இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் உள்ள எட்டு நகரங்களில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடர் லீக் போட்டிகள் முதல் பாதியை கடந்துள்ள நிலையில் 32வது லீக் போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த இரு அணிகளும் இந்த தொடரில் ஏற்கனவே மோதிய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன் படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்கள் கிறிஸ் கெய்ல் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் களம் இறங்கினர். தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெய்ல் 30 ரன்னில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து வந்த மயான்க் அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். நிலைத்து பொறுமையாக விளையாடினார் கே.எல்.ராகுல். மயான்க் அகர்வால் 26 ரன்னில் ஈஷ் ஜோதி பந்தில் அவுட் ஆக அடுத்து களம் இறங்கிய டேவிட் மில்லர் கே.எல் ராகுல் உடன் இணைந்து அதிரடியாக விளையாடினார்.
கே.எல்.ராகுல் 52 ரன்னில் உனாத்கட் பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். இதை அடுத்து களம் இறங்கிய கேப்டன் அஸ்வின் கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்த நிலையில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்களை அடித்தது.
அதன் பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஜாஸ் பட்லர் மற்றும் ராகுல் திரிபாதி இருவரும் களம் இறங்கினர். வழக்கம் போல் தொடக்கத்தில் அதிரடி காட்டிய பட்லர் 23 ரன்னில் புதிய இளம் வீரர் அர்ஸ்திப் சிங் பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து களம் இறங்கிய சாம்சன் வந்த வேகத்தில் 27 ரன்கள் அடித்து அஸ்வின் பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய ராகுல் திரிபாதி அரைசதம் வீளாசினார்.
ராகுல் திரிபாதி 50 ரன்னில் அஸ்வின் பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். கேப்டன் ரஹானே மட்டும் நிலைத்து விளையாடிய நிலையில் நடுவில் 7 ஓவர்கள் ஒரு பவுண்டரிகள் கூட அடிக்காமல் ராஜஸ்தான் அணி தடுமாறியது. பஞ்சாப் அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். அடுத்து வந்த டர்னர் டக்அவுட் ஆக ராஜஸ்தான் அணி மோசமான நிலைக்கு சென்றது.
ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் கேப்டன் ரஹானே இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆக ராஜஸ்தான் அணி தோல்வியை நோக்கி சென்றது. அடுத்து வந்த பின்னி மட்டும் 3 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகள் அடித்து 33 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ரவிசந்திர அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார்.