12வது சீசன் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இன்று மும்பையில் நடக்கும் லீக் போட்டியில் பரம எதிரிகளான மும்பை இந்தியன்ஸும் சென்னை சூப்பர் கிங்ஸும் மோதுகின்றன. சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா பாகிஸ்தான் மோதல் போன்று இதை ரசிகர்கள் சித்தரிக்கின்றனர். மேலும் இந்த மோதலை ஐபிஎல்லின் எல் கிளாசிக்கோ எனவும் ரசிகர்களால் வர்ணிக்கப்படுகிறது. இந்த இரண்டு அணிகளின் ரசிகர் பட்டாளம் மிகவும் பெரியது ஆகும். அதனால் தான் இந்த மோதல் எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
எல்லா சீசனைப் போலவும் இந்த சீசனிலும் இந்த மோதல் மற்ற போட்டிகளை பின்னுக்கு தள்ளி முதலிடம் பெறுகிறது. இந்த போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. ரசிகர்களுக்கு இந்த போட்டி பெரிய விருந்தாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த இரண்டு அணிகளும் கடந்த காலங்களில் நிறைய முறை மல்லுக்கட்டி உள்ளன. அந்த போட்டிகளில் இறுதி போட்டிகள், பிளே ஆப் போட்டிகள் உள்ளிட்டவையும் அடங்கும். அந்த போட்டிகள் இன்றும் நினைவுகூறத்தக்க வகையில் அமைந்துள்ளதே அதற்கு சாட்சியாகும். இந்த மோதல்களுக்கு அப்பாற்பட்டு பார்த்தால் இந்த இரண்டு அணிகளுமே ஐபிஎல்லின் சிறந்த அணிகள் என்று சொல்லக்கூடிய வகையில் இவ்விரு அணிகளின் சாதனைகள் அமைந்துள்ளன.
இவ்விரு அணிகளுமே ஐபிஎல் கோப்பையை தலா 3 முறை வென்றுள்ளன. இந்த இரண்டு அணிகளும் ஐபிஎல்லில் மொத்தமாக 24 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் மும்பை அணியின் கையே சற்று ஓங்கி உள்ளது. அந்த அணி 14 முறையும், சென்னை அணி 12 முறையும் வென்றுள்ளன. மும்பை அணி இறுதிப் போட்டிகளில் இரண்டு முறையும் சென்னை அணி ஒரு முறையும் வென்றுள்ளன. சென்னை அணியை ஐபிஎல்லில் முழுமையாக ஆதிக்கம் செலுத்த விடாமல் செய்ததில் மும்பை அணிக்கு பெரும் பங்கு வகிக்கிறது. சென்னை அணிக்கு எப்போதும் குடைச்சல் கொடுத்து வருகிறது மும்பை அணி. முக்கியமான போட்டிகளில் சென்னை அணியை வீழ்த்தியதே அதற்கு முழுமுதல் காரணம் ஆகும். இந்த இரண்டு அணிகளின் வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் இந்த இரண்டு அணிகளின் மோதலில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களின் கனவு அணி பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
சனத் ஜெயசூர்யா, மேத்யூ ஹெய்டன், சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் தோனி (C) (WK), டுவைன் ஸ்மித், டுவைன் பிராவோ, கீரான் பொல்லார்ட், ஹர்பஜன் சிங், ஆஷிஷ் நெஹ்ரா, மோகித் ஷர்மா.
இதில் சுவாரசியமான தகவல் என்னவென்றால் டுவைன் ஸ்மித், டுவைன் பிராவோ, ஹர்பஜன் சிங் ஆகியோர் சென்னை மும்பை ஆகிய இரண்டு அணிகளுக்கும் ஆடியுள்ளனர். இவர்கள் தவிர அம்பத்தி ராயுடு, மேக்கேல் ஹசி ஆகியோரும் இரண்டு அணிகளின் சார்பாக விளையாடி உள்ளனர். தற்போது ராயுடு, பிராவோ, ஹர்பஜன் சிங் ஆகியோர் சென்னை அணியில் இடம் பெற்றுள்ளனர். இன்று நடக்கும் போட்டியில் சென்னை அணி கண்டிப்பாக மும்பையை லேசில் எடுத்துக் கொள்ளாது என்று தெரிகிறது. மும்பை அணி எவ்வளவு மோசமான பார்மில் இருந்தாலும் சென்னை அணியை வீழ்த்த தவறியதில்லை.