2019 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. இவ்விரு அணிகளும் ஏற்கனவே 3 முறை நடப்பு சீசனில் மோதியுள்ளது. மேலும், நடப்பு சீசனில் இன்றைய போட்டி இவ்விரு அணிகளும் மோதுவது நான்காவது முறையாகும். அதுமட்டுமின்றி, ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை இறுதிப்போட்டிகளில் மோதியுள்ள அணிகளில் இவ்விரு அணிகளும் முன்னிலை வகிக்கின்றனர். முதன்முறையாக 2010ஆம் ஆண்டு சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. அந்த போட்டியில், சென்னை அணி மும்பையை தோற்கடித்து தனது முதலாவது ஐபிஎல் பட்டத்தை வென்றது.
மீண்டும் 2013 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் இந்த அணிகள் மோதிய இறுதிப் போட்டிகளில் மும்பை அணி இரு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. தற்போது இவ்விரு அணிகள் மோதுவது நான்காவது முறையாகும். எனவே, இன்றைய போட்டியில் தனது நான்காவது ஐபிஎல் மகுடத்தை எந்த அணி கைப்பற்ற போகிறது என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்த வண்ணம் உள்ளது. அவ்வாறு, இவ்விரு அணிகளும் மோதிய ஐபிஎல் இறுதி ஆட்டங்களில் படைக்கப்பட்ட சாதனைகளைப் பற்றி இந்த தொகுப்பு விளக்குகின்றது.
பேட்டிங் சாதனைகள்:
202 / 5 - 2015ஆம் ஆண்டு சென்னை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்களை குவித்தது. இது இவ்விரு அணிகளும் மோதிய இறுதிப் போட்டியில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும்.
125 / 9 - 2013ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களை குவித்ததே குறைந்தபட்ச ஸ்கோராக பதிவாகியுள்ளது.
123 - மும்பை அணியின் கீரன் பொல்லார்டு இவ்விரு அணிகளுக்கு இடையான இறுதி ஆட்டங்களில் 123 ரன்களை குவித்தது ஒரு வீரரின் ஒட்டுமொத்த அதிகபட்ச ரன்களாகும்.
68 - 2015இல் மும்பை அணியின் லென்டில் சிம்மன்ஸ் 68 ரன்கள் குவித்ததே தனிநபர் அதிகபட்ச ஸ்கோராகும்.
6 - இவ்விரு அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டிகளில் இதுவரை ஆறு அரைசதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.
40 - இவ்விரு அணிகளுக்கு எதிரான போட்டிகளில் 40 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளன.
8 - மும்பை அணியின் பொல்லார்டு இதுவரை 8 சிக்சர்களை அடித்து அதிக சிக்சர்களை அடித்து வீரர்களில் முன்னிலை வகிக்கிறார்.
12 - மீண்டும் ஒரு முறை அதிக பவுண்டரிகளை குவித்த வீரர்கள் முன்னிலை வகிக்கிறார், கீரன் பொல்லார்டு.
பவுலிங் சாதனைகள்:
6 - சென்னை அணியின் பிராவோ 6 விக்கெட்களை கைப்பற்றியதே அதிகபட்ச விக்கெட்டுகளை கைப்பற்றி பந்துவீச்சாளர் ஆவார் .
4 / 42 - 2013ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் பிராவோ 42 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியது சிறந்த பந்துவீச்சாக பதிவாகியுள்ளது.
விக்கெட் கீப்பிங் சாதனைகள்:
3 - சென்னை அணியின் கேப்டன் தோனி தமது விக்கெட் கீப்பிங்கால் மூன்று முறை எதிரணி பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இது சிறந்த விக்கெட் கீப்பிங் சாதனையாகும்.
ஃபீல்டிங் சாதனைகள்:
3 - சுரேஷ் ரெய்னா இதுவரை மூன்று கேட்ச்களை பிடித்து எதிரணியினரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இது சிறந்த பீல்டிங் சாதனையாகும்.