#2 லாக்கி பெர்குஸன் - சென்னை சூப்பர் கிங்ஸ்
2019 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சில வீரர்கள் காயம் காரணமாக விலகினர். அந்த அணியின் டெத் ஓவர் பௌலர் லுங்கி நிகிடி காயம் காரணமாகவும் மற்றும் டேவிட் வில்லி சொந்த பிரச்சினை காரணமாகவும் 2019 ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. இந்த இரு வெளிநாட்டு வீரர்கள் இழப்பால் அந்த அணி சில போட்டிகளில் தடுமாறியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஐபிஎல் சீசனில் செய்த தவறை திருத்திக்கொள்ள முயற்சி செய்தால் கண்டிப்பாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சை வலிமை படுத்தும். இதற்கு சரியான வீரராக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குஸன் இருப்பார்.
பெர்குஸன் 2019 ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் பங்கேற்று ஓவருக்கு 10.76 என்ற மோசமான எகானமி ரேட்டுடன் 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். இருப்பினும் 28வயதான இவர் 2019 உலகக்கோப்பை தொடரில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தினார். நியூசிலாந்து அணிக்காக சிறந்த பௌலிங் பங்களிப்பை அளித்த இவர் 9 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பெர்குஸன் தனது அதிவேக பந்துவீச்சின் மூலம் பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்யும் திறன் உடையவர்.
இவர் ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் தலைமையில் ரைசிங் பூனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் விளையாடியுள்ளார். அத்துடன் நியூசிலாந்தைச் சேர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டிபன் ஃபிளமிங்-ற்கு லாக்கி பெர்குஸனின் வேகப்பந்து வீச்சை பற்றி நன்கு தெரிந்திருக்கும். எனவே அணியில் வாய்ப்பளிக்க அவர் பரிந்துரை செய்ய வாய்ப்புள்ளது.