ஐபிஎல் தொடரானது வருடத்திற்கு ஒருமுறை என்ற வீதம் தொடர்ந்து 11 வருடமாக, இந்தியாவில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும். ஒவ்வொரு அணியிலும் குறைந்தது ஐந்து பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றிருப்பார்கள். அந்த ஐந்து பேட்ஸ்மேன்களில் ஒரு பேட்ஸ்மேன் நிலைத்து நின்று விளையாடினாலும் அணியின் ஸ்கோர் உயரும். ஆனால் அனைத்து பேட்ஸ்மேன்களுமே சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினால் படுதோல்வி அடைய நேரிடும். அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சில போட்டிகள் ஐபிஎல் தொடரில் நடந்துள்ளது. அந்த போட்டிகளைப் பற்றி இங்கு காண்போம்.
#1) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ( 49 ரன்களில் ஆல் அவுட் )
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கௌதம் கம்பீர் மற்றும் சுனில் நரைன் ஆகிய இருவரும் களமிறங்கினர். பவர் பிளே ஓவர்களில் வெளுத்து வாங்கிய சுனில் நரைன், 17 பந்துகளில் 34 ரன்கள் விளாசினார். கௌதம் கம்பீர், மணிஷ் பாண்டே, ராபின் உத்தப்பா, போன்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் கொல்கத்தா அணி 19 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, வெறும் 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.
132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயில் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் களமிறங்கினர். பெங்களூர் அணியின் முக்கிய வீரரான விராட் கோலி, முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். பெங்களூர் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெயில் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் பெங்களூரு அணி 9 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ,வெறும் 49 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வி அடைந்தது. இதில் சோகமான விஷயம் என்னவென்றால், பெங்களூரு அணியின் எந்த பேட்ஸ்மேனும் 9 ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை என்பது தான்.
#2) ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ( 58 ரன்களில் ஆல் அவுட் )
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. பெங்களூர் அணியின் சார்பில் ராகுல் டிராவிட் மட்டும் அதிரடியாக விளையாடி, 48 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்க்கு 133 ரன்கள் எடுத்தது.
134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அனைத்து பேட்ஸ்மேன்களும் விரைவிலேயே தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக யூசுப் பதானும், ரவீந்திர ஜடேஜாவும் 11 ரன்கள் எடுத்தனர். இறுதியில் 15 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 58 ரன்கள் மட்டுமே அடித்தது. பெங்களூர் அணியில் சிறப்பாக பந்து வீசிய அனில் கும்ப்ளே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.