கிரிக்கெட்டில் சில நேரங்களில் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் சிறு தவறு கூட ஆட்டத்தின் முடிவையே மாற்றிவிடும். கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கேப்டன் ‘அஸ்வின்’ மைதான உள் வட்டத்துக்குள் 3 பீல்டர்களை மட்டுமே நிறுத்தியதால் கொல்கத்தா வீரர் ‘ரசல்’ ஆட்டமிழந்த பந்து நோ பாலாகி பின்னர் அது பஞ்சாப் அணியின் தோல்விக்கே வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற ஒரு தவறு நேற்று நடைபெற்ற ‘பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்’ மற்றும் ‘மும்பை இந்தியன்ஸ்’ அணிக்கு எதிரான போட்டியிலும் நடந்து, அது பெங்களூர் அணியின் வெற்றி வாய்ப்பை பறித்தது மட்டுமல்லாமல், கேப்டன் ‘விராட் கோலி’யையும் கோபத்துக்கு ஆளாக்கி இருக்கிறது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ‘மும்பை இந்தியன்ஸ்’ அணி ரோகித் சர்மாவின் 48, ‘ஹர்திக் பாண்டியா’வின் கடைசி கட்ட 14 பந்து 32 ரன்களில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய பெங்களூர் அணிக்கு கேப்டன் விராட் கோலி 46 ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்தார். கடைசி கட்டத்தில் நட்சத்திர வீரர் ‘டிவில்லியர்ஸ்’ அதிரடியாக ரன்கள் சேர்க்க ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
19-வது ஓவரை வீசிய ‘பும்ரா’ அந்த ஓவரை அட்டகாசமாக வீச பெங்களூர் அணிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ‘மலிங்கா’ வீசினார். முதல் பந்தில் சிக்ஸர் அடித்து நம்பிக்கை அளித்தார் ‘ஷிவம் டூபே’. அதன் பின்னர் எழுட்சி பெற்ற மலிங்கா அட்டகாசமாக வீச கடைசி பந்தில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அந்த பந்தில் ‘டூபே’வால் சிக்ஸர் அடிக்க முடியவில்லை.
இதன் மூலம் மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில்லிங் வெற்றி பெற்றது. ஆனால் அடுத்துதான் சர்ச்சை எழுந்தது. மைதான ஸ்க்ரீனில் மலிங்கா வீசிய அந்த கடைசி பந்து ‘நோ பால்’ என தெரிந்தது. கள நடுவர் ‘எஸ் ரவி’ இதனை கவனிக்கவில்லை. ஸ்க்ரீனில் இதை பார்த்த பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி கடும் கோபமடைந்தார்.
போட்டி முடிந்த பிறகு ‘கோலி’யிடம் இது பற்றி கேட்கும்பொழுது அவர் கடும் அதிர்ப்தியுடன் பதிலளித்தார். “நாம் ஐபிஎல் போன்ற பெரிய போட்டிகளில் விளையாடி கொண்டிருக்கிறோம். கிளப் போட்டிகளில் அல்ல. போட்டி நடுவர்கள் எப்போதும் தங்கள் கண்களை திறந்து வைத்திருக்க வேண்டும். இந்த ஒரு மோசமான முடிவால் போட்டி முடிவு மாறிவிட்டது”. இவ்வாறு கோலி தெரிவித்தார்.
முன்னதாக ‘பும்ரா’ வீசிய 19-வது ஓவரில் ஒரு பந்தை நடுவர் ‘வைடு’ என அறிவித்தார். அதனால் ரீப்ளேவில் பார்க்கும் பொழுது அது சரியான ஒரு பந்து என்பது தெளிவாக தெரிந்தது. மேலும் மும்பை அணி பேட்டிங் செய்கையில் பெங்களூரு சுழற்பந்து வீச்சாளர் ‘சஹால்’ வீசிய கடைசி பந்தை நடுவர் ‘வைடு’ என அறிவித்தார். ஆனால் அந்த பந்து பேட்ஸ்மேன் பொல்லார்டின் காலில் பட்டது தெளிவாக தெரிந்தது. அந்த மோசமான ஒரு முடிவால் மும்பை அணி ஒரு ரன் இழந்தது மட்டுமல்லாமல் மீண்டும் வீசப்பட்ட அந்த பந்தில் பொல்லார்டின் விக்கெட்டையும் இழந்தது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற அம்பயர் தவறுகள் மீண்டும் நிகழக்கூடாது என ‘விராட் கோலி’யும் ‘ரோகித் சர்மா’வும் வலியுறுத்தியுள்ளனர். இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த விஷயத்தில் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.