இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் அனில் கும்ப்ளே, நடப்பு ஐபிஎல் தொடரில் வீரர்களின் சிறப்பான செயல்பாடுகளை பொறுத்து, தனது விருப்ப ஆடும் லெவனை தேர்ந்தெடுத்துள்ளார். முதல் மூன்று ஐபிஎல் சீசன்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பெற்றார், அணில் கும்ப்ளே. 2009ஆம் ஆண்டு தமது தலைமையில் பெங்களூர் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். எனவே, ஐபிஎல் பற்றிய தகுந்த அனுபவமுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, தமது விருப்ப ஆடும் லெவனை வெளியிட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகளின் விதிப்படி, ஒரு அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இடம் பெற வேண்டும். இதனை தமது விருப்ப அணியிலும் பின்பற்றியுள்ளார், இந்த சுழல் பந்துவீச்சாளர்.
இவரது அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் வார்னர் ஆகியோரை இணைத்துள்ளார். இவ்விரு வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார்கள். இவர்களின் ஆட்டத்தை அவர்களது அணிகள் பெரிதும் நம்பியுள்ளது. மேலும், டேவிட் வார்னர் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக திகழ்கிறார். வெறும் 12 போட்டிகளில் 692 ரன்களை குவித்துள்ளார். அனில் கும்ப்ளேவின் அணியில், மிடில் ஆர்டர் பேட்டிங்கில் இரு விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். டெல்லி அணியின் இளம் வீரர்கள் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இந்த விருப்ப அணியில் இணைந்து உள்ளனர்.
இவரது அணியை வழிநடத்த தோனி கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏனெனில், தோனி நடப்பு தொடரில் சென்னை அணியை தனியாளாய் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதுமட்டுமல்லாது, சில நெருக்கடி நிலைகளையும் திறம்பட கையாண்டுள்ளார். 200க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளங்கும் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஆந்திரே ரசல், இவரது அணியில் இடம் பெற்றுள்ளார். இவரோடு மும்பை அணியில் அற்புதமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும், ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியாவும் இந்த ஆடும் லெவனில் உள்ளார். மேலும், ஸ்ரேயாஸ் கோபால் மற்றும் இம்ரான் தாகிர் என இரு சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த சுழற்பந்து வீச்சாளர்கள் ஆவர். உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களான ரபாடா மற்றும் பும்ரா ஆகியோர் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளனர். ஆகையால், இவர்கள் இருவரும் அனில் கும்ப்ளேவால் இந்த அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அணில் கும்ப்ளேவின் விருப்ப ஆடும் லெவன்:
டேவிட் வார்னர், ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், தோனி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஆந்திரே ரசல், இம்ரான் தாஹிர், ஸ்ரேயாஸ் கோபால், ரபாடா மற்றும் பும்ரா.
பன்னிரண்டாவது ஐபிஎல் தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை உடன் முடிவுக்கு வருகிறது. இன்னும் இந்த சீசனில் இரு போட்டிகள் எஞ்சியுள்ளன என்பது குறிப்பிடதக்கது.