியின் உரிமையாளர்கள் மாறி இருக்கின்றனர். 2008ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடரில் "டெக்கான் சார்ஜர்ஸ்" என இந்த அணி அழைக்கப்பட்டது. இந்த அணியில் ஆடம் கில்கிறிஸ்ட், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், சாகித் அப்ரிடி, சமிந்தா வாஸ், ஆர்.பி.சிங், ரோகித் சர்மா என பல நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். எனவே, அன்று முதல் இன்று வரை ஹைதராபாத் அணியில் இடம் பெற்று ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்ற மூன்று சிறந்த வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#3.ரோகித் சர்மா - டெக்கான் சார்ஜர்ஸ் (2008 - 2010):
2009ஆம் ஆண்டு ஹைதராபாத் அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு முக்கிய காரணமாய் அமைந்தவர், ரோகித் சர்மா. அந்த ஐபிஎல் தொடரில் 300-க்கும் மேற்பட்ட ரன்களையும் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு பங்காற்றினார். அணியில் இடம் பெற்ற மூத்த வீரர்களான ஆடம் கில்கிறிஸ்ட், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், ஷாகித் அப்ரிடி, சமிந்தா வாஸ் போன்றோர் இடம்பெற்ற போதிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்தார்,ரோஹித் சர்மா. பின்னர், 2011 ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இடம்பெற்று தொடர்ந்து அந்த அணியிலேயே நீடித்து வருகிறார்.
#2.ஆடம் கில்கிறிஸ்ட் - டெக்கான் சார்ஜர்ஸ் (2008 - 2010):
2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி ஹைதராபாத்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகளில் ஒரு வெற்றியை கூட பெறாமல் தொடரை முறித்தது. 2008ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்கு வி.வி.எஸ்.லக்ஷ்மன் கேப்டனாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கில்கிறிஸ்ட் 2009ஆம் ஆண்டு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையின் கீழ், அணியில் பல்வேறு மாற்றங்கள் காணப்பட்டன. அதுமட்டுமல்லாமல் அணியின் வெற்றிகளுக்கு தொடர்ச்சியாக பாடுபட்டு முதலாவது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.
ஒரு வீரராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த கேப்டனாகவும் அந்த தொடர் இவருக்கு அமைந்தது. இதன் மூலம், ஹைதராபாத் அணியின் லட்சக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 35 பந்துகளில் 85 ரன்களை குவித்து அசத்தினார். இது எந்த ஒரு ஹைதராபாத் ரசிகரும் தன் வாழ்நாளில் மறக்க முடியாத தருணமாகும்.
#1.டேவிட் வார்னர் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2014 முதல் இன்று வரை):
2014ஆம் ஆண்டு ஐதராபாத் அணியில் இணைவதற்கு முன்னர், டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பெற்று சிறப்பாக விளையாடினார் டேவிட் வார்னர். அதன் பின்னர், ஹைதராபாத் அணியில் இணைந்து தொடர்ச்சியான வெற்றிகளுக்கு காரணமாக அமைந்தார். மேலும், இவரது தலைமையில் 2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது. பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியதால், கடந்த ஆண்டு இவர் ஐபிஎல் தொடரில் விளையாட வில்லை. ஓராண்டு இடைவெளிக்கு பின்னர் திரும்பிய இவர், நடப்பு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய 692 ரன்கள் குவித்து தொடரின் அதிக ரன்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார்.