நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை அணிக்கு முட்டுக்கட்டை போட்டது, ஹைதராபாத் அணி. நேற்றைய ஆட்டத்தில் எம்.எஸ்.தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக, சுரேஷ் ரெய்னா அணியை வழி நடத்தினார். சென்னை அணியின் தோல்விக்கு வித்திட்ட நான்கு காரணங்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.ஒரே ஓவரில் 2 விக்கெட்களை கைப்பற்றிய ரஷித் கான்:
ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் ரஷீத் கான் வீசிய முதல் ஓவரில் 8 ரன்கள் சென்னை அணிக்கு வந்தது. இவர் வீசிய மூன்றாவது ஓவரில் சுரேஷ் ரெய்னா மற்றும் கேதர் ஜாதவ் ஆகிய இரு பெறும் வீரர்கள் தங்களது விக்கெட்டை இழந்தனர். இது சென்னை அணிக்கு மிகப்பெரும் பெரும் அதிர்ச்சியை அளித்தது. மேலும், இவர் வீசிய 4 ஓவர்களில் 2 விக்கெட்களை கைப்பற்றி மொத்தம் 17 ரன்களை அளித்திருந்தார். ஆட்ட நேர முடிவில் சென்னை அணி மிகக்குறைந்த ஸ்கோரான 132 ரன்களை மட்டுமே குவித்தது. அதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.
#2.ரவீந்திர ஜடேஜாவின் மந்தமான இன்னிங்க்ஸ்:
சட்டென சரிந்த விக்கெட்டுகளுக்கு இடைவெளியில் களம்புகுந்தார், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. கடந்த ஆட்டங்களில் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடிய இவர், நேற்றைய ஆட்டத்தில் 20 பந்துகளில் மொத்தம் 10 ரன்களை மட்டுமே குவித்தார். ஒருவேளை கூடுதலாக இவர் 15 லிருந்து 20 ரன்கள் எடுத்திருந்தால் சென்னை அணி ஒரு கௌரவமான ஸ்கோரை எட்டியிருக்கும்.
#3.டேவிட் வார்னரின் வானவேடிக்கை:
இந்த தொடரின் ஆரம்பம் முதலே டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ இணை சரவெடி தாக்குதலை தொடுத்து வருகின்றது. ஹைதராபாத் அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் 25 பந்துகளில் 50 ரன்கள் குவித்து சென்னை அணியின் வெற்றியை பறித்தார். மேலும், இவரே நேற்றைய ஆட்டத்தின் "ஆட்ட நாயகன்" விருதையும் பெற்றார்.
#4.ஜானி பேர்ஸ்டோவின் பொறுப்பான ஆட்டம்:
டேவிட் வார்னரோடு இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஜானி பேர்ஸ்டோ 61 ரன்களோடு கடைசி வரை களத்தில் நின்று அணியின் வெற்றிக்கு உதவினார். வார்னர் அரைசதத்தை கடந்த பின்னர், தனது விக்கெட்டை இழந்து விட்டாலும், தடுமாறி வரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுடன் கைகோர்த்து தங்களது அணி வெற்றி பெற பெரிதும் உதவினார், பேர்ஸ்டோ. மேற்கூறிய நான்கு காரணங்களே சென்னை அணியின் தோல்விக்கு வித்திட்டவையாகும்.