இந்தியாவிற்கு பல ஆட்டங்களில் வெற்றியை தேடித்தந்த யுவராஜ் சிங், தற்போது ஓய்வு பெறலாமா? இந்திய அணிக்காக பல சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது அபார திறமையாலும் அர்ப்பணிப்பாலும் பல வெற்றிகளை பெற்று தந்துள்ளார் யுவராஜ் சிங். இவர் மீண்டும் இந்திய அணியில் திரும்புவதற்கான வாய்ப்பு உள்ளதா? வருங்காலங்களில் இவர் என்ன செய்யப் போகிறார் என்பதை பற்றி இந்த தொகுப்பில் விவரமாகக் காண்போம்.
சர்வதேச போட்டிகளில் இந்தியாவின் உந்துசக்தியாக விளங்கியவர், யுவராஜ்சிங். பல ஆண்டுகளாக இந்தியாவின் கிரிக்கெட் நாயகனாக விளங்கி வந்தார். குறிப்பாக 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை மற்றும் 2011 உலக கோப்பை தொடர்களில் தமது அபார பங்களிப்பால் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல உதவினார். ஆனால், தற்போது தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகம் உள்ளது. தனது பதின் பருவத்திலேயே இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று அபார சாதனையை படைத்தவர், இவர். ஆனால், புற்றுநோய் பாதித்தமையால் 2011 உலக கோப்பை தொடரிலேயே களத்தில் ரத்த வாந்தி எடுத்தார். ஒரு ஆண்டு இடைவெளிக்கு பின்னர், புற்றுநோயிலிருந்து மீண்டு பீனிக்ஸ் பறவை போல் எழுந்து வந்தார். இருந்தாலும் இன்றைய காலங்களில் நிரந்தரமாக இந்திய அணியில் இவரால் இடம்பிடிக்க முடியவில்லை.
2014ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பங்கேற்றார். அந்தப் போட்டியில் 21 பந்துகளை சந்தித்து 11 ரன்கள் மட்டுமே குவித்து ரசிகர்களின் பலரது கோபத்திற்கு ஆளானார். இந்தியா அந்த போட்டியில் தோல்வி பெற்றதற்கு இவரது ஆட்டம் முக்கியமான காரணமாக அமைந்தது. அதன் பின்னர், மீண்டும் இவர் சர்வதேச போட்டிகளில் இடம்பிடித்து ஜொலிக்க தவறினார். தொடர்ந்து 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் ஏலங்களில் பெரிய தொகைக்கு ஒப்பந்தம் ஆகி இருந்தாலும் பெரிதாக அவர் சோபிக்கவில்லை. அதன் பின்னர், 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார்.
இவர் அணியை விட்டு வெளியேறும்போது இந்தியாவின் புதிய இளம் வீரர்களான ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், ராகுல், விஜய் சங்கர் மற்றும் பலர் வந்துவிட்டனர். யுவராஜ் சிங்கிற்கு கடும் சவால் விடும் வகையில் இவர்கள் அனைவரின் சமீபத்திய ஆட்டங்கள் அமைந்துள்ளன. இந்திய அணியிலுள்ள இவரது இடம் கேதர் ஜாதவ், விஜய் சங்கர் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரால் நிரப்பப்பட்டுள்ளது. 2019 ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இடம்பெற்று 4 போட்டிகளில் மட்டுமே ஆடும் லெவனில் இடம் பெற்றார். அதன் பின்னர் இவரது இடம் இளம் பேட்ஸ்மேன் இஷான் கிஷனிடம் சென்றது. சொந்த அணியான பஞ்சாப் அணியிலும் சப்மான் கான், அபிஷேக் சர்மா மற்றும் அன்மோல்ப்ரீட் சிங் போன்ற இளம் வீரர்கள் இவரது இடத்தை நிரப்ப காத்திருக்கின்றனர்.
இந்திய தேர்வு குழுவினர் சர்வதேச கிரிக்கெட்டில் யுவராஜ்சிங்கின் நேரம் தற்போது முடிவுக்கு வருவதாகவும் தெளிவாகக் கூறியுள்ளனர். எனவே, யுவராஜ் சிங்கை தனது உத்வேகமாக நினைத்து வரும் பல கோடி ரசிகர்களும் தங்களது மனதை திடமாக்கி கொள்ளவேண்டும். மிகவிரைவிலேயே யுவராஜ் சிங் எனும் சகாப்தம் முடிவுக்கு வரப் போகிறது என்பதே நிதர்சன உண்மை.