மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் நான்கு நாட்கள் ஓய்வு அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது, மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம். இந்த வீரர்கள் அனைவரும் தங்களது குடும்பங்களுடன் நேரத்தை செலவழிக்கவும் ஐபிஎல் தொடரின் இறுதி கட்ட போட்டிகளில் புத்துணர்ச்சியோடு அணிக்கு திரும்புவதற்காகவும் இந்த ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. உலக கோப்பை தொடர் தொடங்கவிருக்கும் நிலையில் 12வது ஐபிஎல் சீசனில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்களுக்கு ஓய்வு அவசியம் தேவைப்படுகிறது என்று மீண்டும் மீண்டும் வற்புறுத்தி வருகிறார், இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி.
உலக கோப்பை தொடர் போன்ற நீண்டகால தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் வீரர்கள் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் பல்வேறு அணிகளுக்காக விளையாடி வருகின்றனர் . இவற்றில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்காக தலா மூன்று வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சென்னை அணியில் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கேதர் ஜாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள இரண்டாம் பாதி ஆட்டங்கள் மட்டுமல்லாது உலக கோப்பை தொடருக்கும் கருத்திற்கொண்டு மும்பை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படுகிறது.
ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ராவிற்கு மட்டும் ஓய்வு அளிக்கப்படாமல், அணியில் இடம் பெற்று உலக கோப்பை தொடரில் விளையாடப் போகும் மற்ற நாட்டு வீரர்களான குயின்டன் டி காக், லசித் மலிங்கா போன்றோரின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவர்களுக்கும் ஓய்வு அளிக்கப்படுகிறது. வரும் வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் வரை இவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் நேரடியாக சென்னைக்கு சென்று தங்களது குடும்பத்தினருடன் ஓய்வு நேரத்தை கழித்து வருகின்றனர் எனவும் மற்ற இந்திய வீரர்கள் அனைவரும் தங்களது வீட்டிற்கு சென்று உள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி, "ஐபிஎல் தொடர்களில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் தொடரில் விளையாடும் அளவிற்கு தங்களது பணிச்சுமையை குறைத்துக் கொண்டு ஓய்வையும் அவ்வப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தி இருக்கிறார். இந்த இரு மாதங்கள் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கு இந்திய அணியினர் அனைவருக்கும் நிச்சயம் முழு தகுதி உண்டு. ஆனால், இந்த நீண்ட நாள் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் அந்தந்த ஐபிஎல் அணிகளின் நிர்வாகத்திடம் தெரிவித்து அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். இதன் மூலம், தங்களது பணிச்சுமையை குறைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். வருடந்தோறும் ஐபிஎல் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் நான்காண்டுகளுக்கு ஒருமுறை தான் உலக கோப்பை தொடர் வருகிறது. ஆகையால், இந்திய அணி வீரர்கள் அனைவரும் உலக கோப்பை தொடரின் ஒரு அங்கமாக இருக்க விரும்புவதாக கூறியுள்ளார், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.
இதனை உரைக்கும் விதமாக மும்பை அணியின் நிர்வாகம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக கோப்பை தொடரை கருத்தில் கொண்டு தங்களது அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் நான்கு நாட்கள் தொடர் ஓய்வு அளிக்கின்றது.