அதிரடிக்கு பெயர் போன ஐபிஎல் தொடர் ஆனது, கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 11 வருடமாக, நமது இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும். அதில் தலைசிறந்த அணிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஒன்று. ஐபிஎல் தொடரில் மும்பை அணி, தலை சிறந்த அணி என்று சொல்வதற்கு காரணம் என்னவென்றால், இதுவரை மொத்தம் மூன்று முறை (இந்தாண்டையும் சேர்த்து நான்காவது முறை) ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றுள்ளது.
அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளை குவித்துள்ள அணிகளின் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. மும்பை அணியில் பல அதிரடி வீரர்கள் உள்ளனர். அதில் மிக முக்கியமான அதிரடி வீரர், கீரன் பொல்லார்டு. இவர் பல வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். பேட்டிங் மற்றும் பீல்டிங் ஆகிய இரண்டிலும் அசத்துவார். இவர் தனி ஒருவராக போராடி பல போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். அதில் மறக்க முடியாத இரண்டு போட்டிகளைப் பற்றி இங்கு காண்போம்.
#1) மும்பை இந்தியன்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ( 2013 ஆம் ஆண்டு )
2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிரடியாக விளையாடிய தவான், 59 ரன்கள் விளாசினார். அடுத்து வந்து சிறப்பாக விளையாடிய ஹனுமா விஹாரி, 41 ரன்கள் அடித்தார். இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்களின் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது.
179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர், 38 ரன்கள் அடித்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். அதன் பின்பு வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் விரைவிலேயே தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.
அந்த சூழ்நிலையில் வெற்றி வாய்ப்பு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு அதிகமாக இருந்தது. போட்டியின் இக்கட்டான சூழ்நிலையில் பேட்டிங் செய்ய வந்த கீரன் பொல்லார்டு, தனி ஒருவராக போராடி, தனது அதிரடியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெறச் செய்தார். இந்தப் போட்டியில் பொல்லார்டு 27 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார். இதில் 8 சிக்ஸர்களும், 2 பவுண்டரிகளும் அடங்கும்.
#2) மும்பை இந்தியன்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் ( 2019 ஆம் ஆண்டு )
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், மும்பை அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதியது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி, இறுதி ஓவர் வரை வெளுத்து வாங்கிய ராகுல், 64 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். அவருடன் சேர்ந்து அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெயில் 36 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது.
198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. இந்த கடினமான இலக்கை செஸ் செய்யும் பொழுது, மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்கத்திலேயே முன்னணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை இழந்து விட்டது. பின்பு மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய வந்த பொல்லார்டு, தனி ஒருவராக போராடி தனது அதிரடியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெறச் செய்தார். இந்த போட்டியில் பொல்லார்டு, 31 பந்துகளில் 81 ரன்கள் விளாசினார். அதில் 10 சிக்ஸர்களும் அடங்கும்.