சென்னை அணியை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு தகுதியானது மும்பை இன்டியன்ஸ் 

Pravin
சூரியகுமார் யாதவ்
சூரியகுமார் யாதவ்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனின் 56 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் பிளே-ஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இன்டியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் ஆகிய நான்கு அணிகள் தகுதியடைந்தது. இந்த சீசனின் முதல் குவாலிஃபையர் போட்டி சென்னை M.A சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்த மும்பை இன்டியன்ஸ் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த சீசனில் இந்த இரு அணிகள் மோதிய இரண்டு போட்டிகளிலுமே மும்பை இன்டியன்ஸ் அணி தான் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இந்த போட்டியின் மீது அதிகம் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய சென்னை அணியில் தொடக்க வீரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் பாப் டுப் பிளஸிஸ் இருவரும் வழக்கம் போல் தடுமாற்றத்துடன் விளையாடினர். மும்பை அணியின் பந்து வீச்சில் திணறிய பாப் டுப் பிளஸிஸ் 6 ரன்னில் ராகுல் சஹார் பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா அடுத்த ஓவரிலேயே 5 ரன்னில் ஜெயந்த் யாதவ் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து வாட்சன் 10 ரன்னில் க்ருநால் பாண்டியா பந்தில் அவுட் ஆகினார்.

ராகுல் சஹார்
ராகுல் சஹார்

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த முரளி விஜய் மற்றும் அம்பத்தி ராய்டு இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினாலும் முரளி விஜய் 26 ரன்னில் ராகுல் சஹார் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் மகேந்திர சிங் தோனி பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்தினார். கடைசி ஓவர்கள் வரை மும்பை அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 131-4 ரன்கள் மட்டுமே அடித்தது.

இஷான் கிஷன்
இஷான் கிஷன்

அதன் பின்னர் விளையாடி மும்பை அணியில் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ரோஹித் சர்மா வந்த வேகத்தில் 4 ரன்னில் தீபக் சஹார் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து அவரை தொடர்ந்து குயிடன் டி காக் 8 ரன்னில் ஹர்பஜன் சிங் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த சூரியகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். பவுண்டரிகளை தெறிக்கவிட்ட இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டிற்கு 80 ரன்கள் சேர்த்தது.

இம்ரான் தாஹிர்
இம்ரான் தாஹிர்

இஷான் கிஷன் 28 ரன்னில் தாஹிர் பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த க்ருநாள் பாண்டியா டக் அவுட் ஆகி வெளியேறினார். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய சூரியகுமார் யாதவ் 71 ரன்கள் குவிக்க மும்பை அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி இறுதிபோட்டிக்கு தகுதியானது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links