இந்தியன் பிரீமியர் லீக்-கின் அடுத்த சீசனுக்கு 6 மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில் ஐபிஎல் அணிகள் தங்களது அணியை தயார் படுத்தும் விதமாக தங்களுக்குள்ளாக வீரர்களை பரிமாற்றம் செய்து வருகின்றனர். 2020 ஐபிஎல் தொடரின் முதல் பரிவர்த்தனையாக மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் மயான்க் மார்கன்டேவை டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு பரிமாற்றம் செய்துவிட்டு அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் ஆல்-ரவுண்டர் ஷேர்ஃபேன் ரூதர்போர்ட்-டை தங்கள் அணியில் இணைத்துக் கொண்டது.
மயான்க் மார்கன்டேவிற்கு 2018 ஐபிஎல் தொடர் மிகவும் சிறப்பாக அமைந்தது. ஆனால் காயம் காரணமாக 2019 ஐபிஎல் தொடர் முற்றிலும் மோசமாக அமைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு லெக் ஸ்பின்னராக ராகுல் சகார் கிடைத்த காரணத்தால் மயான்க் மார்கன்டேவிற்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. மறுமுனையில் ஷேர்ஃபேன் ரூதர்போர்ட் மிகவும் அதிரடி ஆட்டக்காரர் இருப்பினும் டெல்லி கேபிடள்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளைப் போலவே மற்ற அணிகளும் 2019 ஐபிஎல் தொடரில் சொதப்பிய வீரர்களை விடுவித்து சில புது முகங்களை அணியில் இணைக்க முயற்சி செய்து வருகிறது. மேலும் ஐபிஎல் அணிகளில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஆடும் XIல் இடம்பெற முடியும் என்ற காரணத்தால் சில வீரர்களை இறுதிவரை பயன்படுத்த முடியாமலேயே போகிறது. ஐபிஎல் அணிகள் தங்கள் அணிக்காக கடந்த சீசனில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களை வெளியேற்றிவிட்டு, கடந்த சீசனில் தாங்கள் செய்த தவற்றை கழையும் திறமையுள்ள வீரர்களை அணியில் களமிறக்க முயற்சி செய்துவருகிறது.
நாம் இங்கு 2020 ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக பரிமாற்றம் செய்யப்பட உள்ள 5 வீரர்களைப் பற்றி காண்போம்.
#5 சிவம் தூபே - மும்பை இந்தியன்ஸ்
2019 ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்பாக சிவம் தூபே மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. மும்பையைச் சேர்ந்த ஆல்-ரவுண்டரான இவர் அதிரடி ஹீட்டிங் பேட்டிங்கை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக வெளிபடுத்தி ஐபிஎல் தொடரில் தன் பெயரை பதிவு செய்து தக்கவைத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிவம் தூபே பெங்களூரு அணிக்காக ரன் குவிக்க மிகவும் மோசமாக தடுமாறினார். 4 போட்டிகளில் பங்கேற்ற இவர் 40 ரன்கள் மட்டுமே அடித்தார். பௌலிங்கில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அடுத்த சீசனில் சிவம் தூபே-வை அணியிலிருந்து விடுவிக்கும் என தெரிகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி 2019 ஐபிஎல் ஏலத்தில் சிவம் தூபே-வை எடுக்க முயற்சித்தது. ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அவரை ஏலத்தில் எடுத்துவிட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இளம் வீரர் சிவம் தூபே-வை அணியிலிருந்து வெளியேற்றினால் கண்டிப்பாக தற்போதைய ஐபிஎல் சேம்பியன் மும்பை இந்தியன்ஸ் தங்கள் அணியில் இனைத்துக் கொள்ளும். சிவம் தூபே தற்போது இந்தியா-ஏ அணியில் சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்தி வரும் நிலையில் அடுத்த ஐபிஎல் தொடரில் மிகுந்த நம்பிக்கையுடன் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்துவார்.
#4 கரூன் நாயர் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
மிகவும் அதிரடியாக முச்சதத்துடன் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வைத் தொடங்கிய கரூன் நாயரின் கிரிக்கெட் வாழ்வு மிகவும் மோசமாக தற்போது உள்ளது. சர்ச்சைக்குரிய வகையில் இந்திய டெஸ்ட் அணியிலிருந்து கரூன் நாயர் நீக்கப்பட்டுள்ளார். அத்துடன் இவரது ஐபிஎல் கிரிக்கெட் வாழ்வும் தற்போது மோசமடைத்துள்ளது.
ஒரு காலத்தில் கரூன் நாயர் ஒரு முன்னணி வீரராக ஐபிஎல் தொடரில் வலம் வந்தார். டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக சில போட்டிகளில் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். 2018 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்காக பங்கேற்றார். 13 போட்டிகளில் விளையாடி 300 ரன்களுக்கும் மேலாக விளாசினார். ஆனால் 2019 ஐபிஎல் தொடரில் எதிர்பார விதமாக நிக்கலஸ் பூரான் மற்றும் மந்தீப் சிங் அணியில் சேர்க்கப்பட்டதால் கரூன் நாயர் ஒரேயோரு போட்டியில் மட்டுமே களம் கண்டார்.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்வரும் ஐபிஎல் தொடரில் கரூன் நாயரை அணியில் இணைக்க முயற்சி செய்யும். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை மிடில் ஆர்டரில் வெளிபடுத்த தவறுவதால் கண்டிப்பாக கரூன் நாயரை அந்த இடத்திற்கு கொண்டு வர அந்த அணி நிர்வாகம் முயற்சி செய்யும். கரூன் நாயர் மிடில் ஆர்டரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை உடையவர். டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக பல போட்டிகளில் மிடில் ஆர்டரில் நிலைத்து விளையாடியுள்ளார்.
#3 டேவிட் மில்லர் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
தங்களது ஐபிஎல் வாழ்க்கையை ஒரே அணியில் கழித்துவரும் ஒரு சில வீரர்களில் டேவிட் மில்லரும் ஒருவராவார். இதற்கு காரணம் "கில்லர் மில்லர்" என்றழைக்கப்படும் டேவிட் மில்லர் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்காக அளித்த சில பெரும் பங்களிப்பே ஆகும். கடைநிலையில் தனி ஒருவராக நின்று அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும் திறமை உடையவர் டேவிட் மில்லர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவரது அதிரடி ஆட்டத்திறன் சிறப்பாக வெளிப்படவில்லை.
30 வயதான இவர் கடந்த இரு ஆண்டுகளாக கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்காக 13 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அத்துடன் தனது இடத்தையும் அந்த அணியிலிருந்து தற்போது இழக்கும் தருவாயில் உள்ளார். இவரது ஆட்டத்திறனிற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாய்ப்பளிக்கும் என தெரிகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் பலம் குன்றி காணப்பட்டது. அந்த அணி பேட்டிங்கில் முழுவதுமாக விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸை நம்பியுள்ளது. அவர்கள் ஏதேனும் ஒரு போட்டியில் சொதப்பினால் கூட அணி இரட்டை இலக்கங்களிலேயே சுருண்டு விடுகிறது.
டேவிட் மில்லர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு சரியான வீரராக இருப்பார். கடைநிலையில் இவரது அதிரடி பேட்டிங் சிறப்பாக இருக்கும் என்பதால் விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் சற்று சுதந்திரமாக விளையாடுவர்.
#2 லாக்கி பெர்குஸன் - சென்னை சூப்பர் கிங்ஸ்
2019 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சில வீரர்கள் காயம் காரணமாக விலகினர். அந்த அணியின் டெத் ஓவர் பௌலர் லுங்கி நிகிடி காயம் காரணமாகவும் மற்றும் டேவிட் வில்லி சொந்த பிரச்சினை காரணமாகவும் 2019 ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. இந்த இரு வெளிநாட்டு வீரர்கள் இழப்பால் அந்த அணி சில போட்டிகளில் தடுமாறியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஐபிஎல் சீசனில் செய்த தவறை திருத்திக்கொள்ள முயற்சி செய்தால் கண்டிப்பாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சை வலிமை படுத்தும். இதற்கு சரியான வீரராக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குஸன் இருப்பார்.
பெர்குஸன் 2019 ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் பங்கேற்று ஓவருக்கு 10.76 என்ற மோசமான எகானமி ரேட்டுடன் 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். இருப்பினும் 28வயதான இவர் 2019 உலகக்கோப்பை தொடரில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தினார். நியூசிலாந்து அணிக்காக சிறந்த பௌலிங் பங்களிப்பை அளித்த இவர் 9 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பெர்குஸன் தனது அதிவேக பந்துவீச்சின் மூலம் பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்யும் திறன் உடையவர்.
இவர் ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் தலைமையில் ரைசிங் பூனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் விளையாடியுள்ளார். அத்துடன் நியூசிலாந்தைச் சேர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டிபன் ஃபிளமிங்-ற்கு லாக்கி பெர்குஸனின் வேகப்பந்து வீச்சை பற்றி நன்கு தெரிந்திருக்கும். எனவே அணியில் வாய்ப்பளிக்க அவர் பரிந்துரை செய்ய வாய்ப்புள்ளது.
#1 கார்லோஸ் பிராத்வெய்ட் - கிங்ஸ் XI பஞ்சாப்
கார்லோஸ் பிராத்வெய்ட் ஐபிஎல் தொடரில் தன் பெயர் பதிக்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை இதுவரை வெளிப்படுத்தவில்லை. 2016 டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் பௌலிங்கில் 4 தொடர்சியான சிக்ஸர்களை விளாசி சர்வதேச அளவில் தன் பெயரை பதிவு செய்தார். அதன்பின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இவரது ஆட்டத்திறன் இருந்ததில்லை. மேற்கிந்திய தீவுகளின் டி20 கேப்டனான கார்லோஸ் பிராத் வெய்ட் 16 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று 14ற்கும் குறைவான பேட்டிங் சராசரியை வைத்துள்ளார். அத்துடன் பௌலிங்கிலும் 13 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.
2019 ஐபிஎல் தொடர் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியால் 5 கோடிக்கு பிராத்வெய்ட் ஒப்பந்தம் செய்யப்பட்டார். எதிர்பார விதமாக கிறிஸ் லின், சுனில் நரைன், ஆன்ரிவ் ரஸல் ஆகியோர் அணியில் அசத்தியதால் பிராத்வெய்ட்-டிற்கு 2 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது.
கிங்ஸ் XI பஞ்சாப் அணி 2019 ஐபிஎல் ஏலத்தில் கார்லோஸ் பிராத்வெய்ட்-ஐ தங்களது அணியில் எடுக்க முயற்சி செய்தது. இதற்கு காரணம் அந்த அணியில் ஏற்பட்ட ஆல்-ரவுண்டர் பற்றாக்குறைதான். 2019 ஐபிஎல் தொடரில் சாம் கர்ரான் சிறப்பான பங்களிப்பை அணிக்காக அளித்திருந்தாலும் சீராக வெளிபடுத்த தவறினார். 2020 ஐபிஎல் ஏலத்தில் பிராத்வெய்ட்-ஐ தனது அணியில் இறக்க அந்த அணி நிர்வாகம் முயற்சி செய்யும்.